தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? – விளக்கம் தேவை.

மார்க்கத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் செய்வது ஓர் இறை வணக்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இதைக் காரணம் காட்டி பெற்றோர்களுக்கும், மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட முடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் குற்றவாளியாகவே கருதப்படுவார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில்உணர்த்தியிருக்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் , நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வைப்பீராக; (சிலநாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன;

உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள்.

நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது!” அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!”என்று நான் கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தாவூத் நபி அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள். “அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1975

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். “உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், “உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார்.

சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், “உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்’ என்றார். சல்மான், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்’ என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள், “உறங்குவீராக!’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், “உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், “இப்போது எழுவீராக!’ என்று கூறினார்கள்.

இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள்.

பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!” என்றார்கள்.

நூல்: புகாரி 1968

இந்தச் செய்திகளும் இது போன்ற பல செய்திகளும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காரணம் காட்டி, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையில் தவறுவதும் பெற்றோர் மற்றும் உறவினருக்கு செய்யும் கடமைகளில் குறைவைப்பதும் குற்றம் என்று கூறுகின்றன.

தப்லீக் செல்வதாகக் கூறிக் கொண்டு மாதக்கணக்கில் ஊர் ஊராகச் சுற்றும் பலர் தங்கள் குடும்பத்தார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed