ஜின்களைக் காண முடியுமா?

இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.

ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானும், அவனது கூட்டத்தாரும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இவர்களைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

அல்குர்ஆன் (7 : 27)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிய போது குர்ஆனைக் கேட்பதற்காக அவர்களைச் சுற்றி ஜின்கள் அமர்ந்திருந்தனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக அறிந்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வஹியின் மூலம் இதை அறிவித்துக் கொடுத்த பின்பே இதை நபியவர்கள் அறிந்து கொண்டார்கள்.

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்‘ எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது” என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (72 : 1)

இறைவனுடைய உதவியின்றி சுயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலேயே ஜின்கள் அருகில் வந்து குர்ஆனைச் செவியுற்றதை அறிந்து கொள்ள முடியாது என்றால் வேறு எவராலும் நிச்சயமாக ஜின்களைப் பார்க்கவே முடியாது. இதை நாம் விளங்கிக் கொண்டால் ஜின்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களில் நாம் விழுந்து விட மாட்டோம்.

__________

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]