தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

ஆண்களும், பெண்க்ளும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா?

தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது.

நரைத்த தலைமுடி கொண்டவர்கள் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நிறத்தால் தலைக்குச் சாயம் பூச வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருக்குமேயானால் அவர் அதன் நிறத்தை மாற்றுவது அவசியம். ஆனால் கருப்பு நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3462

ஆனால் கருப்பு நிறச் சாயம் பூசுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3462

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : நஸாயீ 4988

கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து தலைமுடியை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று விளங்க முடிகிறது.

அடர் கருப்பு நிறம் தான் தடுக்கப்பட்டுள்ளது என்று மேற்கண்ட ஹதீஸில் இருந்து அறியலாம். மெல்லிய கருப்பு, கருப்புக்கு நெருக்கமான டார்க் பிரவுன் ஆகிய நிறங்களில் சாயமிட்டுக் கொள்வது தடுக்கப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

தலைமுடி நரைக்காமல் இருப்பவர்கள் அலங்காரத்துக்காக தலைக்குச் சாயம் பூசுகின்றனர். இவ்வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே நபிமொழிகளில் இதைப் பற்றி பேசப்படவில்லை.

ஆனால் இது தற்காலத்தில் அலங்காரமாக நவீனவாதிகளிடம் கருதப்படுகிறது. இதை வணக்கம் என்ற அடிப்படையிலோ, மதச்சடங்காகவோ இவர்கள் செய்யவில்லை.

வணக்கமாகவோ, மதச் சடங்காகவோ ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குத் தான் மார்க்கத்தில் ஆதாரம் தேவை. ஆடை, அலங்காரம், காலாச்சாரம் போன்ற விஷயங்களில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் இருந்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான அம்சம் இவற்றில் இல்லாவிட்டால் இவற்றைச் செய்தால் குற்றமில்லை.

நரைக்காத முடிக்குச் சாயம் பூசுவது அலங்காரம் என்ற வட்டத்துக்குள் வருவதால் இதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இச்செயல் மார்க்கத்திற்கு முரண்படவில்லை. எனவே நரைக்காத தலைமுடிக்கு டை அடிப்பது தவறல்ல.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed