கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி.

அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி).

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார்.

முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும், ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.

உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி 4642

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed