தக்பீர் கூறுவது மார்க்கத்தில் அனுமதி உண்டா❓

தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா❓

மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்…. அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்த போது, முஹம்மதும் (அவரது) படையும் (வந்துள்ளனர்) என்று கூறினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட (வர்களான அந்தச் சமுதாயத்த) வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2945

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டீர்களா? என்று (ஒரு சந்தர்ப்பத்தில்) கேட்டேன். அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். நான் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 6218

அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ஆதமே! என்பான். அதற்கு அவர்கள், இதோ! வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்கல் தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள்.

அதற்கு அவன், ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.(இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நரகத்திலிருந்து (வெயே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளீல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹு அக்பர்-(அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அவர்கள், சொர்க்கவாசிக லில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

நாங்கள் (இப்போதும்),அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அப்போது அவர்கள், நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத் தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3348

இதன் அடிப்படையில் மார்க்கத்திற்கு உட்பட்டு இயற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரிக்கும் வண்ணம் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed