சுவனத்தை நோக்கி விரைவோம்

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன்:21:90)

தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து அடைகின்றனர். அவர்களே அவற்றுக்கு முந்துபவர்கள்.

(அல்குர்ஆன்:23:61)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்:3:133)

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

(அல்குர்ஆன்:57:21)

இந்த வசனங்களில் அல்லாஹ் பாவ மன்னிப்பைப் பற்றியும் சொர்க்கத்தைப் பற்றியும் குறிப்பிடும் போது விரையுங்கள், முந்துங்கள் என்று கூறுகிறான். பொதுவாக மனித மனம் ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விடுவதால் நன்மையைச் செய்வதற்கு மெதுவாகவும் தீமை செய்வதற்கு வேகமாகவும் உட்படும்.

உதாரணமாக, தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் நம்முடைய மனம் இகாமத்துக்கு 20 நிமிடங்கள் இருக்கிறதே! மெதுவாகப் போவோம் என்று கூறும். இப்படியே நம்மைக் காலம் கடக்கச் செய்து நாம் ஜமாஅத்தையே தவற விட்டுவிடுவோம்.

‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.

தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி 615, முஸ்லிம் 661

இந்த நன்மைகளை எல்லாம் நம்முடைய மனதில் ஷைத்தான் ஊடுருவி தடுத்து விடுகின்றான். அதே சமயம் தொழுகை முடிந்ததும் செய்யவேண்டிய தஸ்பீஹ்கள், திக்ர்கள், துஆக்கள் ஆகியவற்றை ஓதவிடாது தடுத்து நம்மைப் பள்ளியை விட்டு வெளியே துரத்தி விடுகின்றான். என்ன உட்கார்ந்திருக்கிறாயே! தொழுகை முடிந்து விட்டதே! கிளம்பவில்லையா? கிளம்பு, கிளம்பு என்று நமது மனம் நம்மைக் கிளப்பி விடுகின்றது! எதற்காக?

பாவமான பேச்சுக்களைப் பேசவும், பயனளிக்காத செய்திகளை விவாதம் செய்யவும், இன்னும் இது போன்ற தீமைகளில் ஈடுபடவும் தொழுது முடித்தவுடன் தூசி தட்டி விட்டு, துண்டை உதறி விட்டு வெளியே கிளம்பி விடுகிறோம். இது போல் பாவமான காரியங்களின் பால் நமது மனம் பறந்து விரைந்து செல்வதால், அதற்கு நேர் மாற்றமாக அல்லாஹ் நம்மை நோக்கி, பாவ மன்னிப்பு, சொர்க்கத்தின் பக்கம் விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான்.

மேற்கண்ட வசனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அடைய தங்களது வாழ்க்கையை நபித்தோழர்கள் அர்ப்பணித்தார்கள். தங்களது உயிர்களைக் காணிக்கையாக்கினார்கள். விரையுங்கள் என்பதற்கு விரிவுரை எழுதிய தோழர்!

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதரும் அவர்களது தோழர்களும் பத்ருக் களத்திற்கு இணை வைப்பவர்களை விட முந்திச் சென்றுவிட்டார்கள். இணை வைப்பவர்களும் வந்து விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் அங்கு வருவதற்கு முன்பாக உங்களில் எவரும் எந்தக் காரியத்திலும் இறங்கி விட வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்கள்.

இணை வைப்பவர்கள் (போர் புரிய) நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சுவனத்தின் பக்கம் செல்லுங்கள். அதனுடைய விசாலம் வானங்கள் பூமியை ஒத்ததாகும்’ என்று கூறினார்கள்.

உமைர் பின் அல் ஹுமாம் என்ற அன்சாரித் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் விசாலம் வானங்கள் பூமியின் விசாலத்திற்கு இணையானதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு அவர் ஓஹோ என்றார்.

நீ ஓஹோ, ஓஹோ என்று கூறுவதன் காரணம் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சுவனவாசியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே தவிர நான் அவ்வாறு கூறவில்லை” என்று பதிலளித்தார். ‘நீ சுவனவாதி தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவர் தன் பையிலிருந்த பேரீத்தம் பழங்களை வெளியே எடுத்து அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர், “நான் இந்தப் பழங்களை சாப்பிட்டு முடிக்கும் வரை உயிர் வாழ்ந்தேன் என்றால் நிச்சயமாக அது நீண்ட வாழ்க்கை தான்” என்று கூறி தன்னிடம் இருந்த பேரீத்தங்கனிகளை தூக்கி வீசினார். பிறகு போராடி கொல்லப்பட்டார்.

நூல்:முஸ்லிம் : 3520

எனக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொன்ன பிறகும் இந்த பேரீத்தம்பழங்களைச் சாப்பிடுவதற்காக நான் கால தாமதம் செய்தால் இந்த உலகத்தில் ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவேன் என்று அந்த நபித் தோழர் சொல்வது உண்மையில் சிந்திக்கத் தக்க வைர வரிகளாகும்.

பேரீத்தம் பழங்கள் சாப்பிடுவதற்கு மிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு நேரம் ஆகிவிடும்? நாம் கிரில் சிக்கன்கள் சாப்பிடுகின்ற அளவுக்கு நேரத்தை இந்தப் பேரீத்தம்பழங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சில நிமிடத்துளிகளைத் தான் எடுத்துக் கொள்கின்றன.

அந்த சில நிமிடத்துளிகளை இவ்வுலகில் எடுத்துக் கொண்டு நான் காலதாமதம் செய்வது இந்த உலகத்தில் ஒரு நீண்ட நெடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்குச் சமமாகும் என்று அந்த நபித் தோழர் கூறுவதும், பின்னர் போர்க்களத்தில் மின்னல் வேகத்தில் புகுந்து கொல்லப்படுவதும் “விரையுங்கள்” என்ற வசனத்தின் பொருளை ஹுமைர் பின் ஹும்மாம் எப்படி விளங்கி, சுவனத்தின் ருசியைச் சுவைத்திருக்கின்றார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

உயிரை அர்ப்பணிக்கும் விஷயத்திலிருந்து அற்பமான மயிர் விஷயம் வரை நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நபித் தோழர்கள் பேணியிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். தொழுகைக்குப் பிறகு சொல்லப்படும் சுப்ஹானல்லாஹ்வையும் நபித்தோழர்கள் அலட்சியப்படுத்துவது இல்லை! தன் கொள்கைக்காக, கொள்கையைக் காக்க போர்க்களத்தில் கொல்லப்படும் ஷஹாதத்தையும் நபித் தோழர்கள் அலட்சியப்படுத்துவதில்லை.

யார் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹு அக்பர் என்று 33 தடவையும் முடிவில் நுறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று கூறுகின்றாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருப்பினும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1048

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற இந்த ஹதீஸில் உள்ள அமலை நம்மில் எத்தனை பேர்கள் செயல் படுத்துகின்றோம்? தொழுது முடித்து, அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றோமே தவிர யாரும் அமைதியாக இருந்து இந்த திக்ருகளைச் செய்வது கிடையாது. தொழுது முடித்தவுடன் பெண்கள் தான் நபி (ஸல்) காலத்தில் விரைந்து சென்றதைப் பார்க்க முடிகின்றது.

ஆண்கள் விரைந்து சென்றதைப் பார்க்க முடியவில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் விரைந்து செல்ல வேண்டும். இந்த தஸ்பீஹ் விஷயத்தில் நபித் தோழர்களின் நடைமுறையைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பெரும் செல்வந்தர்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிலையான அருட்கொடைகளையும் தங்கள் செல்வத்தின் மூலம் தட்டிச் செல்கின்றனர். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கின்றனர். பொருளாதாரம் என்ற பாக்கியம் அவர்களுக்கு இருக்கின்றது.

இதனால் அவர்கள் ஹஜ் செய்கின்றார்கள். உம்ரா செய்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்கள், தான தர்மங்கள் வழங்குகிறார்கள் என்று முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள், உங்களை முந்தி விட்டவர்களை அடைந்திடவும் உங்களுக்கு பின் உள்ளவர்களை முந்தி விடவும் ஒரு வழியை கற்றுத் தரவா? நீங்கள் செய்த மாதிரி எவரேனும் செய்தாலே தவிர உங்களை விட எவரும் சிறந்தவராகி விட முடியாது என்று சொன்னதும் அவர்கள், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! கற்றுத் தாருங்கள்’’ என்று கேட்டனர்.

நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும் 33 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 843, முஸ்லிம் 936

ஏழை முஹாஜிர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பொருள் வசதி படைத்த எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்வதைச் செவியுற்று அவர்களும் அது போல் செய்கின்றனர்’’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் நாடியவர்களுக்கு அவன் வழங்குகிறான்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 936

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பாருங்கள்! ஏழை நபித் தோழர்கள் செல்வந்தர்களைப் போன்று நன்மைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று கவலைப் படுகிறார்கள். பணக்கார நபித் தோழர்களோ ஏழை நபித் தோழர்கள் செய்கின்ற தஸ்பீஹ்களையும் விட்டு வைக்காமல் செய்கின்றார்கள்.

இன்று காசு பணம் உள்ள, வசதி படைத்த சீமான்கள் தான் செல்போன்களைக் கைகளில் தவழ விட்டுக் கொண்டு இந்த அமல்களை நழுவவிட்டு விடுகிறார்கள் என்பதைக் கண்டு வருகிறோம். நபித்தோழர்கள் சுப்ஹானல்லாஹ் சொல்லும் இந்த நன்மையைக் கூட கொள்ளையடிக்கத் தவறவில்லை. இந்த அமல்களை அலட்சியம் செய்யவில்லை. ஆனால் நாமோ இதுவெல்லாம் சின்ன அமல் என்று விட்டுவிடுகிறோம்.

இத்தனைக்கிடையில் நாம் என்ன பெரிய அமல்களைச் செய்து விட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின் செய்யப்படும் தஸ்பீஹ்கள், ஹஜ், உம்ரா, ஜிஹாத், தான தர்மங்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு ஒப்பானவையாகத் திகழ்கின்றன என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed