தண்டனைகள்

ஸகாத்தை நிறைவேற்றாததற்குரிய தண்டனை

ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். “இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 9:34

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்”

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்: புகாரி (1408)

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது

அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ

அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 3:180

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “எனது உயிர் எவன் கையிலுள்ளதோ’ அல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து

அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்தாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக

அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.’

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

நூல் : புகாரி 1460

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு

(அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை லி அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு,“”நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, “அல்லாஹ் தனது

பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை

அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் (3:180 ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1403

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாளில் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதனைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர்கள். ஆனால், அது உங்களைத் துரத்திக்கொண்டே வந்து “நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உங்கள் கையை விரித்து அதன் வாய்க்குள் நுழைக்கும் வரை அது உங்களைத் துரத்திக்கொண்டே வரும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 6957

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு

அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால்  தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம்

அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது.

அதற்கு “ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார்.

கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார்.

அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப்

பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:

குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.

குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன்

முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.

குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு “அந்தப் பசும்புல் வெளியில்’ அல்லது “அந்தத் தோட்டத்தில்’ அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம்

அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; “எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1803, புகாரி 2371, 2860

எனவே, நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக!

 

தேவைக்கு அதிகமாக யாசிப்பவனுக்குரிய தண்டனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக

மறுமை நாளன்று வருவான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 1474, 1475

மோசடி செய்பவனுக்குரிய தண்டனை

வாக்கு மீறுவதும், நம்பிக்கை மோசடி செய்வதும் எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக் கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியமாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அபூதாவூத் 2936

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:161

ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே, “எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.

மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது’ (3:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி),

“அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்று விட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?’ என்று கேட்டார்கள்.

நான், “என்னிடம் சாட்சிகள் இல்லை’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், பிரதிவாதி (அந்த நிலம் என்னுடையது தான்’ என்று) சத்தியம் செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே’ என்று கூறினேன். அப்போது தான், நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : புகாரி 2356 & 235

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்: அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசலமா (ரலி),

நூல் : புகாரி 2453, 3195

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: எவன் ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 2454

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது : மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 3188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.

அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி),

நூல் : முஸ்லிம் 3289

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *