செலவை கழித்த பிறகா, ஜகாத்?

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா?

இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்ச மரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.

முஸ்லிம் (3157)

நபியவர்கள் காலத்தில் பயிர்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. நபியவர்கள் இந்தச் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கச் சொன்னதாகவோ இவ்வாறு செய்ய பிறருக்கு அனுமதியளித்தாகவோ எந்தச் செய்தியும் இல்லை. ஸகாத்தை மொத்த விளைச்சிலிருந்து கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்று பொதுவாகவே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.


புகாரி (1483)

நபியவர்கள் காலத்தில் செலவினங்கள் குறைவாக இருந்தது. இன்றைய காலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளது. எனவே தற்போது செலவினங்களைக் கழித்து எஞ்சியதில் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுவதாக்க் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது தவறான வாதமாகும்.

ஏனென்றால் இன்றைக்குச் செலவினங்கள் அதிகரிப்பதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிக்கின்றது. மேலும் பயிர்கள் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றது. விளைச்சலை அதிகரிப்பதற்கு இன்றைக்கு கையாளப்படும் நவீன யுக்திகள் நபியவர்கள் காலத்தில் இல்லை.

எனவே இன்றைக்கு ஆகும் செலவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து கவனித்தால் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கக் கூடாது என்ற கருத்தே சரியானது என்பதை அறியலாம்.

மேலும் விளைச்சல் குறிப்பிட்ட அளவு இருந்தாலே அவற்றில் ஸகாத் கடமையாகும் என மார்க்கம் கூறுகின்றது. மார்க்கம் நிர்ணயித்துள்ள இந்த அளவை விட குறைவாக விளைச்சல் இருந்தால் அதில் ஸகாத் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாஉ) தானியத்தில் ஸகாத் இல்லை.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி (1405)

ஒருவர் தனது செல்வத்தை விவசாயத்தில் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் அப்போதும் அவர் அந்த செல்வத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் (செல்வம் நிஸாபுடைய அளவை எட்டியிருந்தால்).

தனது செல்வத்தைப் பயிர்களுக்காகச் செலவிட்டால் அவருடைய பணம் விவசாயப் பொருளாக மாறுகின்றது. இப்போது இவர் விளைச்சலுக்குரிய சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே விளைச்சலில் பயிர்களுக்காக செலவிட்ட தொகையைக் கழிக்காமல் அவை மொத்தத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதே சரியானது.
——————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed