துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?

ஆக்கம் : சபீர் அலி misc

எதிரிகளால் கொடியவர்களா முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள்.

அது தான் குனூத் நாஸிலா ஓதுதல்

குனூத் நாஸிலா

தற்போது சிலர், சிரியா மக்களுக்காக நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நோன்பு வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள ஆக்கத்தில் காணலாம்.

நஃபிலான (உபரியான) வணக்க வழிபாடுகள் புரிந்து இறைவனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அதற்கு அவனிடம் ஒரு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்:

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

நூல் : புகாரி 6502

உபரியான தொழுகை, நோன்பு உட்பட எந்த வணக்கமாயினும் அதைச் செய்துவிட்டு நமது பிரார்த்தனைகளை செய்கிற போது அல்லாஹ் அதை நிறைவேற்றித் தருவான்.

தனிப்பட்ட முறையில் ஒருவர் நோன்பு நோற்றுவிட்டு, தொழுது விட்டு சிரியா மக்களுக்காக துஆ செய்யலாம். இந்த நாளில் இதை அனைவரும் செய்ய வேண்டும் சொன்னால் அனைவருக்கும் ஒன்றை வழிமுறையாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே உண்டு என்பதால் இது பித்அத் ஆகிவிடும்.

உபரியான வணக்கத்தை யாரோ ஒருவர் நிர்ணயம் செய்த குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் அது நன்மையாக ஆகாது பித்அத்தாகி விடும்.

இங்கேதான் நஃபிலுக்கும், பித்அத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும், வாய்ப்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும்.

யாரோ ஒருவர் நிர்ணயம் செய்த நேரத்திலும், அளவிலும் மற்றவர்களும் செய்வது பித்அத் ஆகும்.

ஒருவர் தனக்கு விருப்பமான நாளில், நேரத்தில் குறிப்பிட்ட ரக்அத்கள் தொழுதால் அது நஃபில் ஆகும். அனைவரும் குறிப்பிட்ட நாளில் 20 ரக்அத் அல்லது குறிப்பிட்ட ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது பித்அத் ஆகிவிடும்.

ஒருவர் தானாக விரும்பிச் செய்யாமல் மற்றவர் தீர்மானித்ததைப் பின்பற்றும் போது அல்லாஹ்வின் தூதருக்கு கொடுத்த இடம் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவதால் அது பித்அத் ஆகிவிடுகிறது.

அதாவது மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்றை வணக்கம் என்று சொன்னாலும் அது பித்அத் ஆகும்.

மார்க்கத்தில் சொல்லப்பட்ட வணக்கத்தின் அளவையும், நேரத்தையும் ஒருவர் தீர்மானித்து மற்றவர் மீது தினிப்பதும் பித்அத் ஆகும்.

உதாரணமாக ஒருவர் ஒரு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இரண்டு ரக்அத்களை தானாக விரும்பித் தொழ எண்ணுகிறார். அவ்வாறே தொழுகிறார். இது நஃபிலாகும்.

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு 4 ரக்அத் தொழுவது நல்லது என்று பிரச்சாரம் செய்யப்பட்டால், அல்லது யாரும் பிரச்சாரம் செய்யாமலே அந்தக் கருத்து மக்களிடம் நிலைபெற்று விட்டால் அது பித்அத் ஆகும்.

ஏனெனில் அனைவரும் ஒன்றைச் செய்வது நல்லது என்று தீர்மானம் செய்வது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உள்ள அதிகாரமாகும்.

அதை மற்றவர்களுக்குக் கொடுத்தாலோ ,அல்லது மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலோ அது பித்அத் ஆகிவிடுகிறது.

உபரியான வணக்கத்துக்கு அனுமதி அளிக்கும் பின்வரும் ஹதீஸில் நீயாக விரும்பிச் செய்தால் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பதில் இருந்து இதை அறியலாம்

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும், இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள்.

அவர்இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிரஎன்றார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 46

இந்நிலையில் சிரியா மக்களுக்காக குறிப்பிட்ட இந்த நாளில் நாம் அனைவரும் நோன்பு நோற்போம் என்றால் இது நஃபில் என்ற வகையில் அமையவில்லை. மாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் நிர்ணயிக்காத போது யாரோ ஒருவர் குறிப்பிட்ட தினத்தில் நோன்பு நோற்போம் என்றால் அதைக் கடைபிடிப்பது பித்அத்தாகும்.

ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸாயி 456

எனவே அல்லல்படும் முஸ்லிம்களுக்காக மனவேதனைப்படும் முஸ்லிம்கள் மார்க்கம் காட்டிய அடிப்படையிலேயே தம் மனவேதனையை வெளிப்படுத்த வேண்டும்.

நரகத்தில் தள்ளும் காரியத்தை நன்மை தானே எனக்கருதி முஸ்லிம்கள் செய்வதை விட்டும் விலகி நிற்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed