*கோழைகள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாவர்*

*நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏக இறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்* (அல்குர்ஆன் 8:15)

நியாயமான காரணங்களுக்காகக் களத்தில் இறங்கிய பின் எவன் உயிருக்குப் பயந்து பின் வாங்குகின்றானோ அவன் இறைவனது கோபத்திற்குரியவன் என்று அல்லாஹ் இங்கே அடையாளம் காட்டுகின்றான். *உயிருக்கு அஞ்சியவர்களும், கோழைகளும் இறைவனது கோபத்திற்குரியவர்கள்* என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகின்றது.

அக்கிரமத்தையும், அநீதியையும் காணும் போது அதற்கெதிராகப் போராட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது போன்ற அறப்போரில் மடிந்து விட்டால் மறுமையில் இதற்கு வழங்கப்படும் பரிசுக்கு ஈடு இல்லை என்றெல்லாம் இஸ்லாம் கூறுகின்றது. *அக்கிரமமும், அநீதியும், தீமைகளும் தலைவிரித்தாடும் போது அதைக் கண்டும் காணாதிருக்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.*

*யார் தனது பொருட்களை பிறரிடமிருந்து காக்கும் போராட்டத்தில் கொல்லப்படுகின்றாரோ அவரும் ஷஹீத் (உயிர்த் தியாகி*) என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி); நூல்: புகாரி 2480

ஒரு பொருள் நமக்குச் சொந்தமானது என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அல்லது முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிகின்றது. அதை *அநியாயமாக எவரேனும் பறித்துக் கொள்ள முயன்றால் அதை மீட்கும் போராட்டத்தில் மடிந்து விட்டாலும் அவன் ஷஹீத்* எனும் உயர் பதவியை அடைகின்றான்.

தனக்குச் சொந்தமான ஒரு பொருளை அநியாயமாக எவரேனும் பறிக்க முற்படும் போது அந்தப் பொருளின் மதிப்பு உயர்ந்ததா? அல்லது தனது உயிரின் மதிப்பு உயர்ந்ததா? என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. *உயிரை விட எந்தப் பொருளும் மதிப்பு மிக்கவை அல்ல என்பதில் ஐயம் இல்லை.*

அப்படி இருந்தும் நபியவர்கள் இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கணக்குப் பார்த்திருந்தால் மேற்கண்ட பொன்மொழியைச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

*பொருட்களை மீட்பதற்காகப் போராடி மடிய வேண்டாம். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பொருட்களைப் பறிக்க வருபவனிடம் கொடுத்து விடுங்கள் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறாமல் அதை மீட்கும் போரில் உயிரைப் பறிகொடுப்பவனுக்கு மகத்தான அந்தஸ்தை வாக்களிக்கின்றார்கள்*.

அசத்தியத்திற்கெதிரான போராட்டங்களில் லாப நட்டக் கணக்குப் பார்க்க முடியாது. அக்கிரமத்தைக் கண்ட பிறகு வாளாவிருந்தால், அக்கிரமத்திற்குப் பணிந்தால் அக்கிரமம் மேலும் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக அழகாகச் சொன்னார்கள்.

தனது குதிரையின் முதுகின் மீது தயார் நிலையில் இருந்து கொண்டு எங்காவது அக்கிரமமோ, அநியாயமோ நடக்கக் கண்டால் *தனது குதிரையின் மீது பறந்து சென்று மரணம் தான் ஏற்படும் என்று தெரிந்தே அந்தத் தீமையைத் தடுக்க முயல்பவன் மனிதர்களில் மிகவும் சிறந்தவன்* என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 3503

*மரணம் நிச்சயம் என்று தெரிந்த நிலையில் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடுபவனே முஸ்லிம்களில் சிறந்தவன்*. அவனே உண்மையான முஸ்லிம். இப்படியெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் உலகில் எந்த அறப்போராட்டமும் நடக்காது. நடந்திருக்காது. அக்கிரமம் மேலும் துணிவு பெறும். நியாயவான்கள் நேர்மையாளர்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்படும்.

*அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக் கூடியவன் வேறு எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான். மறு உலக வாழ்வை மட்டுமே குறியாகக் கொண்டவன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்*!

*இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்குக் காட்டாதே! என்று பிரார்த்திக்கும் போது இறைவா! எங்களைக் கோழைகளாக ஆக்காதே! கோழைகளின் வழியில் எங்களை நடத்தாதே* என்பதும் அதன் பொருளாக அமைந்து விடுகின்றது.

*கோழைத்தனத்திலிருந்து விடுபவட்டவர்களே ஸிராதுல் முஸ்தகீம்* எனும் நேர்வழிக்குரியவர்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed