திருக்குர்ஆன் 12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12 ஆகிய வசனங்கள் திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகிறது. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது.
இஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் இன்னொரு மொழியை விடச் சிறந்த மொழி அல்ல. எல்லா மொழிகளும் சமமான தரத்தில் உள்ளவை தான். இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு கூடுதல் மதிப்பு கிடையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபுமொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.
நூல் : அஹ்மது 22391
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.
நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.
திருக்குர்ஆன் 35 : 24
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 14:4
மேற்கண்ட வசனங்கள் எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருந்தன எனக் கூறுகின்றன.
குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபுமொழி மட்டுமே தெரியும். எனவேதான் அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.
உலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழிதான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தக் குர்ஆனை மக்களிடம் கொண்டு செல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.
எந்த மொழியில் குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழி பேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ்மொழியில் குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கிலமொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தில் குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.
அரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்களில் கூறப்படுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் வேதம் என்று அறிமுகப்படுத்திய திருக்குர்ஆன் மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால் நினைக்க இயலவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ அவரது தாய்மொழி அரபியல்ல. குர்ஆனோ தெளிவான அரபுமொழியில் அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அரபு மொழியில் அருளப்பட்டதாக 16:103 வசனம் கூறுகிறது.