தலாக் விடப்பட்டவளிடம் அன்பளிப்பைத் திரும்பக் கேட்கலாமா?

ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது.

அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் நாயைப் போன்றவராவார். நாய் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுக்கின்றது. பிறகு அந்த வாந்தியை மறுபடியும் உண்ணுகிறது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 3072

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2589

எனவே கணவன் மனைவிக்கு கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போது திரும்பக் கேட்கக்கூடாது.

மனைவிக்குக் கொடுக்கும் பொருட்கள் நமக்குரியது தான் என்ற எண்ணத்தில் இன்றைக்குப் பல கணவன்மார்கள் மனைவிக்கு நகைகளைச் செய்து கொடுக்கின்றனர். அவர்கள் பெயரில் சொத்துக்களையும் வாங்கிப் போடுகின்றனர். ஆனால் திருமண உறவு இரத்த சம்மந்தம் போன்ற உறவு அல்ல. ஒரு நாள் அந்த உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தவை விவாகரத்து ஏற்பட்டால் நமக்குக் கிடைக்காது என்பதை விளங்கித் தான் அன்பளிப்புகளைக் கொடுக்க வேண்டும்.

தனது சேமிப்புக்கும், தனது எதிர்காலத்துக்கும் உதவும் என்பதற்காக நகைகளை வாங்கினால் அதை மனைவியிடம் கொடுக்கும் போது தெளிவாகச் சொல்லி விட வேண்டும். இது எனக்குரியதுதான். நீ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர உனக்குரியதாகக் கருதக் கூடாது என்று தெளிவாகச் சொல்லி விடவேண்டும். இதற்கு இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எழுதிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய ஜமாஅத்தில் குடும்பப் பஞ்சாயத்தின் போது அனைத்தையும் மனைவியின் பெயரில் எழுதி வைத்து விட்டு பரிதாபமாக கண்ணீர் விடும் பல அப்பாவி ஆண்களைப் பார்த்துள்ளோம். அதன் விளைவாகவே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.

விவாகரத்து நடந்தாலும் இது மனைவிக்கு உரியது தான் என்று நீங்கள் நினைப்பதை மட்டும் அன்பளிப்பாகக் கொடுங்கள்.

அப்படிக் கொடுத்த பின்னர் அதை எக்காரணத்தினாலும் உரிமை அடிப்படையில் திரும்பக் கேட்க முடியாது. சில நெருக்கடிகள் வரும் போது மனைவியிடம் கேட்டு அவரும் மனப்பூர்வமாக திருப்பித் தந்தால் அது குற்றமாகாது. உரிமை கொண்டாடும் வகையில் கேட்டால் அது குற்றமாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed