தீமையைத் தடுக்காத சமுதாயம்

முன்சென்ற சமுதாயத்தாரிடம் இருந்த மோசமான பண்புகளை அல்லாஹ் திருமறையில் அடையாளம் காட்டியுள்ளான். அவ்வகையில், பனூ இஸ்ராயீல் கூட்டத்தார் சமுதாயத்தில் அரங்கேறும் கெட்ட செயல்களைத் தடுக்காமல் இருந்தார்கள் என்பதை அறியலாம். ஆதலால், நேர்வழியில் நிலைத்திருக்க விரும்பும் நாம் வழிகேடுகளைத் தகர்க்கும் விஷயத்தில் அவர்களைப் போன்று பொடும்போக்குத்தனமாக இருந்து விடக் கூடாது. அப்போதுதான் அல்லாஹ்விடம் சிறந்தவர்கள் எனும் தகுதியைப் பெற இயலும்.

தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 5:78,79

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

திருக்குர்ஆன் 3:110

தீமையை தடுக்காததும் குற்றமே!

மார்க்கம் தடுக்கும் காரியங்களை செய்வதும் குற்றம். அவற்றை மற்றவர்கள் செய்யும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் குற்றம். இதைக் கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஊராருடைய வரலாறு நமக்கு விளக்குகிறது. அவர்களை அல்லாஹ் சோதித்த போது வரம்பு மீறியவர்களும், அவர்களைத் தடுக்காமல் சுயநலமாக இருந்தோரும் தண்டிக்கப்பட்டார்கள். தாங்களும் கட்டுப்பட்டு பிறரையும் கட்டுப்படுமாறு கூறிய மக்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?’’ என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)’’ எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!’’ என்று அவர்களுக்குக் கூறினோம்.

திருக்குர்ஆன் 7: 163-166

அனைவரும் தவறு என்று ஒத்துக் கொள்கிற விஷயத்தைப் பற்றி பேசுவோமே தவிர, சரியென நினைத்து காலங்காலமாகச் செய்யும் தவறுகளைக் குறித்து மூச்சுவிட மாட்டோம் என்கின்றனர் சிலர். நல்லவற்றை ஆதரித்துப் பேசுவோமே தவிர தப்புகளை பற்றி வாய்திறக்கவே மாட்டோம் என்று மழுப்புகின்றனர். இவ்வாறு தட்டுத்தடுமாறும் ஆட்களுக்குரிய தக்க பாடம் மேலுள்ள சம்பவத்தில் உள்ளது.

தீமை பெருகிவிட்டால் பாதிப்பு

எவரும் எதையும் செய்யட்டும் என்று நல்லவர்கள் அலட்சியமாக இருப்பது முறையல்ல. சமூகத்தில் ஹராமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும். இதைச் சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் நபியவர்கள் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.  (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).  அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) “நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்‘ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 2493

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது’ என்று தம் கட்டை விரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

நூல்: புகாரி 3346, 3598

இன்று இந்த எச்சரிக்கையை உலகமே உணர்ந்து கொண்டிருக்கிறது. வரதட்சணை கலச்சாரம் தலை விரித்தாடுவதால் மார்க்க ஒழுக்கம் பேணும் பெண்களின் திருமணமும் தடைபடுவதைப் பார்க்கிறோம். வட்டியோடு கலந்த கொடுக்கல் வாங்கல் அதிகமானதால் விலைவாசி உயர்வு உட்பட ஏராளமான சிரமங்களை அனைவரும் சந்திக்கிறோம். எனவே எந்தவொரு சீர்கேட்டையும் கண்டு கண்ணை மூடிக் கொள்ளாமல் அவற்றை அடக்கி ஒடுக்கத் தயாராகுங்கள்; துணிந்து எழுங்கள்.

தீமையைத் தடுப்பதும் தர்மமே!

சமூகக் கேடுகளைத் துடைத்தெறியப் பாடுபடுவதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? நல்லதைச் சொல்வதற்கு மட்டுமல்ல, சமூகக் கொடுமைகளைக் கண்டிப்பதற்கும் தடுப்பதற்கும் அல்லாஹ் நன்மைகளை அள்ளித் தருவான். இந்தப் பணியும் தர்மமாகப் பதிவு செய்யப்படும்.

‘‘உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1302)

இயன்றளவு தீமைகளைத் தடுப்போம்

தீமையைத் தடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. தமது அதிகாரம் மற்றும் பொறுப்புக்குக் கீழ் இருப்பவர்களிடம் உரிமை கிடைப்பது போன்று மற்றவர்களிடம் கிடைக்காது. எனவே நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் முடிந்தளவு தீமையைத் தடுக்க முயல வேண்டும். அதன் மூலம் நமது ஈமான் வலுப்பெறும்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 78

அல்லாஹ்வின் உதவியால் நமது நாட்டில் இருக்கும் பேச்சுரிமையைப் பயன்படுத்தி நமது தவ்ஹீத் ஜமாஅத் இப்பணியை சிறப்பாகச் செய்து வருகிறது. இஸ்லாத்தின் தனித்துவமான தன்மையை எட்டுத் திக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

மறுமை வெற்றிக்கான வழி

தலைவிரித்தாடும் தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் எதிர்ப்பு வரும்; சங்கடங்கள் ஏற்படும் என்றெல்லாம் சிலர் தயங்குகிறார்கள். ஊர்நீக்கம் செய்யப்படுவோம்; தனிமைப்படுத்தப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள். இப்படியெல்லாம் நினைத்து மறுமை வெற்றிக்கான வழியைப் புறக்கணித்து விடாதீர்கள்; அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள். சோதனைகளைக் கடந்து தளர்ந்து விடாமல் இப்பணியைச் செய்யும் போதுதான் நாம் முழுமையான வெற்றியைப் பெற இயலும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 3:104

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 13:22

பிறமத சகோதர்களிடம் அழைப்புப் பணி செய்வோம்; ஆனால், முஸ்லிம்கள் செய்யும் தீமைகள் பற்றி வாய்திறக்கவே மாட்டோம் என்ற எண்ணம் சிலரிடம் மிகைத்து இருக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கச் சட்டங்களைக் குறித்து பேசுவதும் அதற்கு நேரத்தை ஒதுக்குவதும் அற்பமானதாகக் கருதுகிறார்கள். இத்தகைய கருத்துக்கள் அபத்தமானவை. அழைப்புப் பணிக்கு ஆபத்தான இத்தகு எண்ணங்களை துடைத்தெறிவது கட்டாயம்.

தீமையைத் தடுக்க தூண்டுங்கள்

சமூகத் தீமைகளைத் தடுக்கும் பணியைச் செய்யுமாறு நாம் பிற மக்களையும் தூண்ட வேண்டும். அதன் அவசியம், சிறப்பு குறித்து அவர்களுக்கு அதிகம் ஆர்வமூட்ட வேண்டும்.

குடும்பத்தாரோ அல்லது நெருக்கமானவர்களோ அழைப்புப் பணியாற்றும் போது, ‘‘அடுத்தவரைப் பற்றி உனக்கென்ன கவலை? உன் வேலையைப் பார்” என்று முட்டுக்கட்டைப் போடும் மக்களே! சத்தியப் பணிக்குத் தடைக்கற்களாக இல்லாமல் ஊக்கம் தந்து உறுதுணையாக இருங்கள். லுக்மான் (அலை) அவர்கள் தமது மகனுக்கு கூறிய அறிவுரையில் பாடம் பெறுங்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

திருக்குர்ஆன்  31:17

நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 46

நபிகளாரின் அறிவுரைக்கும், வழிமுறைக்கும் முரணாகப் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக் கிறார்கள். மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக நடுநிலை, ஒற்றுமை எனும் பெயரில் ஒளிந்து கொண்டு இப்பணிக்குப் பெரும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அரசியல், பதவி போன்ற உலக ஆதாயங்களுக்காக ஷிர்க், பித்அத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகிறார்கள்.

சமூகத் தீமைகளைச் சுட்டிக் காட்டும் ஏகத்துவ சகோதரர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்; அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; தவறாகச் சித்தரிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் இனியாவது அல்லாஹ்விற்கு அஞ்சி தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்.

கொள்கைச் சொந்தங்களே! நாம் மக்கள் திருப்தியை மனதில் கொண்டு அழைப்புப் பணியை மேம்போக்காக, பெயரளவுக்குச் செய்யாமல் படைத்தவனின் திருப்திக்காக வீரியத்தோடும் விவேகத்தோடும் செய்வோமாக! நன்மையை ஏவி தீமையைத் தடுத்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *