துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது

இவ்வசனங்களில் (2:124, 2:155, 2:249, 3:152, 3:154, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, 7:168, 9:126, 11:7, 16:92, 18:7, 20:40, 20:85, 20:90, 20:131, 21:35, 21:111, 22:11, 23:30, 25:20, 27:40, 27:47, 29:3, 33:11, 38:24, 38:34, 39:49, 44:17, 44:33, 47:4, 47:31, 54:27, 60:5, 64:15, 67:2, 68:17, 72:17, 74:31, 76:2, 89:15, 89:16) உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பாக்கியங்களும், சிரமங்களும் ஒரு பரீட்சை என்று கூறப்படுகிறது.

இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கு இதன் மூலம் தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

கெட்டவர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்வதையும், சில நல்லவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கும்போது கடவுள் என்று ஒருவன் இருந்தால் இப்படி நடக்குமா என்ற குழப்பம் சிலருக்கு உள்ளது.

எவ்விதப் பாவமும் செய்யாதவர்கள் பிறக்கும் போதே பல்வேறு ஊனங்களுடன் பிறக்கின்றனர். ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு ஏன் இந்த நிலை என்ற குழப்பம் சிலருக்கு உள்ளது.

இஸ்லாம் இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளது.

மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்கிறான் என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான்.

மனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான். அப்போதுதான் மனிதன் தனது நல்லறங்களுக்கான பரிசுகளைப் பெறுவான். கெட்டவன் தனது கெட்ட செயல்களுக்கான தண்டனைகளையும் பெறுவான்.

இவ்வுலகம் பரீட்சைக் கூடமாக உள்ளதால் இங்கு கெட்டவர்கள் சிலர் நல்வாழ்வு வாழ்வதையும், நல்லவர்கள் சிலர் சிரமப்படுவதையும் கண்டு ஏமாந்துவிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

ஏனெனில் எல்லா மனிதர்களையும் அல்லாஹ் சோதிக்கிறான். அனைவரையும் ஒரே மாதிரியாகச் சோதிக்காமல் பல்வேறு வகைகளில் சோதிக்கிறான்.

நூறு சதவிதம் ஒருவருக்கு இன்பங்களை வாரிவழங்கி ஒரு சதவிகிதம் கூட அவருக்குத் துன்பம் இல்லாமல் இருந்தால் அப்போது தான் மேற்கண்ட குழப்பங்கள் ஏற்படுவதில் பொருளிருக்கும்.

ஆனால் எந்த மனிதனுக்கும் அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கவே இல்லை. ஒரு துன்பம் கூட இல்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை.

எந்தப் பாக்கியம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அவரை நாம் உற்று நோக்கினால் அவருக்குக் கொடுக்கப்படாத பல பாக்கியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

வறுமை, நோய், அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப்பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத்துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, படிப்பறிவு இல்லாமை இப்படி ஆயிரமாயிரம் குறைகள் மனிதர்களுக்கு உள்ளன.

ஒருவருக்கு இறைவன் வறுமையையும், நோயையும் கொடுத்திருக்கலாம்.

ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும். அவருக்குப் பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்.

இன்பங்களைக் கொடுத்தாலும் அப்போது மனிதன் எப்படி நடந்து கொள்கிறான் என்று பரீட்சிப்பது தான் இறைவனின் நோக்கம். துன்பங்களைக் கொடுத்தாலும் அதுவும் பரீட்சைதான்.

சோதிக்கும் வகையில் நமக்கு அதிகமான கஷ்டத்தை அல்லாஹ் கொடுக்கும்போது அதைச் சகித்துக் கொண்டால் நாம் பட்ட கஷ்டங்களுக்கான பலனை மறுமையில் குறைவின்றி அல்லாஹ் வழங்குவான். நல்லவனாக வாழ்வதால் நமக்கு இழப்பு ஏதும் இல்லை; மறுமையில் நமக்கு மாபெரும் பரிசுகள் காத்துக் கிடக்கின்றன என்று நம்பும்போது நல்லவனாக வாழ்வதற்கான உறுதி அதிகரிக்கும்.

இந்த உலகில் நல்லவனாக வாழும்போது சிரமங்கள் ஏற்பட்டால் நல்லவனாக வாழ்ந்ததற்கான பரிசை இன்னொரு உலகத்தில் நாம் பெறப்போகிறோம். இவ்வுலகத்தில் சொகுசாக வாழ்வதற்காக நெறிமுறைகளை மீறினால் அதற்கான தண்டனையை நாம் இன்னொரு உலகத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை நம்மைத் தடம் புரளாமல் காப்பாற்றும்.

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான அறிவுரைகளைக் கூறியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதனைக்கு உள்ளாக்குகின்றான். (புகாரி 5645)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி 5642)

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (நூல் : புகாரி 5652)

ஒரு முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போல் துன்பங்களைச் சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு இந்த நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (நூல் : புகாரி 5653)

இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண்ணிருப்பதால்தான் அதிகம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம்; அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானவையாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் கண்கள்தான்.

இவ்வளவு பெரிய பாக்கியம் மற்றவர்களுக்கு இருப்பது போல் நமக்கு இல்லாமல் போய் விட்டால் நாம் அடையும் துன்பம் கொஞ்சமல்ல. கண்களை இழந்து விட்டாலும் அதனைச் சகித்துக் கொண்டு ஒழுங்காக வாழ்ந்தால் அதற்காக இறைவன் சொர்க்கத்தைத் தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.

(நூல் : முஸ்லிம் 5726)

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)

சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி 2322

இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால் இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. நமக்குச் சில குறைகள் இருப்பது போல் மற்றவர்களுக்கும் வேறு குறைகள் உள்ளன. நமக்கு மற்றவர்களை விட அதிகமான குறைகள் இருப்பதாக நமக்குத் தோன்றினால் அதற்காகவும் மறுமையில் பரிசுகள் உள்ளன என்ற நம்பிக்கை நமக்கு மனஅமைதி அளிக்கும்.

மேலும் இன்னொரு காரணத்தினாலும் மனிதர்களுக்கு இறைவன் குறைகளை வைத்துள்ளான். இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் உணவின்றி செத்து விடுவோம்.

இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான்.

நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed