தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன் அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது.

அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது” என்று கூறினார்.

நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.

உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்” என்று கூறினார். மேலும் (உம்மு ஜுன்துப்) கூறுகிறார்:

நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதாரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினாள்.

நூல்: இப்னு மாஜா 3523

இந்த ஹதீஸைத் தான் தண்ணீரில் ஓதி ஊதும் தொழில் செய்வோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை‘ என்றும், இப்னு மயீன் அவர்கள்இவர் பலமானவர் இல்லைஎன்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

அபூஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீனமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக ஆக்கக் கூடாது‘ என்றும்,

இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்‘ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இவரிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன‘ என்றும் விமர்சித்துள்ளனர்.

யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்‘ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், (பாகம்: 11, பக்கம்: 288)

மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் “சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்” என்ற அறிவிப்பாளரும் இடம் பெற்றுள்ளார். “இவர் யாரென்றே அறியப்படாதவர்” ஆவார்.

இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு வாதத்திற்கு இது சரியானது என்று வைத்துக் கொண்டால் கூட இதில் எந்த ஒன்றையும் ஓதி ஊதிக் கொடுத்ததாக வரவில்லை. நபியவர்கள் எதையும் ஓதாமல் தம்முடைய கைகளைக் கழுவி வாய்கொப்பளித்து கொடுத்ததாகத் தான் வந்துள்ளது.

மேலும் நபியவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் தேடச் சொன்னதாகத் தான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இது சரியானதாக இருந்தால் கூட நபியவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு என்று தான் கருத முடியுமே தவிர இதிலிருந்து அனைவரும் இவ்வாறு செய்யலாம் என்று சட்டம் எடுப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதில் இல்லை.

ஓதி, தண்ணீரில் ஊதிக் குடிக்கலாம் என்பவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபியவர்கள் அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். “மனிதர்களின் இரட்சகனே ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோயைக் குணப்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு பத்ஹான் (என்ற இடத்தில்) இருந்து மண்ணை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டார்கள். பிறகு தண்ணீரை அதில் ஊதி அதனை அவர் மீது கொட்டினார்கள்

நூல்: அபூதாவூத் 3387

இந்த ஹதீஸ் ஓதி, தண்ணீரில் ஊதுவதைப் பற்றிப் பேசவில்லை என்பதுடன் இது பலவீனமான ஹதீஸாகவும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் யூசுஃப் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யார் என்று அறியப்படாதவராவார். இவர் நம்பகமானவர் என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed