குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா?

பசி, தூக்கம், பாலுணர்வு போன்ற விஷயங்களை மனிதனின் இயல்புகளாக இறைவன் ஆக்கியுள்ளான். மனிதனின் பாலுணர்வுக்கு வடிகாலாக திருமணம் என்ற முறையை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும், அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 5066

சாப்பிடாமல் தன்னைத்தானே நோவினைப்படுத்துவதையும், உறங்காமல் உடலைக் கெடுத்துக் கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது போன்று ஒருவர் தன் பாலுணர்வை முறையான அடிப்படையில் தீர்த்துக் கொள்ளாவிட்டால் அது தனக்குத் தானே செய்யும் அநீதியாகும். இது ஒரு கட்டத்தில் அவனை விபச்சாரத்தில் தள்ளிவிடும்.

ஒருவர் மற்றவரின் பாலுணர்வுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஆணும், பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இவ்விருவரும் நீண்ட காலம் பிரிந்திருந்தால் இந்த ஒப்பந்தத்தை மீறும் நிலை ஏற்படுகின்றது. மனைவியின் இல்லறத் தேவையை கணவனால் நிறைவேற்ற முடியாமல் போகின்றது.

ஆண்களுக்கு பின்வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1975

பெண்கள் தவறிழைப்பதற்கு அவர்களுடைய இல்லறத் தேவையை நிறைவு செய்யும் கணவன் அருகில் இல்லாமல் இருப்பதே காரணமாக உள்ளது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக சில இளைஞர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தங்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞர்களின் இல்லறத் தேவையைக் கவனத்தில் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

 

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

சம (வயதுடைய) இளைஞர்களான நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் நல்ல நண்பராகவும் இருந்தார்கள். – (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டு வந்த (எங்கள் குடும்பத்)தவர்களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணித்திடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 631

மனைவியை விட்டுப் பல வருடங்கள் பிரிந்து வாழ்பவர்களுக்கு இது சாத்தியமே இல்லை. இந்தச் சூழ்நிலை எப்போதாவது அவர்களை மானக்கேடான விஷயங்களில் தள்ளிவிட அதிக வாய்ப்புள்ளது.

எனவே தேவைக்கும் அதிகமான பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக கட்டிய மனைவியை விட்டு பல வருடங்கள் பிரிந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed