திருமணம் கட்டாயமா? மணமுடிக்க உரிய சக்தி எது?

திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 32)

 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்:

நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் “இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5066)

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்”என்றார்.

இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார்.

மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள்.

திருமணம் செய்வது நபி (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும்.

 

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும்,மக்களையும் ஏற்படுத்தினோம்.

அல்குர்ஆன் (13 : 38)

திருமணம் செய்ய சக்தி இருந்தும் அதை செய்து கொள்ளாதவன் துறவறத்தை மேற்கொள்பவனாவான். இவனால் ஒழுக்கமாக வாழ முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த துறவறத்தை நபி (ஸல்) அவர்களும் தடைசெய்தார்கள்.

 

தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

அல்குர்ஆன் (57 : 27)

 

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

நூல்: புகாரி (5073)

எனவே திருமணம் என்பது நாம் ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டிய கடமையாகும்.

 

நஸாயீ கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் உங்களில் வசதி படைத்தவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் திருமணம் முடிக்க இயலாதவர்கள் நோன்பு நோற்கட்டும், ஏனென்றால் அது அவருடைய ஆசையை கட்டுப்படுத்தும் என்று ஹதீஸில் கூறப்படுகிறது.

அதாவது திருமணம் முடிக்க இயலாத போது பாலுணர்வை அடக்க நோன்பு வைக்க வேண்டும்.  ஹதீஸில் சொல்லப்படும் திருமணத்துக்கான சக்தி என்பதற்கு ”பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியான தகுதி ஆகிய இரண்டும் அடங்கும்”.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறு நோன்பு நோற்பது உங்களது இச்சையைகட்டுப்படுத்தும்” என்று கூறிக் காட்டியுள்ளார்கள்.

”இச்சையைக் கட்டுப்படுத்தும்” என்கின்ற வார்த்தை பிரயோகத்திலிருந்தே, உடலுறவு கொள்ள சக்தி பெற்றவர்கள் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற கட்டளையும் மறைமுகமாக அதில் அடங்கிவிடுகின்றது.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30:21)

மேற்கண்ட வசனத்திலும் அமைதி பெற துணைகளை ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறிக்காட்டுகின்றான். உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் பரிமாரிக்கொள்ளவில்லை என்றால் அமைதியில்லாத வாழ்க்கையாக அது மாறிவிடும். இதனால் திருமணத்தின் நோக்கமே சிதைந்து விடுகின்றது. இந்தவசனத்தின் அடிப்படையிலும் உடல்ரீதியான தகுதி இன்றியமையாததாக ஆகிவிடுகின்றது.

திருமணம் என்பதே ஒரு கடுமையான உடன்படிக்கை என்று இஸ்லாம் சொல்லிக்காட்டுகின்றது. உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் இருவருக்கும் வழங்கிக்கொள்வோம் என்பதும் இந்த உடன்படிக்கையில் பிரதானமாகும். அப்படி இருக்கையில், உடல்ரீதியான தகுதி தனக்கு இல்லை என்று ஒரு ஆண் தனக்கு தெரிந்த நிலையிலும், அதை மறைத்து ஒரு பெண்ணை மணம் முடிப்பானேயானால்  அது மிகப்பெரிய நம்பிக்கை மோசடியாக கருதப்படும். மேற்கண்ட காரணங்களாலும் திருமணத்திற்குரிய சக்தி என்பதில் அதற்கு தேவையான பொருளாதாரம் மற்றும் உடற்கூறு ரீதியான இரண்டு தகுதிகளையும் தான் நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டியுள்ளார்கள் என்பதை சந்தேகமற விளங்கிக்கொள்ளலம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed