*சைத்தானின் தந்திரம் – பாவத்தை அழகாக்குதல்*
*சைத்தான் அவர்களின் தீய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்* (6:43, 8:48, 9:37, 16:63, 29:38, 47:25) என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.
மனிதனை வழிகெடுக்கும் சைத்தானின் மிக ஆபத்தான மற்றும் நுட்பமான உளவியல் தந்திரத்தை இப்போது பார்ப்போம்
சைத்தான் ஒருபோதும் நம்மிடம் நேரடியாக வந்து, *இது ஒரு கொடிய பாவம், இதைச் செய்* என்று கூறுவதில்லை. காரணம், அப்படிச் சொன்னால், நமது *இயல்பான மனசாட்சியும், இறை நம்பிக்கையும் நம்மை உடனடியாக எச்சரித்து, அதைத் தடுத்துவிடும்.*
எனவே, அவன் மறைமுகமான வழியைக் கையாள்கிறான். அவனது தந்திரம், அந்தத் தீய செயலின் உண்மைத் தன்மையை மறைத்து, அதன் மீது ஒரு அழகான, கவர்ச்சிகரமான *வண்ணத்தைப்* பூசுவதுதான் அந்த தந்திரம்.
அவன் அந்தப் பாவத்தை ஒரு நல்ல காரியம் போலவோ, தவிர்க்க முடியாத தேவை போலவோ, அல்லது ஒரு சாதாரண, பாதிப்பில்லாத செயல் போலவோ நம்மைக் நம்ப வைக்க முயற்சிப்பான்.
*சைத்தான் எப்படி பாவத்தை அழகாக்குகிறான்?*
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இவ்வுலக ஆசைகள் இருக்கின்றன. *பணம், பதவி, புகழ், கேளிக்கை, உலக இன்பம்* போன்ற ஆசைகள். சைத்தான் இந்த ஆசைகளைத் தனது தூண்டிலாகப் பயன்படுத்துகிறான்.
ஒரு பாவத்தைச் செய்தால், அதனால் கிடைக்கும் தற்காலிக சந்தோஷத்தை மட்டும் நம் கண்முன் பெரிதாகக் காட்டுவான்.
ஆனால், அதனால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளையும், மறுமைத் தண்டனையையும், மனசாட்சியின் உறுத்தலையும் மறக்கடித்து விடுவான்.
அவன் பாவத்திற்கு ஒரு நல்ல பெயரைச் சூட்டி, அதை நியாயப்படுத்துவான்.
உதாரணமாக, வட்டி வாங்குவது அல்லது லஞ்சம் வாங்குவது. அவன் அதை *பாவம்* என்று காட்ட மாட்டான்.
மாறாக, *இது ஒரு புத்திசாலித்தனமான வியாபாரம்*
இன்றைய காலத்தில் இப்படிச் செய்யாவிட்டால் பிழைக்க முடியாது
குடும்பத்தைக் காப்பாற்ற இது தேவை என்று நம் மனதிலேயே பேசி, அதைச் சரியானது போலக் காட்டுவான்.
கேளிக்கை விஷயத்தில் சைத்தான் காட்டும் அழகு, இதுதான் சுதந்திரம் *வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?* .*இது மன அழுத்தத்தைக் குறைக்கும்* என்று பொய்களைச் சொல்லி, அந்தப் பாவத்தின் மீதுள்ள வெட்க உணர்வை நீக்கிவிடுவான்.
பெருமை (ஆணவம்), மற்றவர்களை *மட்டம் தட்டிப் பேசுவதில் சைத்தான் காட்டும் அழகு*, இவ்வாறு பேசுவது தான் தன்னம்பிக்கை நீ மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள வேண்டும்
இப்படி இருந்தால்தான் உன்னை மதிப்பார்கள் என்று கூறி, பெருமையை ஒரு நல்ல குணம் போலக் காட்டுவான்.
எப்போது ஒரு மனிதன் சைத்தானின் இந்த தந்திரத்தில் மயங்கி, அவன் காட்டும் அழகில் ஏமாந்து விடுகிறானோ, அப்போது அவன் செய்யும் பாவமே அவனுக்குச் சரியாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.
அவன் தன்னைத்தானே நியாயப்படுத்தத் தொடங்குவான்.
யாராவது அவனுக்கு நல்ல அறிவுரை சொன்னால், அவனுக்குக் கோபம் வரும்.
*நான் செய்வதுதான் சரி* என்ற மமதையில், அவன் தொடர்ந்து பாவங்களில் மூழ்குவான்.
இதுதான் அந்த குர்ஆன் வசனம் எச்சரிக்கும் ஆபத்தான நிலை.
எனவே, நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலைச் செய்வதற்கு முன், சற்று யோசிக்க வேண்டும்,
*நான் இதை ஏன் செய்கிறேன்*?
*இது உண்மையில் அல்லாஹ்வின் திருப்திக்காகவா*?
*இது எனது இவ்வுலக ஆசையா*?
*இந்த ஆசையை சைத்தான் எனக்கு அழகாக்கிக் காட்டுகிறானா?* என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வுலகின் தற்காலிக, போலியான அழகுக்காகவும், சைத்தானின் சூழ்ச்சிக்காகவும் ஏமாந்து, நமது நிரந்தர மறுமை வாழ்வை நாம் இழந்துவிடக் கூடாது. இந்த நுட்பமான தந்திரத்தில் இருந்து தப்பிக்க, நாம் எப்போதும் அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாப்புத் தேட வேண்டும்.
(இறைவனை) *அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்*! (அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள், உடனே அவர்கள் நிலைமையை புரிந்து கொள்வார்கள்.) (7:201)
மேற்கண்ட வசனம், சைத்தானின் மிக ஆபத்தான சூழ்ச்சியில் இருந்து தப்பிக்கும் வழியை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
*الله اعلم*