சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும்சிற்பங்களையும்தடாகங்களைப் போன்ற கொப்பரை களையும்நகர்த்த முடியாத பாத்திரங்களையும்அவருக்காக அவை செய்தன.

அல்குர்ஆன் 34:13

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்திற்கு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சிலை வடிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உருவம் வரைபவனைச் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி),

நூல்: புகாரி 2086

உருவம் வரைதல் என்பது சிலை வடிப்பதையும், படங்கள் வரை வதையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.

(பள்ளிக் கூட மாணவர்கள் படம் வரைவது, சிறிய அளவிலான உருவங்கள், ஆதாரங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்காக போட்டோ எடுப்பது இவற்றைப் பற்றி முந்தைய ஏகத்துவ இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பி னார்களோ அந்தப் பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1764

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் வைத்து, “மது பானம்செத்தவைபன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின்  அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3223

சிலைகள் அறவே கூடாது என்று இறைவன் கட்டளையிட்டதற்குக் காரணம் கற்களில் இல்லாத சக்தியை இருப்பதாக நம்பிக்கை கொள்வது தான். இந்த நம்பிக்கை தான் அச்சிலைகளை வணக்கத்திற்குரியதாக மாற்றி விட்டது.

ஒரு கற்பாறையை வீட்டின் வாசற்படியாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதையே கற்சிலையாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதற்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அதன் தன்மை மாறாது. ஆனால் சிலை வணங்கிகள் உருவமாகச் செதுக்கப்பட்ட கற்களில் இல்லாத தன்மையைக் கற்பனை செய்து இறைவனுடைய ஆற்றல்களெல்லாம் அதற்கு இருப்பதாக இட்டுக் கட்டுகின்றனர்.

திருக்குர்ஆன் சிலைகளைப் பற்றி பேசும் அதிகமான இடங்களில் இரண்டு வாதங்களை முன் வைக்கின்றது.

  • ஒன்று, அந்தச் சிலைகள் எந்தப் பயனையும் தராது.
  • இரண்டாவது, அவற்றால் எந்த இடையூறையும் செய்ய முடியாது.

பயனையும், இடையூறையும் செய்கின்ற ஆற்றல் சிலைகளுக்கு இருக்கிறது என்று நம்பிய காரணத்தினால் தான் அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். இணை வைப்பாளர்களாக ஆனார்கள்.

இதோ இறை வசனங்களைப் பாருங்கள்:

இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந் தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராத வற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும்உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 29:16, 17

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும்தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களாஎன்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:76

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும்தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:55

நன்மையோ, தீங்கோ செய்ய இயலாத கற்களிடம் அந்தச் சக்தி இருப்பதாக நம்பிய காரணத்தினால் சிலைகளை உடைக்குமாறும் அவ்வாறு நம்பிக்கை வைத்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் திருமறை பேசுகின்றது.

கலையழகிற்காக ஒருவன் சிற்பங்களை வடித்தாலும் அறியாத சமுதாயத்தினர் அதை வணங்கப்படும் பொருளாக ஆக்கி விடலாம் என்பதால் தான் நபியவர்கள் உருவப் படங்களை வரைவதற்குக் கூடத் தடை விதித்தார்கள். விபச்சாரத்தைத் தடுக்கின்ற இஸ்லாம் விபச்சாரத்தைத் தூண்டும் சிறிய, பெரிய வாயில்கள் அனைத்தையும் அடைக்கின்றது. அதுபோல் நபியவர்கள் உருவ வழிபாட்டைத் தோற்றுவிக்கும் அனைத்து வாயில்களையும் அடைப்பதற்கு வழிகாட்டியுள்ளார்கள்.

சிலை வழிபாடு என்பதன் பொருள், உருவமாகச் செதுக்கப்பட்டவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புவது மட்டுமல்ல. மாறாக எந்த ஒரு பொருளுக்கு இது போன்ற ஆற்றல் இருப்பதாக நம்பினாலும் அது சிலை வழிபாடு தான். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed