சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக புகாரீ 7526, 6327, 4723 ஆகிய இலக்கமிட்ட ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸலாத் என்ற சொல்லுக்கு பிரார்த்தனை எனவும், தொழுகை எனவும் இரு அர்த்தங்கள் உள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்கள் பிரார்த்தனை என்று பொருள் செய்து, அது குறித்து இறங்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
முந்தைய பதிப்புகளில் இதனடிப்படையில் தான் நாம் விளக்கம் அளித்திருந்தோம். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவது இன்னொரு காரணத்தால் ஏற்க இயலாததாக அமைந்துள்ளது.
இவ்வசனம் துஆ எனும் பிரார்த்தனை குறித்து அருளப்பட்டது என்றால் சப்தமிட்டும் பிரார்த்திக்கக் கூடாது. இரகசியமாகவும் பிரார்த்திக்கக் கூடாது; மாறாக நடுத்தரமான சப்தத்தில் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தருகிறது.
ஆனால் திருக்குர்ஆன் 7:55 வசனத்தில் சொல்லப்படும் துஆவின் ஒழுங்குகளுக்கு மாற்றமாக ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.(7:155)
இவ்வசனத்தில் இறைவனிடம் இரகசியமாக துஆச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளை இடுகிறான். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கத்தின் படி குறைந்த சப்தத்தில் மட்டும் தான் துஆச் செய்ய வேண்டும் என்பதுடன் இரகசியமாக துஆ செய்யக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் இரகசியமாக துஆச் செய்வதை வலியுறுத்தும் ஹதீஸ்களும் உள்ளன. இந்த ஆதாரங்களுக்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.
இரகசியமாக துஆச் செய்ய வேண்டும் எனக் கூறும் 7:55 வசனத்தில் துஆ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆனால் 17:110 வசனத்தில் துஆ என்ற சொல் இடம் பெறவில்லை. சலாத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது தொழுகை என்ற அர்த்தத்தில் அதிகமாகவும், துஆ என்ற அர்த்தத்தில் குறைவாகவும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இரு அர்த்தம் தரும் சொல்லை வைத்து துஆவின் சட்டங்களைப் புரிந்து கொள்வதை விட துஆ எனும் ஒரு அர்த்தம் தரும் சொல்லைக் கொண்ட 7:55 வசனத்தின் அடிப்படையில் சட்டம் எடுப்பது தான் பொருத்தமாகத் தெரிகிறது.
இவ்வசனம் எதற்காக அருளப்பட்டது என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றுக்கு மாற்றமாகக் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்த காலத்தில் தொழுகை நடத்தும்போது குர்ஆனைச் சப்தமாக ஓதி தொழுகை நடத்துவார்கள். மக்காவில் உள்ள இணைகற்பித்தவர்கள் இதைச் செவிமடுக்கும்போது குர்ஆனையும், அதை அருளிய அல்லாஹ்வையும், அதைக் கொண்டு வந்த நபியையும் விமர்சனம் செய்தார்கள். அப்போதுதான் இவ்வசனம் அருளப்பட்டு இணை கற்பிப்பவர்களின் இடையூறுகளுக்கு இடம் தரும் வகையில் சப்தமாகவும் ஓதாதீர். உம்மைப் பின்பற்றி தொழும் மக்களுக்கு கேட்காதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேர்வு செய்வீராக என்ற வசனம் அருளப்பட்டது.
பார்க்க : புகாரீ 4722, 7490, 7525
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஆரம்ப காலத்தில் இந்தக் கட்டளை அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவது தான் 7:55 வசனத்துடன் முரண்படாமல் உள்ளது.
சில வழிகேடர்கள் இப்போது நடைமுறையில் உள்ள தொழுகை முறை இவ்வசனத்துக்கு எதிரானது என்று வாதிடுகின்றனர்.
சில தொழுகைகளில் சப்தமிட்டும், சில தொழுகைகளில் சப்தமில்லாமலும் ஓதி நாம் தொழுகிறோம். மேலும் எல்லாத் தொழுகைகளிலும் பல துஆக்களை சப்தமின்றி ஓதி வருகின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டி உள்ளனர்.
இது மேற்கண்ட வசனத்துக்கு முரணானது என்றும் எல்லாத் தொழுகைகளிலும் சப்தமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நடுத்தர சப்தத்துடன் தான் ஓத வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
இது மக்காவில் இருந்த ஆரம்ப நிலை என்பதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளதால் இப்போது நடைமுறையில் உள்ள தொழுகை முறை இவ்வசனத்துக்கு எதிரானதல்ல.