குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?

கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்!

மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

“மாஷித்தா பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண். ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது. உடனே மாஷித்தா “பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு” என்று கூறினார். அப்போது அந்தப் பிள்ளை “நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவ்னைத் தானே?” என்று வினவினாள். அதற்கு மாஷித்தா “இல்லை! என்னையும், உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்வை” என்று கூறினார்.

மாஷித்தா, வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா (அலை) அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.

உடனே அந்தப் பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விஷயத்தையும் வினவினான். பிர்அவ்ன் கேட்டான் “என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?” என்று. அதற்கு மாஷித்தா “ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்” என்றார் உறுதியோடு.

கோபங்கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும்படி கூறினான். அப்போது மாஷித்தா “எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது” என்று கூறினார். பிர்அவ்ன் “என்ன, சொல்?” என்று கேட்டான். மாஷித்தா “என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்ய வேண்டும்” என்று.

கொடிய பிர்அவ்ன் மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான். அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையைப் பார்த்து “ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே” என்று தயங்கினார். அப்போது வல்ல அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு பேசும் சக்தியைக் கொடுத்தான். அக்குழந்தை “கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமை கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது” என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

வல்லவன் அல்லாஹ் மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொண்டு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்து விட்டான்.

அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: முஸ்னத் அஹ்மத், தபறானி, இப்னு ஹிப்பான், ஹாகிம்.

நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ் நீங்கள் குறிப்பிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இதுதான்.

இந்த ஹதீஸின் இறுதியில்

குழந்தைப் பருவத்தில் நால்வர் பேசியுள்ளனர். 1 ஈஸா நபி, 2 ஜுரைஜ் என்பாரின் தோழர், 3 யூசுஃப் நபிக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர், ஃபிர் அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன் என்று இப்னு அப்பாஸ் கூறினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட அதே விஷயம் இப்னு அப்பாஸின் கூற்றாக அல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸை வெளியிட்டவர்கள் இந்த இறுதிப் பகுதியை ஏன் வெளியிடவில்லை?

இதையும் வெளியிட்டால் இந்த ஹதீஸின் தரம் குறித்து சந்தேகம் வரும் என்பதால் தான் வெளியிடவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

அறிவிப்பாளர் குறித்த விமர்சனம்

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைப் பொருத்தவரை அதா பின் ஸாயிப் என்பார் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதா பின் ஸாயிப் என்பவர் இறுதிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அவர் வழியாக இந்த அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்று அல்பானி கூறுகிறார்.

ஆனால் இக்கூற்று சரியானதல்ல.

அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸ்களில் வேறு குறை இல்லாவிட்டால் அது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதே சரியான கருத்தாகும்.

இது குறித்து விரிவாக அறிய

அதா பின் ஸாயிப் பலவீனமானவரா

என்ற ஆக்கத்தை வாசிக்கவும்.

அல்பானி அவர்கள் சொன்ன காரணத்துக்காக இது பலவீனமானதல்ல என்றாலும் வேறு காரணங்களால் இதில் பலவீனம் உள்ளது.

அதா பின் ஸாயிப் என்பார் இதை ஸயீத் பின் ஜுபைர் என்பார் வழியாக அறிவிக்கிறார்.

இது பற்றி ஒரு விமர்சனம் உள்ளது.

அந்த விமர்சனம் இதுதான்.

ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் நபியின் கூற்றாகச் சொல்லாமல் நபித்தோழரின் கூற்றாகச் சொன்ன பல செய்திகளை நபியின் கூற்றாக அதா பின் ஸாயிப் அறிவித்துள்ளார் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்கள்.

நூல் மன்ஹஜுல் இமாம் அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸை ஸயீத் பின் ஜுபைர் வழியாகவே அதா பின் ஸாயிப் அறிவித்துள்ளதால் இது நபித்தோழரின் கூற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

கருத்துக் குழப்பங்கள்

இந்த ஹதீஸில் கருத்துக் குழப்பங்களும் உள்ளன.

நீங்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸில்

அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய

என்ற வாசகம் உள்ளது. ஆனால் மூலத்தில் வாசகம் இப்படி இல்லை.

இந்த வாசனை பிர்அவ்னின் மகளாகிய மாஷிதா மற்றும் அவரது குழந்தைகளின் வாசனை

என்று உள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற எல்லா நூல்களிலும் மாஷிதா என்பவர் பிர்அவ்னின் மகள் என்று தான் ஆரம்பிக்கின்றது.

மாஷிதாவின் மகளுடைய நறுமணம் என்று ஆரம்பிக்கும் இந்த ஹதீஸ் உடனே ஆள் மாறாட்டம் செய்கிறது. அதாவது மாஷிதா என்பார் பிர்அவ்னின் மகளுக்கு தலைவாரும் வேலைக்காரப் பெண் என்று ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது. இதன் பின்னர் முழு ஹதீஸும் மாஷிதா என்பார் பிர்அவ்னின் மகள் அல்ல என்று தொடர்கிறது.

ஆரம்பம் பிர்அவ்னின் மகள் என்று துவங்கி சம்பவத்தைச் சொல்லும் போது வேறு பெண்ணுடைய சம்பவமாக மாறுகிறது.

இதன் அறிவிப்பாளர் குழப்பத்தில் இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஆரம்பத்தில் தவறாகச் சொல்லி விட்டார்; பின்னர் சம்பவத்தை சரியாகச் சொல்லி இருக்கலாம் அல்லவா என்றும் கருத முடியாது. ஏனெனில் ஹதீஸை முடிக்கும் போது குழந்தைப் பருவத்தில் பேசிய நால்வரில்

பிர்அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன் என்று கூறப்படுகிறது. அதாவது பிர்அவ்னின் பேரன் தான் பேசியவர் என்று ஹதீஸ் முடிகிறது என்றால் மாஷிதா தலை வாரி விட்டதில் இருந்து நடந்த எல்லா உரையாடலும் பொய்யாகிப் போகிறது. அதாவது முதல் வாக்கியம் நடுவில் உள்ளதை மறுக்கிறது. நடுவில் உள்ள வாக்கியம் கடைசியில் உள்ளதை மறுக்கிறது.

இந்த வகையில் இந்த ஹதீஸ் தெளிவாக செய்தியைச் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது.

மற்றொரு கருத்துக் குழப்பம்

குழந்தைப் பருவத்தில் பேசிய நால்வரைப் பற்றிக் கூறும்போது யூசுப் நபியின் தோழர் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் அவர்களின் கூற்றாக சொல்லப்பட்டதிலும், நபிகள் நாயகத்தின் கூற்றாக சொல்லப்பட்டதிலும் இந்தக் குழந்தை பற்றி கூறப்படுகிறது.

இதன் விபரம் என்னவென்றால் யூசுப் நபி மீது அவரது எஜமானி பழி சுமத்திய போது, ஒருவர் சாட்சி சொன்னார் என்று 12:26 வசனம் சொல்கிறது.

யூசுப் நபிக்கு சாதகமாக சாட்சி சொன்னது ஒரு குழந்தை தான். அந்தக் குழந்தையைப் பற்றித் தான் இங்கே கூறப்படுகிறது என்பது இதன் விளக்கம்.

திருக்குர்ஆனை வாசிக்கும் போது குழந்தை சாட்சியம் கூறியது என்று கருத முடியாது.

அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்” என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்டபோது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது” என்றார்.

திருக்குர் ஆன் 12:27,28

குழந்தை சாட்சியம் சொன்னால் அது பேசுவதே யூசுப் நபியின் உண்மைக்கு ஆதாரமாகி விடும். ஆனால் சாட்சி கூறியவர் இவரது சட்டை முன் புறம் கிழிக்கப்பட்டு இருந்தால் இவர் தான் குற்றவாளி; பின்பக்கம் கிழிக்கப்பட்டு இருந்தால் அவள் தான் குற்றவாளி என்றார். சட்டை பின்பக்கம் கிழிக்கப்பட்டதைப் பார்த்து விட்டு அவள் தான் குற்றவாளி என்று குடிவு செய்யப்பட்டதாக அந்த வசனம் கூறுகிறது

சட்டை எவ்வாறு கிழிக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் தான் யார் மீது குற்றம் என முடிவு செய்யப்பட்டிருக்கும் போது குழந்தை பேச வேண்டிய அற்புதம் தேவையற்றதாக உள்ளது. குழந்தையைப் பேசவைத்து யூசுப் நபியின் தூய்மையை அல்லாஹ் நிரூபிக்க விரும்பினால் எவ்வித ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை. குழந்தை பேசியதையே ஆதாரமாகக் கொண்டு யூசுஃப் நபி குற்றமற்றவர் என முடிவு செய்திருப்பார்கள்.

குழந்தையைப் பேச வைப்பது அதன் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். இங்கே குழந்தை பேசியது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சட்டை கிழிந்த விதம் தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

எனவே சாட்சி சொன்னவர் குழந்தை அல்ல; தர்க்கரீதியாக அணுகும் அறிவு படைத்த ஒருவர் என்பதே அவ்வசனத்தில் இருந்து பெறப்படும் உண்மையாகும். இந்த உண்மைக்கு மாற்றமாக மேற்கண்ட குழப்பமான ஹதீஸ் அமைந்துள்ளது.

மேலும் புகாரியில் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கு முரணாகவும் இந்தக் குழப்பமான ஹதீஸ் அமைந்துள்ளது.

 

3436 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் பேசியதில்லை.

(ஒருவர்) ஈசா (அலை) அவர்கள்.

(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர்.

(ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்த போது அவருடைய தாயார் அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா! இவனை விபச்சாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே! என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது வழிபாட்டுத்தலத்தில் இருந்த போது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

ஆகவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபச்சாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை இடித்து கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை, (இன்ன) இடையன் என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் வழிபாட்டுத்தலத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.

(குழந்தைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே அவள், இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. – இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண்,

இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்டதற்கு அக்குழந்தை, வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) நீ திருடிவிட்டாய்; விபச்சாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பதிலளித்தது.

நூல் : புகாரி 3436

மூன்று பேரைத் தவிர யாரும் குழந்தைப் பருவத்தில் பேசியதில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட குழப்பமான ஹதீஸ் நால்வர் எனக் கூறுகிறது.

எண்ணிக்கையில் ஒன்று அதிகமாவது மட்டுமின்றி மூன்றாம் நபருக்குப் பதில் வேறு நபர் பற்றி மற்றிக் கூறப்படுகிறது.

எனவே புகாரியில் பதிவாகியுள்ள இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு முரணாக இருப்பதாலும் இந்த ஹதீஸ் தள்ளப்பட வேண்டிய ஹதீஸ் என்பது உறுதியாகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *