குலத்தால் பெருமையில்லை

இவ்விரு வசனங்களும் (49:13, 53:32) பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. 

இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று 49:13 வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.

ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மற்றவனை பிறப்பால் தாழ்ந்தவன் என்றும் எவரும் கூற மாட்டோம்.

இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இதை வெறும் வரட்டுத் தத்துவமாக இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

மனிதர்கள் ஆதாம், ஏவாளிலிருந்து தோன்றினார்கள் என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.

ஆனாலும் இஸ்லாம் மட்டுமே இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித்தனி தேவாலயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.

நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவர் இஸ்லாத்தை ஏற்றாலும் அவரிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவர் முஸ்லிம் மட்டுமே.

முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பன போன்ற பெயர்களால் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.

திருக்குர்ஆனையும், நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிரிந்துள்ளனர். 

ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும். 

ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது. 

மக்காவில் உள்ள கஅபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர். 

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். அது சமமாகவும் இருக்க வேண்டும். ஆனால் பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியவில்லை.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து, முழுகி, புத்தாடை அணிந்து மந்திரத்தை அறிந்து, கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.

நாங்கள் மட்டும் தான் நேரடியாக பூஜை செய்ய வேண்டும்; நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.

எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால், அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அவர் கடவுளாக இருக்க முடியாது.

உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்.

இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.

குடியரசுத் தலைவர் வந்து விட்டார் என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன்வரவில்லை. குடியரசுத் தலைவரும் ‘என்னை முன்வரிசைக்கு அனுப்புங்கள்’ என்று கேட்டதும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

கிடைத்த இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு பராக் சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை.

எந்தப் பள்ளிவாசலிலும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை.

எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

அனைவரும் ஒரு தாய், தந்தையில் இருந்து பிறந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ளும் போது ‘நான் தமிழன்; நீ மலையாளி; அவன் கன்னடன் எனவே நான் உயர்ந்தவன் என்று கூறமுடியாது.

‘நான் இந்தியன்; அவன் பாக்கிஸ்தானியன்; நீ அமெரிக்கன் என்று தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் இந்தக் கொள்கை மாற்றி விடுகின்றது.

பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு சகோரத்துவத்தை இஸ்லாம் பேணுகிறது

மனிதர்கள் அனைவரும் ஒரு கடவுளால் படைக்கப்பட்டவர்கள்; அவர்கள் அனைவரும் ஒரு ஜோடியில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் இவ்வசனங்கள் தீண்டாமையைச் சவக்குழிக்கு அனுப்புகின்றன.

எல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவரும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும்.

குலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *