திருக்குர்ஆன் கூறும் பொருளாதாரத் திட்டம்

மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும்.

வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் கொள்வதாகும்.

இன்று ஏழை முதல் பணக்காரன் வரை, பாமரன் முதல் படித்தவன் வரை தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பது இந்த வட்டி எனும் பெரும் பாவத்தில் தான். வட்டியின் காரணமாக தனது பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தி விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெற்றோரைப் பார்க்கிறோம்.

உலக அளவிலும் ஏழை நாடுகள் மீது பணக்கார நாடுகள் ஏகாதிபத்தியம் செலுத்துவதற்கு அந்நாடுகள் வாங்கும் கடனும், அதற்கான வட்டியுமே காரணமாக அமைந்துள்ளது. வட்டியை இஸ்லாம் பெரும்பாவங்களில் ஒன்றாக அறிவிப்பதோடு அதை முற்றும் முழுவதுமாகத் தடை செய்கிறது. இதன் மூலம் இந்த உலகத்திற்குத் திருக்குர்ஆன் ஒரு மாபெரும் பொருளாதாரத் திட்டத்தை வழங்குகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

(அல்குர்ஆன்:2:278,279)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். 

(அல்குர்ஆன்:2:275.)

“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்’’ என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-2766

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும்,  அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்-3258

இவ்வாறெல்லாம் மறுமை வாழ்வை கைசேதத்திற்கு உள்ளாக்கும் பெரும்பாவமான வட்டியை இன்றைக்கு இஸ்லாமிய சமூகம் சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறது. ஏழ்மை என்ற காரணம் எங்களை வட்டியை நோக்கி வீழ்த்துகிறது என்பது வட்டிக்கு வாங்குபவர்களின் உள்ளத்தில் புகுத்தப்பட்ட எண்ணம். உண்மையில், ஏழ்மை என்பது வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணம் அல்ல.

வட்டியைத் தடைசெய்த நபி (ஸல்) அவர்களை விட ஏழ்மையான ஒரு மனிதரை நம் வாழ்வில் கண்டதுண்டா? தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாமலும், இரு மாத காலங்கள் வீட்டில் அடுப்பு எரிக்காமலும், படுக்கையில் படுத்து எழுந்தால் முதுகில் கயிற்றின் காய வடுக்களை ஏந்திக் கொண்டும் தான் கழிந்தது அண்ணலாரின் வாழ்க்கை.

எனவே, ஏழ்மை என்பது வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணி அல்ல. போதுமென்ற மனமில்லாமலிருப்பது தான் வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணியாக இருக்கிறது. கோடிகள் திரட்டி வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல. போதுமென்ற மனம் படைத்தவன் தான் உண்மையான செல்வந்தன் என்பது இஸ்லாம் சொல்லும் தத்துவம்.

ஆனால், இன்றைக்கு இவ்வாறு போதுமென்ற மனதோடு தங்கள் வாழ்க்கையை வாழப் பழகாத மக்கள் ஆடம்பர வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வதால் வட்டியும் பல பரிமாணங்களில் நம் மக்களிடையே உலா வரத் தொடங்கியிருக்கிறது. இன்றைக்கு ஒத்தி, லீஸ், அடைமானம், இன்ஸ்டால்மென்ட், ணிவிமி போன்ற பல பெயர்களால் இந்த வட்டி பெயர் மாற்றம் செய்யப்பட்டு மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற வட்டியினால் இன்று மக்கள் மானம், மரியாதையை இழந்து கடைசியில் அந்த வட்டி, குட்டி போட்டு அதைக் கட்ட முடியாமல் குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பார்த்து வருகிறோம்.

இந்தப் பெரும்பாவத்திற்கு இஸ்லாமிய சமூகமும் அடிமைப்பட்டு இந்த உலக வாழ்க்கையையும் இழந்து மறுமை வாழ்க்கையையும் இழந்து கொண்டிருப்பது தான் வேதனையான விஷயம். வாழ்வதற்கு வசதி இல்லாமல் ஒருவன் இந்த வட்டியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் செல்வந்தர்களுக்கு ஸக்காத்தை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.

அடுத்து, செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளில் மிகவும் முக்கியமானது கடன் உதவியாகும். இவ்வாறு கடன் கொடுத்து உதவுவதற்குக் குறுக்கே வந்து நிற்பது வட்டி! எனவே தான் வட்டியை இஸ்லாம் வேரறுத்து எறிகின்றது. மீறி ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகத்தைத் தருகின்றது. அதே வேளையில் வட்டியின் மூலம் லாபத்தைக் கண்டு பழகி விட்ட மனிதனுக்கு, வட்டியில்லாமல் கடன் வழங்கினால் அதற்காக மறுமையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

“(கடன் வாங்கி சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்கினால்) கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)

நூல்: அஹ்மத்

இவ்வாறு இஸ்லாம் ஓர் அழகிய பொருளாதாரத் திட்டத்தை வழங்கி ஏற்றத்தாழ்வுகளை அகற்றுகின்றது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லையேல் மனித வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும். ஆனால் அதே சமயம், இந்தப் பாகுபாட்டின் காரணமாக ஏழைகள் பட்டினியால் சாக வேண்டும்; பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று விட்டு விடவில்லை. மனிதனைப் படைத்த இறைவனிடமிருந்து வந்த இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாம் இப்படியொரு பொருளாதாரத் திட்டத்தை அமைத்து அனைவரும் வாழ வழி வகை செய்கின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed