சுவனத்தில் கிடைக்கும் மாளிகைகள்

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான்.

அல்குர்ஆன் 25:10

சுவனத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் ஒரு கூடாரத்தின் நிலையைக் குறித்து பெருமானார் கூறுவதைப் பாருங்கள்.

‘‘சொர்க்கத்தில் நடுவில் துளையுள்ள முத்தாலான கூடாரம் ஒன்று உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். இறை நம்பிக்கையாளருக்குரிய துணைவியர்கள் அதன் ஒவ்வொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அந்தத் துணைகளைச் சுற்றி வருவார்கள்’’ என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபுமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 5459

இந்த சுவன மாளிகைகளில் ஏற்படும் வேறுபாட்டைக் குறித்தும், அதனால் உயர் தகுதி பெற்ற சுவனவாசிகளை, தகுதி குறைந்த சுவனவாசிகள் ஏக்கதுடன் பார்ப்பதைப் பற்றி நபியவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

‘‘சொர்கவாசிகள் தங்கள் மேலேயள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி உமிழும் நட்சத்தித்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்’’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் புகாரி 3256, முஸ்லிம் 5446

இதுவெல்லாம் போக, கற்பனைக்கு எட்டாத வகையில் இன்னொரு மாளிகையைக் குறித்தும் நபிமொழிகள் பேசுகின்றன.

நபி (ஸல்) கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மாளிகை இருக்கும். அதில் உட்பகுதியில் இருந்து வெளிப்பகுதியையும் வெளிப்பகுதியிலிருந்து உட்பகுதியையும் பார்க்க முடியும்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான், பாகம்: 2, பக்:262, ஹாக்கிம் 270, தப்ரானீ கபீர், பாகம்:3, பக்:301

இவ்வளவு பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட கூடாரங்கள், மாளிகைகள் சுவனத்தில் வழங்கப்படுகிறது என்றால் நம்மால் அவற்றைப் பற்றிக் கற்பனையால் கூட வர்ணிக்க முடியாது என்பதை நம்மால் உணர முடிகிறது.

உலகத்தில் உள்ள வானுயர்ந்த அரச மாளிகையைக் காட்டிலும் இறைவனின் சுவனத்தில் உள்ள வீடே சிறந்தது என்பதை உணர்ந்து தன் விருப்பத்தை அல்லாஹ்விடம் முறையிடும் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள் முஃமின்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

‘‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக’’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 66:11

இப்பெண்மணியின் வாழ்க்கையும், அவர் கேட்ட துஆவும் நம்பிக்கை கொண்டவர்களுக்கே முன்னுதாரணம் எனும் போது இந்த துஆவின் முக்கியத்துவம் நமக்குத் தெரிகிறது.

இன்னும் இறை திருப்தியைப் பெற்ற நபி தோழர்களுக்குக் கூட இறைவன் சுவன மாளிகை குறித்து நற்செய்தி சொன்னதாக நபிகளார் கூறினார்கள். அதில் கதீஜா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இஸ்மாயீல் பின் அபீ காலித் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா?’’ என்று நான் கேட்டேன். அவர்கள், “ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்)’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 3819 முஸ்லிம் 4818

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3242, முஸ்லிம் 4767.

இதன் சிறப்பம்சத்தை உணர்ந்ததால் தான் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது மரணத்திற்குப் பிறகு நடத்தப்படும் ஜனாஸா தொழுகையில் செய்யும் பிராத்தனையில் கூட சுவனத்தில் உள்ள வீட்டைக் குறித்தும் பிரார்த்திக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

இறைவா!

இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக;

(மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக;

பாவங்களை மாய்ப்பாயாக;

இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக!

இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக;

இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக;

மேலும், இங்குள்ள வீட்டை விடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக;

இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;

இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக;

இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக; இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!)

என்று இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா? என்று எண்ணினேன்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் (1756)

சுவனத்தில் கிடைக்கும் மாளிகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் ஏராளமான இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவற்றை இப்போது பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோர்

சொர்க்கத்தில் மாளிகையைப் பெறுவதற்கு முதல் தகுதி, மார்க்கம் போதித்த அனைத்து நம்பிக்கைகளையும் மறைவான செய்திகளையும் முழுவதுமாக ஏற்று, அதை நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9:72

இதைத் தான் நபிகள் பெருமகனார் (ஸல்) அவர்கள் கூட தன் போதனையின் வாயிலாக நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளி உமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்’ என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3256, முஸ்லிம் 5446

நல்லறங்கள் செய்தோர்

இன்றைக்கு ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், ‘நாம் இஸ்லாமியக் கொள்கையைத் தெரிந்து கொண்டோம்; அதை ஏற்றும் விட்டோம். எனவே நாம் மறுமை வாழ்க்கைக்காக எந்தச் சேமிப்பிலும் ஈடுபட வேண்டாம்; இறைவன் சுவனத்தையும் அதன் இன்பங்களையும் நமக்கு முழுமையாக வழங்கி விடுவான்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சுவன மாளிகை யாருக்கு என்பதை அல்லாஹ் நமக்கு மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
அல்குர்ஆன் 13:29

உங்களின் மக்கட்செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
அல்குர்ஆன் 34:37

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
அல்குர்ஆன் 29:58

சுவன மாளிகைக்கும் நல்லமல்களுக்கும் எவ்வளவு பெரிய தொடர்பு உள்ளது என்பதை இறைவன் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.

இறையச்சமுடையோர்

நவீன காலம் வளர வளர தவறுகளும் தீமைகளும் அதை விட மிக வேகமாக வளருகின்றது. மாபாதகச் செயலாக இருந்தாலும் அதை ஒரு சிறு தவறாகக் கூட கணக்கிட மறுக்கிறார்கள்.

ஆனால் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் நம்மை விசாரிப்பான், தண்டிப்பான்; அவனை யாரும் நிர்பந்திக்க முடியாது என்ற இறையச்சம் ஒருவரிடம் இருந்தால் அவர் சுவனப் பூங்காவில் தனக்கென ஒரு மாளிகையைப் பெற்றுக் கொள்வார் என இஸ்லாம் போதிக்கிறது.

தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
அல்குர்ஆன் 39:20

இறைவன் இறையச்சவாதிகளுக்கு வழங்க இருக்கும் மாளிகையை எவ்வளவு சிலாகித்துக் கூறுகிறான் என்று பார்த்தாலே அதன் தன்மை நமக்கு புரியும்.

அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 61:11, 12

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததேயில்லை. (அவர்களில் ஒருவர்,) “இந்த வீடு இறைவழியில் உயிர் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்று சொன்னார்.

அறிவிப்பவர்: சாமுரா பின்த் ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி 2791

பொறுமையை மேற்கொள்பவர்கள்

இறைவன் நம்மைச் சோதிக்கும் ஒரு கூடமாகத் தான் இந்த உலகத்தை ஆக்கியுள்ளான். இதில் ஏற்படும் நன்மையும் தீமையும் ஒரு சோதனை தான். நமக்கு இறைவன் தரும் இந்த உலகத் துன்பங்கள் அனைத்திலும் பொறுமையாக இருந்து, அதை சகித்துக் கொண்டால் அதனால் நமக்குக் கிடைக்கும் பரிசைக் குறித்தும் இறைவன் பேசுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன் களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 2:155

இப்படி இறைவன் வழங்கும் சோதனைகளைப் பொறுத்து கொண்டோருக்கு எண்ணிலடங்கா பரிசுகள் வழங்குவதாகக் கூறுகிறான். இந்தப் பொறுமையாளர்களுக்கு இறைவன் வழங்கும் பரிசுகளில் ஒன்று தான் சுவன மாளிகை ஆகும்.

அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
அல்குர்ஆன் 25:75

இவ்வாறு மாளிகைகளில் வரும் சுவனவாசிகளுக்கு வாழ்த்துக் கூறி அழைக்கும் பணியாளர்களும் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். மாளிகைகளைத் தருவதுடன் பணியாளர்களையும் தந்து கவுரவிக்கின்றான்.

இதுபோக, இன்னும் சில குறிப்பிட்ட அமல்களை நபியவர்கள் கூறி, இதற்குப் பரிசாக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை எழுப்புகிறான் என்று கூறினார்கள். அதைக் குறித்து இப்பொழுது நாம் பார்ப்போம்.

உபரியான தொழுகைகள்

ஒரு நாளில் நாம் வீணுக்காகவும் விளையாட்டுக்காகவும் செலவழிக்கும் நேரம் கணக்கில் அடங்காது. அந்த அளவிற்கு நாம் பயனற்ற காரியத்தில் ஈடுபட்டு வருகிறோம். அந்த நேரத்தில் உபரியான வணக்க வழிபாட்டில் ஈடுபட்டால் அதனால் நாம் எண்ணிலடங்கா கூலிகளைப் பெறலாம் என்று இஸ்லாம் நமக்குப் போதிக்கிறது.

‘‘யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களைக் கைவிட்டதேயில்லை.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1319

இந்த அளவிற்கு சுவன மாளிகையை ஆசைப்பட்டு, அமலாக மாற்றிய ஒரு பெண்மணியையும் இந்த ஹதீஸ் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

பள்ளிவாசலைக் கட்டுதல்

இறைவனை நினைவு கூர்வதற்காகவும் அந்த ஏகனை வணங்குவதற்காகவும் பெருமைப்படுத்துவதற்காகவும் இறைவேதம் வாசிப்பதற்காகவும் மக்களுக்கு நன்மை போதிப்பதற்காகவும் வேண்டி எழுப்பப்படும் இறை ஆலயம், சுவனத்தில் வசிப்பிடத்தை ஏற்படுத்தும் என்பதைக் கீழ்க்காணும் நபி மொழி நமக்குப் பறைசாற்றுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்காக ஓர் இறை ஆலயத்தைக் கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் அது போன்ற வீட்டைக் கட்டுகிறான்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்வான் (ரலி)

நூல்: முஸ்லிம் 1218

இப்படி எத்தனையோ பல நன்மையான காரியங்கள் மறுமையில் தூய்மையான, ரம்மியமான, கண்ணைக் கவரும் வகையில் அமைந்த மாளிகையை நமக்கு உறுதிப்படுத்துகின்றது.

குற்றவாளிகளுக்கு நெருப்பு மாளிகை

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்! அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும். அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.

அல்குர்ஆன் 77:28-33

வல்ல ஏகனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் இறைவனின் சுவன பூமியில் வாரிசுதாரர்களாக மாறிவிடலாம். அதே நேரத்தில் அவனுக்கு மாறு செய்தால் நரகத்தில் இரையாகத் தான் ஆகமுடியும்.

சுவனவாசிகளுக்கு அழகிய மாளிகை வழங்கப்படுவது போன்று, நரகத்திலும் மாளிகை போன்ற நெருப்பு அவர்கள் மீது வீசியெறியப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.

எனவே அந்த இறைவனுக்கு அஞ்சி, கட்டுப்பட்டு நடந்து, சுவன பூமியில் அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றிணைத்து, அவனது அருளில் நம்மை இளைப்பாறச் செய்வானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed