திருக்குர்ஆனில் இடம்பெறும் மக்கீ, மதனீ அத்தியாயங்கள்

திருக்குர்ஆன் அத்தியாயங்களின் முகப்பில் சில அத்தியாயங்கள் மக்கீ என்றும் சில அத்தியாயங்கள் மதனீ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நபிகளார் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் கருத்து என்ன? எதன் அடிப்படையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதைக் காண்போம்.

மக்கீ என்பதன் நேரடிப் பொருள் மக்காவைச் சார்ந்தது.

மதனீ என்பதன் நேரடிப் பொருள், மதீனாவைச் சார்ந்தது.

மக்கீ என்றால் என்ன?

மதனீ என்றால் என்பதில் மூன்று கருத்துக்கள் அறிஞர்களிடம் இடம்பெற்றுள்ளது.

1. நபிகளார் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னால் உள்ள இறங்கிய வசனங்கள் மக்கீ வகையைச் சார்ந்ததாகும். ஹிஜ்ரத் செய்ததற்குப் பின்னர் இறங்கிய வசனங்கள் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.

அதாவது நபிகளாரின் மக்கா வாழ்க்கையில் சுமார் 13 ஆண்டு காலத்தில் எந்த இடத்தில் ஒரு வசனம் இறங்கியிருந்தாலும் சரி! அது மக்கீ வகையைச் சார்ந்தது என்று சொல்லப்படும்.

நபிகளாரின் மதீனா வாழ்க்கையில் சுமார் 10 ஆண்டு காலத்தில் எந்த இடத்தில் ஒரு வசனம் இறங்கியிருந்தாலும் சரி! அது மதனீ வகையைச் சார்ந்ததாகும்.

2. மக்காவாசிகளை முன்னோக்கி அழைக்கப் படும் வசனங்கள் மக்கீ வகையைச் சார்ந்ததாகும். மதீனாவாசிகளை நோக்கி அழைக்கப்படும் வசனங்கள் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.

3. மக்கா என்ற நகரில் இறங்கிய அனைத்து வசனங்களும் மக்கீ வகையைச் சார்ந்ததாகும். மதீனா என்ற நகரில் இறங்கிய அனைத்து வசனங்களும் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.

இந்த மூன்று கருத்துக்களில் முதலாவதே சரியானதாகும். ஏனெனில் அந்தக் கருத்துப்படியே அனைத்து வசனங்களையும் இரு வகையில் உள்ளடக்க முடியும். மற்ற இரண்டு கருத்துக்கள்படி அனைத்து வசனங்களையும் இரு வகைகளில் உள்ளடக்க முடியாது.

சில வசனங்கள் யாரையும் முன்னோக்கிப் பேசாமல் பொதுவாகச் சொல்பவையும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதை இரண்டாம் கருத்துள்ளவர்களின் பார்வையில் எதிலும் சேர்க்க முடியாமல் போகும்.

குறிப்பாக முதல் அத்தியாயமான ஃபாத்திஹா அத்தியாயம் யாரையும் முன்னோக்கிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கா நகரில் இறங்கியது மக்கீ என்றும் மதீனா நகரில் இறங்கியது மதனீ என்றும் மூன்றாவது சாரார் கூறும் கருத்தின்படி மக்கா, மதீனா அல்லாத பகுதியில் இறங்கிய வசனங்களை எதில் சேர்ப்பது என்ற கேள்வி எழும்.

உதாரணமாக, முனாஃபிகூன் என்ற 63வது அத்தியாயம் தபூக் போரில் இறங்கியது. (புகாரி 4900, திர்மிதீ 3236) இது போன்று மக்கா, மதீனா அல்லாத இடங்களில் இறங்கிய வசனங்களை இவர்களின் கருத்துப்படி இரண்டில் எந்த ஒன்றோடும் சேர்க்க முடியாது. எனவே முதல் சாரரின் கருத்தே ஏற்புடையதாக உள்ளது.

எவ்வாறு அறிந்து கொள்வது?

எந்த வசனங்கள் அல்லது எந்த அத்தியாயங்கள் மக்கீ வகையைச் சார்ந்தது? அல்லது மதனீ வகையைச் சார்ந்தது என்று எப்படிக் கண்டுகொள்வது?
நபித்தோழர்களின் நேரடியான கூற்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், ‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப் படுத்திவிட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன் (5:3)’ என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்கள்: புகாரி 45, முஸ்லிம் 5740

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அலகுர்ஆன் 5:3)

என்ற வசனம் எப்போது இறங்கியது என்ற விவரம் மேற்கண்ட நபிமொழிகளில் கிடைக்கிறது.

அரஃபா என்ற இடத்தில் நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கியது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபிகளார் தன்னுடைய மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரீ 10ல் தான் ஹஜ் செய்தார்கள். எனவே இந்த வசனம் மதனீ வகையைச் சார்ந்தது என்று ஐயமின்றி சொல்லலாம்.

(நபியே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
அல்குர்ஆன் 26:214

இந்த வசனம் மக்கீ வகையைச் சார்ந்தது என்பதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள் என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 2753, முஸ்லிம் 348

அல்குர்ஆன் 26:214 என்ற வசனம் இறங்கிய போது மக்காவிலிருந்த தம் உறவினர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் மறுமை வாழ்க்கைப் பற்றி எச்சரிக்கை செய்ததலிருந்து இது நபிகளாரின் மக்கா வாழ்க்கையில் நடந்தது என்பதையும் இது மக்கீ வகையைச் சார்ந்தது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபித்தோழர்கள் கூற்று அல்லாமல், வசனங்களில் இடம்பெறும் கருத்துக்களைக் கொண்டும் அது மக்கீயா?

அல்லது மதனீயா? என்று புரிந்து கொள்ளலாம்.

நபிகளாரின் மக்கா வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?

மதீனா வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?

அப்போது அவர்களின் சூழ்நிலைகள் எவ்வாறு இருந்தது?

என்பதை அடிப்படையாக வைத்து அவை மக்கீயா? மதனீயா என்று விளங்கிக் கொள்ளலாம்.

இது தொடர்பாக ஆய்வு செய்த அறிஞர்கள் மக்கீய்யா வகை சார்ந்த வசனங்களில் இடம் பெறும் கருத்துக்களையும் மதீனிய்யா வகை சார்ந்த வசனங்களில் இடம் பெறும் கருத்துக்களையும் வகைப்படுத்தியுள்ளனர்.

மக்கீய்யா வகை சார்ந்த வசனங்களில் எவ்வகை கருத்துக்கள் இடம்பெறும் என்பதை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவைகள் வருமாறு :

1. ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

2. கல்லா என்ற சொல் இடம்பெறும் வசனங்களைக் கொண்ட அத்தியாயங்கள்.

3. ‘மனிதர்களே!’ என்றழைக்கும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

4. நபிமார்கள் வரலாறு சொல்லப்படும் வசனங்கள், முந்தைய சமுதாயங்களைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

5. பகரா அத்தியாயத்தைத் தவிர்த்து ஆதம் (அலை), இப்லீஸ் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

6. பகரா, ஆலு இம்ரான் அத்தியாயங்களைத் தவிர்த்து அலிஃப் லாம் மீம், அலிஃப் லாம் ரா, ஹா மீம் என்று தனி எழுத்துக்களாகத் துவங்கும் அத்தியாயங்கள்.

7. ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைத்தல், மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் அகியவற்றைக் குறிப்பிடுதல், இணை வைப்பவர்களின் வாதங்களுக்குப் பதில் அளித்தல் போன்று இடம்பெறும் அத்தியாயங்கள்.

8. கொலை செய்தல், அனாதைகளின் சொத்துக்களை அபகரித்தல், பெண் குழந்தைகளைக் கொல்லுதல் போன்ற கருத்துக்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

9. இணைவைப்பவர்களின் கெடுதல்கள், நபிகளாருக்கு ஆறுதல் கூறுதல் போன்ற கருத்துக்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

10. திருக்குர்ஆனின் சிறப்புகளைக் கூறி இதுபோன்று கொண்டு வர முடியுமா? என்று சவால் விடும் வசனங்கள் இடம்பெறும் அத்தியாயங்கள்.

இதைப் போன்று மதனீ வகை சார்ந்த அத்தியாயங்களையும் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

1. கடமை சார்ந்த கட்டளைகள் மற்றும் தண்டனை சார்ந்த கட்டளைகள் இடம்பெறும் அத்தியாயங்கள்.

2. நயவஞ்சகர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் அத்தியாயங்கள்.

3. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் வாதிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.

4. ‘ஈமான் கொண்டவர்களே!’ என்று துவங்கும் வசனங்கள் இடம்பெறும் அத்தியாயங்கள்.

5. மார்க்கம் தொடர்பான சட்டங்கள் இடம் பெறும் வசனங்கள் அத்தியாயங்கள். தொழுகை, உளு, தயம்மும், நோன்பு, ஹஜ் போன்றவை.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு வசனம் மக்கீயா? அல்லது மதனீயா என்று கண்டுபிடிக்கலாம் என்று அறிஞர்கள் விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
ஆனால் இந்த விதிகளுக்கு மாற்றமாகவும் சில அத்தியாயங்கள், சில வசனங்கள் அமைந்துள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed