சிந்தித்து செயல்படவே இறைவேதம்!

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.

குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம்.

அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தையே மையமாகக் கொண்ட இவ்வுலகில் உலகியல் தேவைகளை நிறைவேற்ற உலகக் கல்வியைப் பயில்விக்கின்றனர்.அதே நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி குர்ஆனையும் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓத வைக்கின்றோம். இன்னும் சிலரோ குர்ஆனை மனனம் செய்வதற்கு கூட தமது குழந்தைகளை அனுப்புகின்றனர்.

இவ்வாறு பலவாறு குர்ஆனின் சிறப்புகளை அறிந்து வைத்திருக்கின்ற நாம் அது அருளப்பட்டதன் நோக்கத்தை மட்டும் மறந்து விடுகின்றோம். மனிதர்களின் பகிரங்க விரோதியான ஷைத்தான் இறைவனிடம் விடுத்த சவாலை நினைவு கூர்வோம்!

அல்லாஹ் கூறுகின்றான்:

(அதற்கு இப்லீஸ்)நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.

பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;

ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்.)

(அல்-குர்ஆன் 7:16-17)

ஷைத்தானின் சபத்திற்கேற்ப மனிதர்கள் தறிகெட்டு தட்டழிந்து போய்விடுமாறு மக்களை அல்லாஹ் விட்டுவிடவில்லை! மாறாக, ஆதி நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை பல்வேறு நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கி அந்தந்த நபிமார்களின் சமுதாயம் நேர்வழி பெற்றிடுமாறு அல்லாஹ் அருள்புரிந்தான்.

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்திலிருந்து வெளியேறிய போது அல்லாஹ் கூறினான்:

(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

(குர்ஆன் 2:38-39)

இவ்வாறு மனிதர்களை நேர்வழிபடுத்த அல்லாஹ் அனுப்பிய வேதங்கிளில் இறுதியாக வந்தது தான் குர்ஆன் என்பதை அறிந்து வைத்திருக்கின்ற நாம் அது அருளப்பட்டதன் நோக்கம் மறந்து அதை இழவு வீட்டில் கத்தம் பாத்திஹா ஓதுவதற்கும் அது போன்ற தேவைகள் இல்லாத போது பட்டுத் துணியில் சுத்தி பத்திரமாக பரணிலும் வைத்திருக்கின்றோம்.  மார்க்கத்தில் விபரமுள்ள சிலர் அவ்வப்போது அதை எடுத்து அரபியில் அர்த்தம் தெரியாமல் ஓதிவருகிறோம்.  அப்படியே அதன் மொழிபெயர்ப்புகளைப் படித்தாலும் அது கூறும் ஏவல் விலக்கல்களைப் பற்றியும் அறிவியல் சான்றுகளைப் பற்றியும் முறையாகச் சிந்திப்பதில்லை!

ஏனென்றால் இஸ்லாமிய ஏவல் விலக்கல்களைப் பற்றி குர்ஆன் என்ன கூறினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நமது முன்னோர்களின் வழிமுறைகளை மட்டுமே நாம் பின்பற்றுகிறோம்.  ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் அது அருளப்பட்டதன் நோக்கம் குறித்து மிக அழகாக கூறுகின்றான்.

“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்  அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்..

 (அல்-குர்ஆன் 38:29.)

குர்ஆன் அதனைப் பற்றி சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுமாறு வலியுறுத்துகின்ற போது தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக புரோகிதக் கூட்டமொன்று சாதாரண மக்களுக்கு குர்ஆன் புரியாது என்று கூறி மக்களை குர்ஆனின் வழிகாட்டல்களிலிருந்து அதைப் பற்றி சிந்திப்பதை விட்டும் தடை செய்து, வழிகெடுத்து மக்களை நரகத்திற்கு தள்ளுவதற்கு எத்தனிக்கின்றனர்.

ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது மக்களை வழிகெடுப்பவர்கள் தங்களின் வழிகேட்டுக் கொள்கைகளை விட்டும் மக்கள் விலகிச் சென்றுவிடாதவாறு இருப்பதற்காக குர்ஆனின் பொருள் மகான்களுக்கும் ஞானிகளுக்களுக்கு மட்டும் தான் புரியும்! பாமர மக்களுக்குப் புரியாது என அவர்களைப் பயமுறுத்தி குர்ஆனின் போதனைகளைப் பற்றி சிந்திக்காதவாறு செய்து அவர்களின் சிந்தித்துணரும் ஆற்றல்களைச் சிதைக்கின்றனர்.

மக்களை வழிகெடுக்கும் இந்த வழிகேடர்களுக்கு அல்லாஹ்வே பதில் கூறுகின்றான்:

“அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.   

    (அல்-குர்ஆன் 11:1.)

“இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”

 (அல்-குர்ஆன் 16:89.)

எனவே சகோதரர்களே! அல்லாஹ் தனது திருமறையை தெளிவானதாக இறக்கியிருக்கின்றான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து விளங்க முடிகிறது. மக்களை வழிகெடுக்கும் கூட்டத்தினர்களின் ‘பாமர மக்களுக்கு குர்ஆன் புரியாது’ என்ற புரட்டு வாதங்களை புறந்தள்ளிவிட்டு அவனுடைய திருமறையை தினமும் சில வசனங்களையாவது பொருளுணர்ந்து படித்து, சிந்தித்து அதன்படி செயலாற்றிட வல்ல இறைவன் அருள்புரிவானாகவும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed