இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன.
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், அரபுமொழி விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்.
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இறைவேதம் எனக் கொண்டுவந்தார்களோ அது அன்றைய விற்பன்னர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.
(திருக்குர்ஆன் எவ்வாறு இறைவேதமாக அமைந்துள்ளது என்பதை முன்னுரையில் ‘இது இறைவேதம்’ என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)
எனவே “இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இதுபோல் தயாரித்துக் காட்டுங்கள்!” என்று திருக்குர்ஆன் மூலம் அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை.
திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.