செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா

சொல்லலாம்

செருப்பு அணிந்து பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை.

மேலும் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு செருப்பு ஒரு தடையில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

பாங்கை விட தொழுகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும்.

அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் கூறுகின்றது. இதைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

555 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது காலணிகளைக் கழற்றி தமக்கு இடப்பக்கத்தில் வைத்தார்கள். இதை மக்கள் கண்டபோது அவர்களும் தங்களது காலணிகளைக் கழற்றிப் போட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஏன் உங்களுடைய காலணிகளைக் கழற்றி போட்டீர்கள்? என்று வினவினார்கள்.

அதற்கு மக்கள் நீங்கள் காலணிகளைக் கழற்றுவதை கண்டதால் நாங்களும் எங்கள் காலணிகளைக் கழற்றினோம் என்று பதிலளித்தனர்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து என் காலணிகளில் அசுத்தம் அல்லது (பிறருக்கு) நோவினை தரும் பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

(அதனால் தான் நான் கழற்றினேன்.) உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் (தமது காலணிகளை) அவர் பார்க்கட்டும். தனது காலணிகளில் அசுத்தத்தையோ, அல்லது நோவினை தரும் பொருளையோ கண்டால் அதைத் துடைத்துவிட்டு அதனுடனே தொழுது கொள்ளலாம்.

நூல் : அபூதாவூத் 555

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

உங்களில் ஒருவர் தன் செருப்பால் அசுத்தத்தை மிதித்து விட்டால் (அதன் பின் அவர் மிதிக்கும்) மண் அந்த செருப்பைத் தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் 328

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும், காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 556

சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 386

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றும், அமர்ந்தும் பருகியதை நான் பார்த்துள்ளேன். செருப்பணிந்தும், செருப்பணியாமலும் தொழுததையும் பார்த்துள்ளேன்.

அவர்கள் (தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் (சலாம் கூறி) திரும்புவார்கள்.

நூல் : நஸாயீ 1344

செருப்பை தண்ணீர் ஊற்றி தூய்மை செய்ய வேண்டிய அவசியமில்லை. அது மண்ணில் தேய்க்கப்படும் போது அந்த மண்ணே அதைத் தூய்மையாக்கி விடுகின்றது.

அசுத்தம் ஒட்டியிராத செருப்பை அணிந்து தொழுவதை இந்த ஹதீஸ்கள் அனுமதிக்கின்றன. செருப்பில் அசுத்தம் இருத்தல் கூடாது என்ற நிபந்தனை கூட தொழுகைக்கு மட்டும் உரியதாகும்.

எனவே செருப்பு அணிந்து பாங்கு சொல்வது எந்த நிபந்தனையுமின்றி அனுமதிக்கப்பட்ட செயலாகும்.

செருப்பணிந்து தொழுவதன் மூலம் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை எப்போதும் செருப்பணிந்து தான் தொழ வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

புனிதமான காரியங்கள் செய்யும் போது செருப்பு அணிவது பாவம் என்ற நம்பிக்கையை உடைக்கும் வகையில் எப்போதாவது செருப்பு அணிந்து தொழுது விட்டால் யூதர்களுக்கு மாறு செய்தல் நிகழ்ந்து விடும்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பணிந்தும், அணியாமலும் தொழுதுள்ளனர் என்று மற்ற ஹதீஸ்களில் கூறப்படுகிறது.

வயல்களில் செருப்பணியக் கூடாது; பெரியார்களைச் சந்திக்கும் போது செருப்பணியக் கூடாது என்பது போன்ற நம்பிக்கைகளும் மூட நம்பிக்கையாகும்.

தூசி மண் போன்றவை உள்ளே வரக்கூடாது என்பதற்காக அதிக தூய்மை பேணப்படும் அலுவலகங்களுக்குள் செருப்பணியக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இது அறிவுப்பூர்வமான காரணத்துடன் உள்ளதால் இது மூட நம்பிக்கையாகாது. ஆனால் அண்ணா சமாதியில் செருப்பணிந்து செல்லக் கூடாது என்பது போன்றவை மூட நம்பிக்கையாகும். புணிதம் என்ற காரணம் சொல்லி செருப்பணியக் கூடாது என்று சொல்லப்படுமானால் அதை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed