“சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்” என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது.
அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.
இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் சொல்லிலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும்போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.
படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு தமிழில் கிடையாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக ‘அவர்கள்’ எனக் கூறுகிறோம்.
அரபு மொழியில் படர்க்கை ஒருமையில் மட்டுமின்றி படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
அதுபோல் முன்னிலையில் பேசும்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ‘நீ’ ‘நீங்கள்’ என்று கூறுகிறோம். தமிழ் மொழியில் இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.
ஆனால் அரபுமொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கி கூறப்படுகிறது என்று புரிந்து கொள்வோம்.
ஆனால் அரபுமொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.
‘ஸல்லூ’ (தொழுங்கள்) என்று அரபுமொழியில் கூறினால் ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும்போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
பெண்களை நோக்கி ‘தொழுங்கள்’ என்று கூறுவதாக இருந்தால் ‘ஸல்லீன’ எனக் கூற வேண்டும்.
அரபு மொழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் “ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்” என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டும்.
திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டிய நிலை இதனால் ஏற்படும்.
ஒவ்வொரு கட்டளையையும் இரண்டிரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும்போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும், பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்றுவழியைத் தேர்வு செய்துள்ளது.
அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, “ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன” என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். “ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டபோது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது.
நூல்: அஹ்மத் 25363
33:35 வசனத்தில் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.
4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.
ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும்போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.
மறுமையில் பரிசு வழங்கும்போது “அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்” என்ற கருத்தை 5:119, 9:100, 22:59, 58:22, 88:9, 98:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.
இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் அவருக்குக் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை. இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை.
கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும்போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.
“இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு” என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
[நூல்: முஸ்லிம் 1674, 1675, 1676]
ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்காகவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நபிவழியாகும்.
இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.
எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.
அதுபோலவே சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்து ஆண்பாலாகக் கூறப்பட்டாலும் அது பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.