தரகுத் (புரோக்கர் )தொழில் கூடுமா?

நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ, விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது.

ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றாலோ, ஆட்களுக்கு வேலை தேவை என்றாலோ இதற்கும் தரகர்கள் தேவைப்படுகிறார்கள். வரன் தேடுவதற்கும் தரகர்கள் தேவைப்படுகிறார்கள்.

சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டித் தருவதை தமது முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல தேவைகளும், சேவைகளும் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட தரகுத் தொழிலை முழுமையாக ஆகும் எண்றும் சொல்ல முடியாது. முற்றிலும் கூடாது என்றும் சொல்ல முடியாது.

இதில் ஹராமானதும் உண்டு. ஹலாலானதும் உண்டு. ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலைக் கொடுத்து அதற்காக கமிஷன் பெற்றால் அது ஹலாலான தொழிலாகும்.

ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். தரகரைத் தொடர்பு கொண்டு இது குறித்த தகவலும், ஒத்துழைப்பும் வேண்டும் எனக் கோருகிறீர்கள். அவர் உங்களுக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் உங்களுக்குச் சொத்தை விற்க விரும்பும் நபரிடம் போய் அதிக விலைக்கு தலையில் கட்டி விடுகிறேன்;  எனக்கு ஒரு சதவிகிதம் தரவேண்டும் என்று அங்கேயும் பேரம் பேசி உங்களிடம் வந்து குறைந்த விலையில் அமுக்கி விடுகிறேன் எனக்கு ஒரு சதவிகிதம் தர வேண்டும் எனக் கூறினால் இது வடிகட்டிய அயோக்கியத்தனமும், மோசடியுமாகும்.

மேலும் ஒரு தரப்புக்கு மட்டும் சேவை செய்யும் போது உள்ளதை உள்ளபடி சொல்லாமல் மிகைப்படுத்தி கூறி எதிர்தரப்பை ஏமாற்றுகிறோம்.

பிளாட் விற்கும் தரகர்கள் பிளாட் வாங்குவோரிடம் எந்த ஆதாயமும் அடைவதில்லை. ஆனால் விற்பவர் சார்பில் அதிகமான பொய்களை அள்ளிவிட்டு தலையில் கட்டுகின்றனர். இப்படி இருந்தால் இதுவும் மார்க்கம் அனுமதிக்காத தரகுத் தொழிலாகும்.

அதிகமான தரகர்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.

இரு தரப்புக்கும் சாதகமாக உழைப்பதாகச் சொல்லி ஏமாற்றாமல் ஏதாவது ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக நடந்தால் அதில் மோசடி ஏதும் இல்லாததால் அதற்கு தடை இல்லை.

ஆனால் நடைமுறையில் இரு பக்கமும் கமிஷன் வாங்கி இருவரையும் ஏமாற்றுவதும், ஒரு தரப்புக்கு மட்டும் தரகு வேலை செய்யும் போது எதிர்த் தரப்பினரை ஏமாற்றும் வகையில் பொய்களை அவிழ்த்து விடுவதும் தான் தற்போது தரகுத் தொழிலின் இலக்கணமாக உள்ளது. இது ஹராமாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *