குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓத வேண்டுமா?

திருத்தமாக ஓதுமாறு அல்லாஹ் கூறுகிறான்

ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைபிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள முடியும்.

குர்ஆன் அரபு மொழியில் அமைந்துள்ளது. அரபு வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அம்மொழியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறையைப் பேணி குர்ஆனை ஓதுவது அவசியம். இல்லையென்றால் நாம் பிழையாக ஓத நேரிடும்.

குர்ஆனை பிழையின்றி திருத்தமாக ஓத வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

அல்குர்ஆன் (73 : 4)

அரபு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்துவிட்டால் இறைவன் இட்ட இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றியவர்களாகி விடுவொம்.

ஆனால் நடைமுறையில் தஜ்வீத் என்றொரு கலை இருக்கின்றது. தஜ்வீத் என்றால் சிறப்பாக ஓதுதல் என்பது பொருள். இதன் மூலம் அழகுற ராகத்துடன் ஓதுவதற்குப்பயிற்சியளிக்கப்படும். இதை அறிந்துகொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் அறிந்து கொள்வது சிறந்தது.

வசன நடைக்கு இலக்கணம் இருப்பது போல் கவிதை நடைக்கும் எல்லா மொழிகளிலும் இலக்கணம் உண்டு. இராகம் போட்டு ஓதும் போது இந்த விதியைக் கடைப்பிடிப்பதும் அவசியம். ஆனால் தஜ்வீத் என்ற பெயரில் குர்ஆனுடன் விளையாடும் மடமைகளும் சொல்லித் தரப்படுகின்றன. அவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக இந்த இடத்தில் நிறுத்த வேண்டும்; இந்த இடத்தில் நிறுத்தக் கூடாது என்பது போலி தஜ்வீதாகும். ஒரு வாசகத்தை முழுமைப்படுத்தும் வகையில் நிறுத்தலாம். அப்படி மூச்சு இழுக்க முடியாவிட்டால் நமது மூச்சின் சக்திக்கு தக்கவாறு நிறுத்திக் கொள்ளலாம். இது மனிதனின் சக்திக்கு உட்பட்டு செய்ய வேண்டிய ஒன்றாகும். இதை விதியின் கீழ் அடைக்க முடியாது.

மேலும் ஒரு வசனத்தின் இடையில் நிறுத்தினால் விட்ட இடத்தில் இருந்து ஓதாமல் அதற்கு முன்னால் ஓரிரு வார்த்தைகளை சேர்த்து ஓத வேண்டும் என்ற விதி தஜ்வீதில் உள்ளது. இது குர்ஆனுடன் விளையாடுவதாகும்.

உதாரணமாக

சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலல்லாலீன்

இந்த வசனத்தில் சிராதல்லதீன அன் அம்த அலைஹிம் என்பது வரை தான் நமக்கு மூச்சு இழுக்க முடிந்தால் அட்துடன் நிறுத்தி விட்டு அடுத்த வாசகத்தில் இருந்து ஓத வேண்டும் என்பது தான் சரியானது.

ஆனால் தஜ்வீத் என்ன சொல்கிறது என்றால் அலைஹிம் என்ற இடத்தில் நிறுத்தியதால் அலைஹிம் என்பதை மீண்டும் சொல்லி அதில் இருந்து தான் ஓத வேண்டுமாம்.
சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் அலைஹிம் கைரில் மக்லூபி

அதாவது குர்ஆனில் ஒரு அலைஹிம் இருக்க இவர்கள் இரண்டு அலைஹிம் ஆக்கி விடுகிறார்கள். குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் சேர்க்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார் என்று தெரியவில்லை. இது போன்ற மடமைகளும் தஜ்வீதில் உள்ளதால் சரியானதை ஏற்று தவறானதை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed