தர்மம் – மறுமைக்கான முன்னேற்பாடு

இஸ்லாத்தில் எல்லா வகையான நற்காரியங்களும் நற்பண்புகளும் போதிக்கப்பட்டு உள்ளது. அவற்றுள் முக்கியமான ஒன்று, தர்மம் செய்வதாகும். தர்மம் தலைகாக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அது எப்படிக் காக்கும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறது. நாம் பெற்றுள்ள பொருளாதாரத்தை, பொருட்களை நல்வழியில் செலவழிப்பது பற்றிய செய்திகள் பல விதங்களில் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன.

இறைநம்பிக்கையின் அடையாளம்

நமது உள்ளத்தில் இருக்கும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் பண்புகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அதில் தர்மம் செய்வதும் உள்ளடங்கும்.

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

(திருக்குர்ஆன் 8:3)

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.

(திருக்குர்ஆன்  22:35)

தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம்  (381)

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனுக்கு ஒருபோதும் இணைவைத்துவிடக் கூடாது என்று சொன்ன அளவுக்கு ஆரம்பம் முதலே நல்வழியில் செலவழிப்பது பற்றியும் அதிகம் போதிக்கப்பட்டுள்ளது. தமது நபித்துவத்தின் துவக்க காலம் உட்பட எல்லாக் கட்டத்திலும் நபிகளார் தர்மத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அபூ சுஃப்யான் (ரலி) அறிவித்தார்கள்:

(பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபியவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்என்று பதிலளித்தேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5980)

நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதுஎன்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி  (1429)

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (2707)

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்…?’ எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்என்றனர். தோழர்கள், ‘அதுவும் முடியவில்லையாயின்எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்என்று பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவில்லையாயின்என்றதும் நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1445)

பொறாமை கொள்வதற்கு அனுமதி

எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களைப் பார்த்துப் பொறமை கொள்வதோ, பேராசைப் படுவதோ கூடாது. இவ்வாறு போதுமென்ற தன்மையோடு வாழச் சொல்லும் மார்க்கம், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குகிறது. அதிலொன்று தர்மம் எனும் போது அதன் சிறப்பை அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்: புகாரி (73)

வெளிப்படையாக தர்மம் செய்யலாம்

தர்மம் செய்வது பற்றி மக்களிடம் சில தவறான கண்ணோட்டங்களும் உள்ளன. பிறருக்குத் தெரியும் வகையில் தர்மம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள். எப்படிச் செய்தாலும் அல்லாஹ்விடம் நற்கூலி பெறுவதற்காகச் செய்ய வேண்டும். இதன்படி ஒருவர் வெளிப்படையாக தர்ம்ம் செய்யும்போது அவரைப் பார்த்து எவரேனும் தர்மம் செய்தால் அவருக்குக் கிடைப்பது போன்றே இவருக்கும் கூலி கிடைக்கும்.

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.

(திருக்குர்ஆன் 13:22)

செழிப்பற்ற நிலையிலும் தர்மம்

இனி தேவையே இல்லை எனும் அளவுக்கு செல்வம் குவிந்த பிறகு, தான தர்மம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை நம்மிடம் இருக்கக் கூடாது. வறுமை, நடுத்தரம், செழிப்பு என்று எல்லா நிலையிலும் தர்மம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(திருக்குர்ஆன்  3:134)

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தர்மத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார். நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, ‘இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (2748)

தேவைக்குப் போக தர்மம்

செல்வத்தில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கொடுப்பதோ அல்லது எந்தவொன்றையும் கொடுக்காமல் மொத்தமாக வைத்துக் கொள்வதோ சரியல்ல. அடிப்படையான காரியங்களுக்குப் போக மீதமிருக்கும் செல்வத்தில் முடிந்தளவு தர்மம் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. இப்பண்பை வாழ்வில் வழமையாக்கிக் கொள்வது நல்லது.

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

(திருக்குர்ஆன்  65:7)

அவர்கள் செலவிடும் போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

(திருக்குர்ஆன்  25:67)

நான் இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக் கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வுன் தூதருக்காகவும் தர்மமாகக் கொடுத்து வடுவதை என் தவ்பாவில் (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டதற்காக மன்னிப்புக் கோரிப் பிராயச் சித்தம் தேடும் முயற்சிகளில்) ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லதுஎன்று கூறினார்கள். நான், ‘கைபரில் உள்ள என்னுடைய பங்கை (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்என்று கூறினேன்.

அறிவிப்பவர்: கஅப் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புகாரி (2757)

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)

நூல்: புகாரி (1434)

இறைநெருக்கத்தை தரும் தர்மம்

ஏக இறைவனிடம் நெருக்கத்தைப் பெற்று விட்டால் வாழ்வில் எந்தவொரு கவலையும் இருக்காது; எப்போதும் நிம்மதியாக இருக்கலாம். இவ்வாறான இறைநெருக்கம் தர்மம் செய்யும் மக்களுக்குக் கிடைக்கும்.

கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன் 9:99)

பாவங்களுக்குப் பரிகாரம்

நமது வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இருக்கவே செய்யும். அவை அனைத்தும் மன்னிக்கப்படும் நிலையில் படைத்தவனை சந்திக்கும் போதுதான் மறுமை வெற்றி கிடைக்கும். அவ்வாறு நமது பாவக் கறைகளைக் கழுவும் சிறந்த மருந்தாக தர்மம் திகழ்கிறது.

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன்  2:271)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(திருக்குர்ஆன்  33:35)

நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம்என்றனர். ‘‘ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்’’ என்றும் நான் விடையளித்தேன்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி  (525)

நேர்ச்சை நிறைவேற்றாதவர்கள், சத்தியம் செய்து முறித்தவர்கள், நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்தவர்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களில் தர்மம் முக்கிய இடம் பிடித்திருப்பதைக் காணலாம். இதுபோன்ற சட்டங்கள் மூலம் நமது தவறுகள் மன்னிக்கப்படுவதற்கு தர்மம் நல்லதொரு வழியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

நரகத்தை விட்டுத் தடுக்கும் தர்மம்

தப்பித் தவறியும் நரகத்தில் விழுந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறோம். இத்தகைய மக்களுக்கு நபியவர்கள் சொல்லும் ஒரு முக்கிய அறிவுரை, முடிந்தளவு தர்மம் செய்யுங்கள் என்பதாகும்.

 (மறுமையில்) உங்களில் ஒவ்வொரு நபருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ஒரு நற்சொல்லைக் கொண்டாவதுஎன்று காணப்படுகிறது.

அறிவிப்பவர்: என அதீ இப்னு ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி (7512)

நன்மைகளை அள்ளித்தரும் தர்மம்

நாம் மறுமையில் முழுமையான வெற்றி பெற வேண்டுமெனில், அதிகளவு நன்மைகளை செய்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கற்ற கூலிகளை அள்ளிக் கொள்வதற்குரிய அற்புதமான வழியே தர்மம் செய்வதாகும்.

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

(திருக்குர்ஆன்  57:18)

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன்  2:276)

நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும். -பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (7430)

மறுமையில் கிடைக்கும் கண்ணியம்

நம்பிக்கை கொண்ட நிலையில் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்போர் மறுமையில் சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெறுவார்கள். இன்னும் கூறுவதாயின், இப்பண்பு கொண்ட மக்கள் சொர்க்கம் போகும்போதே கண்ணியமான முறையில் நுழைவார்கள்.

ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் சதகாஎனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்க ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!என்றார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1897) (3216)

மறுமைக்கான முன்னேற்பாடு

தர்மத்தின் முக்கியதுவத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், தர்மம் என்பது மறுமை வெற்றிக்குரிய முன்னேற்பாடு. இப்படியான தர்மத்தைச் செய்வதற்குரிய சந்தர்ப்பம் நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. இதை மனதில் கொண்டு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 14:31)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான்.

(திருக்குர்ஆன் 63:10)

(இப்போதே) தான தர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்து செல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி)

நூல்: புகாரி (7120)

இம்மையிலே வளம் அதிகரிக்கும்

தோண்டத் தோண்ட சுரக்கும் மணற்கேணி என்று சொல்வது போல, நாம் தர்மம் செய்யும் காலமெல்லாம் இம்மையிலேயே செல்வ வளம் அதிகரிக்கும். அதற்காக மலக்குமார்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள்.

தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5047)

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!என்று கூறுவார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (1442)

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும்.

கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அந்த அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.

இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் இரண்டு அங்கிகள் என்பதற்குப் பதிலாக இரண்டு கவசங்கள் என்றுள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1443, 1444)

பொதுவாக நபியவர்கள் மக்களுக்கு அள்ளித் தரும் கொடை வள்ளலாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ரமளான் மாதம் வந்துவிட்டால் வேகமாக வீசும் காற்றை விட வேகமாக, அதாவது வாரி வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறான மாற்றத்தை ரமளான் மூலம் அல்லாஹ் நம்மிடமும் ஏற்படுத்துகிறான்; எதிர்பார்க்கிறான்.

ரமளானைக் கடந்திருக்கும் நாம், அந்தப் பயிற்சியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களிலும் தான தர்மம் செய்வதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மார்க்க மற்றும் சமூக விஷயங்களுக்காக நமது பொருளாதாரத்தை, செல்வத்தைச் செலவழிக்க வேண்டும். அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு அருள்வானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed