துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன?

கைகளை உயர்த்துவதாக இருந்தால், தோல்களுக்கு நேராக உயர்த்துவது, உள்ளங் கைகளை வானத்தை நோக்கி வைப்பது அதன் முறையாகும்.

கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்து விட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

புகாரி (932)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்கப்படி)” “ஸபஃனா, ஸபஃனா’

நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறி விட்டோம்” என்று சொல்லலானார்கள். உடனே காத் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார்.

ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன்.

இறுதியில், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை சொன்னார்கள்.

புகாரி (4339)

பிரார்த்தனையின் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. இனி கைகளை உயர்த்தும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். கைகளை இரு தோல்பட்டைகளுக்கு நேராக இருக்குமாறு வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

உனது கைகளை உனது தோல்களுக்கு நேராக உயர்த்துவது பிரார்த்தனையின் ஒழுங்காகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (1274)

உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது உங்களது உள்ளங்கைகளை கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்களது கைகளின் மேற்புறத்தைக் கொண்டு அவனிடம் வேண்டாதீர்கள்.

இதை மாலிக் பின் யசார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவுத் (1271)

பிரார்த்தனையின் போது கைகளை அக்குள் தெரிகின்ற அளவிற்கு நன்கு உயர்த்துவதற்கும் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் “இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது;

இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே!

என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த “ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.

பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

புகாரி (2597)

அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்.

பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி,

“இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!

மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன்.

புகாரி (6383)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளை அக்குள் தெரிகின்ற அளவுக்கு உயர்த்தி பிரார்த்தனை செய்தது சில நேரங்களில் தான். அதிகமான நேரங்களில் தோல்பட்டைக்கு நேராக வைத்தே பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்த மாட்டார்கள் (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தமது அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள்.

புகாரி (1031)

நபியவர்கள் கற்றுக் கொடுத்த முறைகளில் எதைக் கடைப்பிடித்தாலும் சரிதான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed