குர்ஆன் எனும் வாழ்வியல் நெறி

குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது.

குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்.

ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக வாய்க்கப்பட்டும் கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நன்மை ஓடையைத் தாங்களே அணை போட்டுத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

குர்ஆனைத் தெரிந்து கொள்வது சிரமமாக இருந்த கால கட்டத்தில் கூட நபித்தோழர்களும், நபித்தோழியர்களும் குர்ஆன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அறிந்து வைத்திருந்ததால் நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ஓதும் குர்ஆன் வசனங்களையும், அத்தியாயங்களையும் கேட்டு மனனம் செய்துக் கொண்டார்கள்.

இன்றைய நவீன வாழ்க்கையில் உலகமே நம் உள்ளங்கையில் இருக்கிறது. நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே குர்ஆனை அரபியிலும் ஓதலாம், தமிழிலும் பொருளுணர்ந்து படிக்கலாம்.

குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாதவர்கள் கூட, ஆசிரியர்கள் இல்லாமலே வலைத்தளங்களை ஆசிரியர்களாகக் கொண்டு கற்றுக் கொள்ளலாம். அல்லது குர்ஆன் ஓதத்தெரியாமல் எவ்வளவு வயதைக் கடந்திருந்தாலும் ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளலாம்.

வயது கடந்து விட்டது என்ற வீண் வெட்கவுணர்வு இவ்விஷயத்தில் நன்மைகளில் முந்திச் செல்வதை விட்டும் நம்மைத் தடுத்து விட வேண்டாம். ஏனெனில், குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதற்கான நன்மைகள் ஏராளம்! ஏராளம்!

அல்லாஹ்வின் அருள் மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன்.மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்: திர்மிதீ 2910

‘‘குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4937

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, தொழுகையை நிலை நாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இழப்பில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்த்து (நல் வழியில்) செலவிடுவோர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.

(அல்குர்ஆன்:35:29, 30)

சற்றுக் கற்பனையாகக் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதினாலே 19 எழுத்துக்கள் என்ற அடிப்படையில் 190 நன்மைகள் கிடைக்கும். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் குர்ஆனில் ஒரு பக்கத்தை ஓதி வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? நம் கற்பனை கணக்கிற்குக் கூட எட்டாத எண்ணிக்கையளவு நன்மைகளை அள்ளித் தருகிறது அல்குர்ஆன்.

இந்த நன்மைகளோடு சேர்த்து இறைவனின் அருள் மழையையும் நம் வாழ்வில் பொழிய வைக்கிறது.

‘‘மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5231 (சுருக்கம்)

இவ்வாறாக, திருக்குர்ஆனை அதன் மூல மொழியில் படிப்பது, பல நன்மைகளையும் இறையருளையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கின்றது.

அடுத்து, குர்ஆனைப் பொருளுணர்ந்து படிப்பதன் அவசியத்தையும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் குர்ஆன் நமக்குப் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன்:8:2,3,4)

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.

(அல்குர்ஆன்:22:35)

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:5:83)

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

(அல்குர்ஆன்:39:23)

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

(அல்குர்ஆன்:59:21)

மேற்படி வசனங்கள் யாவும் குர்ஆன் நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்துப் பேசுகின்றன. அதன் ஒட்டுமொத்த சாராம்சமும் இறையச்சம் என்பதுதான். நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை படரச் செய்து, பாவங்களில் விழுந்துவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் கேடயமாகவும், நன்மைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் பாலமாகவும் குர்ஆன் இருக்கும் என்பதை மேற்படி வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இத்தகைய மாற்றம் நம்மிடத்தில் எப்போது ஏற்படும்? நாம் என்ன படிக்கின்றோம் என்று பொருளுணர்ந்து படிக்கும் போதுதான். ஆங்கிகலம் தெரியாத ஒருவர் ஆங்கில செய்தித் தாள் படிக்க வேண்டும் என்றால் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ள, அதன் பொருளை உணர்ந்து படிக்க வேண்டும்.

அதுபோலத்தான் குர்ஆனில் உள்ள செய்திகள் நமக்குத் தெரிய வேண்டும் என்றால் அதன் பொருளோடு அதைப் படிக்க வேண்டும். அந்தச் செய்திகள் தெரிந்தால் தான் இறைவனைப் பற்றித் தெரியும். இறைவனைப் பற்றித் தெரிந்தால் தான் அவன் மீது அச்சம் ஏற்படும். அவன் மீது அச்சம் ஏற்பட்டால் தான் பாவங்கள் செய்யாமல் நன்மைகளை நோக்கி விரைவோம். ஆனால் இன்றைக்கு இதுபோன்று குர்ஆனைப் படிப்போர் மிக மிகக் கணிசமான தொகையினரே!

குர்ஆன் தான் நமக்கு அருளப்பட்ட வேதம். அதைப் படிப்பது தான் நமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பலன் அளிக்கும். ஆனால் இன்று அந்தக் குர்ஆனை மறந்துவிட்டு, அதன் நன்மைகளை விட்டுவிட்டு, இஸ்லாத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத மவ்லிதுப் புத்தகங்களில் தங்களில் ஒட்டுமொத்த வாழ்வையும் சிலர் அடகு வைத்திருப்பதை பார்க்கின்றோம்.

ஆண்டுக்கொரு முறையோ அல்லது இரு முறையோ, யாரேனும் இறந்து விட்டாலோ, அல்லது ரமலான் வந்து விட்டாலோ குர்ஆனைத் திறப்பவர்கள் மவ்லிது கிதாபுகளைத் தினந்தோறும் பக்தியோடு அணுகக் கூடிய காட்சிகளைப் பார்க்கின்றோம்.

இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத, இணைவைப்புக் கொள்கையை உள்ளடக்கிய மவ்லிதுக் கிதாபுகளை விட்டொழிப்போம். குர்ஆன் எனும் நம் இறைவேதத்தோடு தோழமை கொள்வோம்.

குர்ஆனை அரபு மொழியில் ஓதி, நன்மைகளை மலைச் சிகரங்களாக மறுமைக்குச் சேமிப்போம். பொருளுணர்ந்து படிப்பதன் மூலம் இறையச்சத்தைப் பெற்று, நரகத்திற்கான கேடயத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed