தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.

ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறவில்லை என்று காரணம் கூறி இந்த நபிவழியை சிலர் நிராகரிக்கின்றனர்.

யாரேனும் கடன்பட்டிருந்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் தோழருக்கு நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துங்கள்’ என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்கொலை செய்தவருக்கு இப்படிக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்றால் அதை மீறி நபித்தோழர்கள் தொழுகை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதை ஏனோ இந்த அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

மேலும் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதும், மறுமைப் பயன்களை அவருக்காக வேண்டுவதுமாகும்.

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனின் தீர்ப்பை எதிர்ப்பதற்குச் சமமாகும்.

ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்’ என்று அல்லாஹ் கூறி விட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)

நூல்: புகாரி 1364

யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று தீர்மானமாகி விட்ட பின் அவருக்காக மறுமைப் பயன் கோருவது இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தற்கொலை செய்தவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed