குர்ஆன் எனும் வாழ்வியல் போதனை

திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது.

அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

கடவுள் கொள்கை

உலகத்தைப் படைத்து, இயக்கிக் கொண்டிருப்பவன் ஏக இறைவனான ஒரே கடவுள் தான். அவனுக்கு நிகராக, இணையாக யாருமில்லை என்பது தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும்.

உலகத்திலேயே பாமரன் முதல் பண்டிதன் வரை அத்தனை ரக மக்களும் எளிதில் விளங்கக் கூடிய ஓர் அற்புதமான கடவுள் கொள்கையை மனித சமுதாயத்திற்கு வழங்கியது திருக்குர்ஆன் தான்.

படைப்பினங்களில் உயிருள்ளவரோ, இறந்தவரோ எவரும் கடவுளாக முடியாது.

வான்வெளியின் உச்சத்தில் உலா வந்து, உயிரினங்கள் அத்தனையும் வாழ்வதற்கு ஒளி வீசிக் கொண்டிருக்கும் உதய சூரியன், அதனிடம் இரவலாக ஒளி வாங்கி இரவில் பிரகாசிக்கும் சந்திரன், வான வீதியில் நீந்திக் கொண்டிருக்கின்ற கோள்கள், கருவிழியின் கட்டுக்குள் வராமல் காட்சியளிக்கின்ற கட்டுக்கடங்காத இன்ன பிற நட்சத்திரங்கள், நிலம் முழுவதையும் நீங்காமல் சுற்றி வளைத்து, சூழ நின்று, அயராது அலை எழுப்பி ஆர்ப்பரிக்கின்ற நீல நிறக் கடல், நிலப்பரப்பின் நீள அகலப் பரப்பில் பரவிக் கிடக்கும் கல், மண், பச்சை பசேல் என்று வளர்ந்து பார்ப்பவரைப் பரவசமடையச் செய்யும் தாவர இனங்கள், உயிரினங்கள் என இவற்றில் எதுவும் கடவுளாக முடியாது என்ற, சிந்தனைக்கு இனிய, எளிய இறைக் கோட்பாட்டைத் திருக்குர்ஆன் மக்களுக்கு வழங்குகின்றது.

ஆனால் நடைமுறையில் முஸ்லிம்கள், ஆன்மீகம் என்ற பெயரில் அற்ப மனிதர்களான ஷைகுகளையும் பீர்களையும் கடவுளாக வணங்கத் தலைப்பட்டு விட்டனர். இறந்தவர்களுக்குக் கப்ருகளும் தர்ஹாக்களும் கட்டி அவர்களை வணங்கவும் வழிபடவும் ஆரம்பித்து விட்டனர். குர்ஆன் கூறுகின்ற உண்மையான கடவுள் கொள்கையைக் கைவிட்டதன் மூலம் அவர்கள் குர்ஆனை விட்டும் வெகுதூரம் விலகிப் போய்விட்டனர்.

இறைத்தூதரைப் பின்பற்றுதல்

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது. ஆனால் நமது சமுதாயமோ ஷாஃபி, ஹனஃபீ, ஹன்பலி, மாலிக்கி என்று இமாம்களைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டது.

மத்ஹபுகள் கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் கூட நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று கூறி, புதுவிதமான வழிகேட்டை உருவாக்கி விட்டனர். இங்கேயும் திருக்குர்ஆன் கூறுகின்ற கட்டளையைக் கைவிட்டதன் மூலம் திருக்குர்ஆனை விட்டும் சமுதாயம் தூர விலகிச் சென்று விட்டது.

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறும் யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்)

அதாவது, அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே சமுதாயம் ஆட்டம் கண்டு விட்டது.

குடும்ப வாழ்க்கை

திருமணம்

பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் இதற்கு நேர்மாற்றமாக பெண்ணிடத்தில் வரதட்சணை வாங்கித் திருமணம் முடிக்கும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. குர்ஆனின் இந்தக் கட்டளையிலும் சமுதாயம் முற்றிலும் விலகி நிற்கின்றது.

விவாகரத்து

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் பிரிந்து கொள்வதற்குத் தலாக் என்ற வழிமுறையை திருக்குர்ஆன் தந்திருக்கின்றது. அந்தத் தலாக்கை மூன்று கால கட்டங்களில் சொல்ல வேண்டும் என்றும் கணவனுக்கு வழி காட்டியிருக்கின்றது. ஒவ்வொரு கால கட்டமும் சுமார் 3 மாதங்கள் கொண்டதாகும். இதில் இரண்டு தலாக்குகள் மீட்டிக் கொள்ளக் கூடிய தலாக் ஆகும். மூன்றாவது தலாக் தான் மீட்டிக் கொள்ள முடியாத தலாக் ஆகும்.

குர்ஆன் கட்டளையிட்ட தலாக்கிற்கு நேர் முரணாக ஒரே அமர்வில் முத்தலாக் என்று சொல்லி மனைவியை விவாகரத்துச் செய்கின்ற அநியாயத்தைச் செய்வதன் மூலம் குர்ஆனை இந்தச் சமுதாயம் புறக்கணித்து, அதை விட்டும் வெகுதூரத்தில் விலகி நிற்கின்றது.

பொருளாதாரம்

திருக்குர்ஆன் வட்டியைத் தடை செய்திருக்கின்றது. அதற்கு நிரந்தர நரகம் என்றும் என்று குறிப்பிடுகின்றது. குர்ஆன் கூறக்கூடிய இந்தப் பொருளாதார வழிகாட்டலை விட்டும் சமுதாயம் முற்றிலும் விலகி வெளியேறி, வட்டியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

வட்டி வாங்குவது, கொடுப்பது என்பது சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதைப் பற்றிய உறுத்தலோ உள்ளத்தைத் துளைக்கின்ற குற்ற உணர்வோ இல்லாமல் இந்தச் சமுதாயம் எட்டாத ஒரு தூரத்தில் சென்றுவிட்டது. வான்மறைக் குர்ஆனை அன்றாட வாழ்க்கை நெறியாகவும் வாழ்வியலாகவும் ஆக்குவதை விட்டும் வானளவு தூரத்தில் சென்று விட்டது.

இதன் பொருள் என்ன?

தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக, தன்னுடைய வாழ்வில் குர்ஆன் குறுக்கிடக் கூடாது என்று ஒரு முஸ்லிம் நினைக்கின்றான். அதாவது அந்தக் குர்ஆனை அவன் வெறுக்கின்றான் என்பது தானே அதன் அர்த்தமாக இருக்க முடியும்? குர்ஆனை ஒருவர் வெறுத்தால் நாளை மறுமையில் என்ன விளைவு ஏற்படும்?

இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.

“என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’’ என்று இத்தூதர் கூறுவார்.

(அல்குர்ஆன்:25:30)

ஆம்! தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் புகார் செய்வார்கள். தூதரின் புகார் அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் மறுக்கப்படாத விண்ணப்பமாகும். விண்ணப்பிக்கப் பட்ட புகாருக்கு விதிக்கப்படும் தண்டனை என்ன? நரகம் தான் அதற்குக் கூலியாகும்.

குர்ஆன் கூறும் இந்தப் பாவங்களை விட்டும் ஒருவர் விலகி விடுகின்ற போது அவர் திருக்குர்ஆனிடம் ஐக்கியமானவராக, அதை அள்ளி அரவணைத்தவராக ஆகி விடுவார். அவர் அற்புதமிகு திருக்குர்ஆனைத் தனது வாழ்நாள் முழுமைக்கும் வாழ்வியலாக்கியவர் ஆவார்.

பிறகு என்ன? தன்னை அரவணைத்தவரை, தன்னையே வாழ்நாள் முழுமைக்கும் வாழ்க்கை நெறியாகவும் வாழ்வியலாகவும் ஆக்கிக் கொண்டவரை, அல்லாஹ்வின் சுவனத்தை அடையச் செய்வதற்கும் அதில் ஆனந்தமாகக் குடியமர்த்துவதற்கும் அது பொறுப்பேற்றுக் கொள்கின்றது.

இதோ குர்ஆன் கூறுகின்றது.

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

(அல்குர்ஆன்:7:170)

அதாவது உரிய கூலியான சுவனத்தைப் பரிசாக அளிக்கின்றது.

ஆம்! நாளை மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் ஸஜ்தாச் செய்து, மன்றாடிப் பரிந்துரை செய்வார்கள். அவர்களது ஒவ்வொரு பரிந்துரையின் போதும் நம்பிக்கை கொண்டோர் அத்தனை பேர்களும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அல்குர்ஆன் தடுத்தவர்களைத் தவிர!

பார்க்க: புகாரி:4476, 6565, 7401

ஆக, நாளை மறுமையில் நமக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை அல்குர்ஆன் தான் தீர்மானிக்கின்றது. அப்படிப்பட்ட அல்குர்ஆனோடு தொடர்பு வைத்து வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *