ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு ஹைரா” (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூறினால், அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்சிறந்த நன்றியைச் செலுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: திர்மிதீ (2035)

உதவி செய்தவர்களுக்கு இவ்வாறு “ஜஸாக்கல்லாஹு ஹைரா” (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று நாம் கூறியவுடன் அதற்கு மறுமொழியாக,

“பாரக்கல்லாஹு ஃபீக்கும்” (بارك الله فيكم)
– “வஇய்யாக” (وإياك)
– “வஜஸாக்கும்” (وجزاكم)
– “ஜமீஆ” (جميعا)
– “வஜஸாக்குமுல்லாஹு பில்மிஸ்லி” (وجزاكم الله بالمثل)
– “அஹ்ஸனல்லாஹு இலைக்” (أحسن الله إليك)
– “ஜஸாக்கும் இய்யாஹு” (جزاكم اياه)

என்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் மக்களுக்கு மத்தியில் இன்று நடைமுறையில் காணப்படுகிறது. ஆனால் “ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் பதில் கூறுவது நிச்சயமான முறையில் “பித்அத்” ஆகும்.

“ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறியவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு சில நபிமொழிகள் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் பல அறிவிப்புகள் பலஹீனமானவையாக உள்ளன. ஆனாலும் கீழுள்ள ஒரு அறிவிப்பு மட்டும் ஸஹீஹானதாக உள்ளது.

அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை (மக்களுக்கு) பங்கீடு செய்து (முடித்துவிட்ட நிலையில்), (அகபா உடன் படிக்கையில் கலந்துக் கொண்ட) தலைவர்களில் ஒருவரான உஸைத் பின் ஹுலைர் அல்அஸ்ஹலீ (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் பனீ லுஃப்ர் கோத்திரத்தைச் சார்ந்த வீட்டாரைப் பற்றியும் அவர்களின் வறுமையைப் பற்றியும் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உஸைதே! நம்முடைய கையில் இருந்தவை காலியாகும்வரை நீர் நம்மை விட்டுவிட்டு (இப்போது வந்துள்ளீர்கள்). எனவே நம்மிடம் ஏதாவது பொருள் வந்ததாக நீங்கள் செவியேற்றால் அந்த வீட்டாரைப் பற்றி என்னிடம் நினைவூட்டுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்குப் பிறகு கைபரிலிருந்து கோதுமை, பேரீத்தம் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உஸைத் பின் ஹுலைர் (ரலி) அவர்கள் “ஜஸாக்கல்லாஹு அய் நபியல்லாஹ் ஹைரன்” (அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்க நற்கூலி வழங்குவானாக) என்று கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள், “வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” (அன்சாரிகளே! அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!) நான் அறிந்தவரை (அன்சாரிகளாகிய) நீங்கள் சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா லின்னஸாயீ (870)

உஸைத் பின் ஹுலைர் (ரலி) அவர்கள் தொடர்பாக வரக்கூடிய இந்த சம்பவம் பற்றி, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த செய்திதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும்.

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்களுக்கு நன்றியறிவிக்கும் வண்ணம் ஸஹாபாக்கள் கூறிய வார்த்தைக்கு, நபி (ஸல்) எவ்வாறு அவர்களுக்கு மறுமொழி அளித்தார்கள் என்பதை இப்போது காண்போம்:

ஜஸாக்கல்லாஹு ஹைரன்” என்பதற்கு அதே துஆவை பதிலாகக் கூறலாம் என்று அந்த நபிமொழி நமக்கு தெளிவுபடுத்தினாலும், அதை மறுமொழியாக சொல்லும்போது எவ்வாறு நபி(ஸல்) பயன்படுத்தினார்கள் என்பதை வைத்துதான் நாமும் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு “ஜஸாக்கல்லாஹு ஹைரன்” என்ற அதே வார்த்தையை மறுமொழியாக சிலர் திருப்பி சொல்வதும் சரியானதல்ல. அதற்கான சரியான மறுமொழியையும் அந்த சம்பவத்திலுள்ள உரையாடலின் மூலம் நபி(ஸல்) நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

மேலுள்ள ஹதீஸில், “ஜஸாக்கல்லாஹு அய் நபியல்லாஹ் ஹைரன்” என்று ஸஹாபாக்கள் கூறியபோது, “வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” என்று நபி(ஸல்) அவர்கள் மறுமொழி அளிக்கிறார்கள். “அய் நபியல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதரே!) என்பது விளிக்கும் சொல். அதுபோல் “மஃஷரல் அன்ஸார்” (அன்சாரிகளே!) என்பதும் விளிக்கும் சொல்.

இரண்டு வாக்கியங்களிலும் அவற்றை நீக்கிவிட்டு அந்த துஆவுடைய வார்த்தைகளையும், அதற்கு மறுமொழி அளித்த வார்த்தைகளையும் கவனித்தோமானால், “ஜஸாக்கல்லாஹு ஹைரன்” என்பதற்கு “வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” என்றுதான் நபி(ஸல்) மறுமொழி அளித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த சம்பவத்தில், நபி(ஸல்) அவர்கள் பலரை நோக்கி பதிலளிப்பதால் பன்மையைக் குறிக்கும் வார்த்தையான “வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” என்று கூறுகிறார்கள்.

தனியொருவரை நோக்கி ஒருமையில் பதிலளிக்கும்போது “வஅன்த்த ஃபஜஸாக்கல்லாஹு ஹைரன்” (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) என்றுதான் நாம் கூறவேண்டும். இதே ஹதீஸில் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஸஹாபாக்கள் ஒருமையில் கூறும்போது “ஜஸாக்கல்லாஹு ஹைரன்” என்று ஒருமையில்தான் கூறுகிறார்கள் என்பதையும், அங்கே நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதேபோல் பெண்பாலாக இருந்தால் “வஅன்த்தி ஃபஜஸாக்கில்லாஹு ஹைரன்” என்று கூறவேண்டும்.

இந்த மறுமொழியைத் தவிர வேறு விதமான வார்த்தைகளுக்கும் நபிமொழியில் எந்த ஆதாரமும் இல்லாததால் மற்ற அனைத்தும் பித்அத்தானவையாகும்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் உறுதித்தன்மை:

மேற்கண்ட ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களும் உறுதியானவர்கள் ஆவர். அவர்களைப் பற்றிய விபரங்கள் வருமாறு:

1. அனஸ் பின் மாலிக் (ரலி)

2. யஹ்யா இப்னு ஸயீத்

3. ஆஸிம் இப்னு சுவைத் இப்னு ஆமிர்

4. அலி இப்னு ஹூஜ்ர்

இவர்களைப் பற்றிய விமர்சனங்களைக் காண்போம்:-

அனஸ் பின் மாலிக் (ரலி)

ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்யவேண்டிய அவசியமில்லை.

யஹ்யா பின் ஸயீத் பற்றிய விமர்சனம்:

இவர் மிகச் சிறந்த அறிவிப்பாளர் ஆவார். இவரைப் பற்றி ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

என்னிடத்தில் யஹ்யா பின் ஸயீத் அவர்கள்தான் மிகவும் புத்திசாலியான முஹத்திஸ் ஆவார். அவரைவிடச் சிறந்த ஒருவரை நான் பார்க்கவில்லை என ஜரீர் பின் அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹம்மாத் பின் ஸைத் கூறுகிறார்: ஒருதடவை அய்யூப் என்பார் மதீனாவிலிருந்து வந்தாரகள். அவரிடம் “அபூபக்ர் அவர்களே ! நீங்கள் மதீனாவில் யாரை விட்டு வந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கவர் “நான் அங்கே யஹ்யா பின் ஸயீத் அவர்களை விட ஞானமுடைய எந்த ஒருவரையும் விட்டு வரவில்லை” என்று கூறினார்கள்.

 

ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜூம்ஹி அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு ஷிஹாப் ஷூஹ்ர் அவர்களுக்கு மிகவும் ஒப்பானவராக யஹ்யா பின் ஸயீதை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. அந்த இருவரும் இல்லையென்றால் ஹதீஸ்களில் அதிமானவை அழிந்திருக்கும்.

“முதல் தலைமுறை தாபியீன்களுக்கு அடுத்தபடியாக இப்னு ஷிஹாப். யஹ்யா பின் ஸயீத் அல்அன்சாரி, அபுஸ் ஸினாத், புகைர் பின் அப்தில்லாஹ் இப்னு அஸஜ்ஜூ ஆகியோர்களை விட மிக அறிந்தவர்கள் மதீனாவில் யாரும் கிடையாது” என அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள்.

யஹ்யா அவர்கள் ஷூஹ்ரிக்கு நிகரானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் ஷூஹ்ரி அவர்களை விட சிறந்தவர் என சுஃப்யானுஸ் ஸவ்ரீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 31; பக்கம்: 351)

இன்னும் ஏராளமான அறிஞர்கள் இவரைப் பற்றி மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

ஆஸிம் பின் சுவைத் பின் ஆமிர் பற்றிய விமர்சனம்:

 

இவர்கள் மதீவினுடைய அறிஞர்களில் ஒருவர் என இப்னு ஸபாலா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் மூத்த அறிஞர், உண்மையாளர் என்ற நிலையில் இருப்பவர் , இரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர்களில் ஒருவராகக் கூறியுள்ளார்.

இவரை யாரென்று நான் அறியவில்லை என இமாம் இப்னு மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் கூறியுள்ளார்.

இமாம் இப்னு அதீ கூறுகிறார்: இப்னு மயீன் அவர்கள் இவரை நான் யாரென்று அறியவில்லை என்று கூறுவதற்கு காரணம் இவர்கள் மிகவும் குறைவாக அறிவித்துள்ளார் என்பதினாலேயே ஆகும். இவர் ஐந்து ஹதீஸ்களைத் தவிர அறிவிக்கவில்லை.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம்: 5; பக்கம்: 39)

இமாம் இப்னு மயீன் இவரை யார் என்று அறியவில்லை என்று கூறியிருந்தாலும் இமாம் அபூ ஹாதிம் அவர்கள் இவரை உண்மையாளர் என்றும் கூறியுள்ளதால் இப்னு மயீன் அவர்களின் விமர்சனம் நீங்கிவிடும்.

மேலும் இப்னு ஸபாலா என்பாரும் இவரை மதீனாவினுடைய அறிஞர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் அபூ ஹாத்திம் கூறுவது நாம் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட செய்தி அல்ல. எனவே இவரும் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் வந்து விடுகிறார்.

அலி இப்னு ஹஜர் பற்றிய விமர்சனம்:

இவர் விழிப்புணர்வுமிக்கவராகவும், ஹாஃபிழாகவும், நம்பகத்தன்மைமிக்கவராகவும், உறுதிமிக்கவராகவும் இருந்தார் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் கூறுகிறார்கள். இவர் உறுதியானவர், நம்பகமானவர் என்றும், ஹாஃபிழ் என்றும் இமாம் நஸாயீ கூறியுள்ளார். இவர் உண்மையாளராகவும், உறுதிமிக்கவராகவும், ஹாஃபிழாகவும் இருந்தார் என அபூபக்ர் அல்ஹதீப் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 20; பக்கம்: 355)

இதே செய்தி அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் வழியாக ஏனைய அறிவிப்பாளர்கள் தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed