கிலாஃபத் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கிலாஃபத் எப்போது வரும்?

ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பது கிலாஃபத் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இச்சொல்லில் இருந்து தான் கலீஃபா என்ற சொல் பிறக்கிறது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட போது மன்னர், அதிபர், ராஜா போன்ற பெயரில் அவர்கள் அழைக்கப்படவில்லை. கலீஃபத்து ரசூலில்லாஹ் – அதாவது நபிகள் நாயகத்தின் கலீஃபா எனும் பிரதிநிதி என்று தான் அழைக்கப்பட்டார்கள்.

அதாவது அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னர் அவர்களின் இடத்துக்கு வந்த அவர்களின் பிரதிநிதி என்ற கருத்தில் அபூபக்ர் அவர்கள் கலீஃபத்து ரசூலில்லாஹ் என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் இச்சொல் மருவி வெறும் கலீஃபா என்று ஆனது.

அரபு மொழியில் இவ்வாறு இரண்டு சொற்களில் ஒன்றை விட்டு விட்டு ஒன்றை மட்டும் குறிக்கும் வழக்கம் சர்வசாதாரணமாக இருந்து வந்தது.

மதீனா என்ற சொல்லுக்கு ஊர் என்பது தான் பொருள். எந்த ஊரையும் மதீனா என்று சொல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யஸ்ரிப் என்ற நகருக்கு வந்த பின்னர் அந்த ஊர் மதீனா அன்னபி (நபியின் ஊர்) என்று சொல்லப்பட்டது. பின்னர் இது மருவி வெறும் மதீனா என்று ஆனது.

அலியின் ஆதரவாளர்கள் ஷீஆ அலி என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டார்கள். இதன் பொருள் அலீ கட்சியினர் என்பதாகும். பின்னர் இது வெறும் ஷீஆ என்று மருவியது

அது போல் கலீஃபா ரசூலில்லாஹ் என்பது வெறும் கலீஃபா என்று ஆனது.

ஆட்சித் தலைவரைக் குறிக்க இமாம், மாலிக், சுல்தான், அமீருல் ஆம்மா. போன்ற பல்வேறு வார்த்தைகள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நபியவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் அவற்றுள் எந்த ஒன்றையும் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலீஃபத்து ரஸூலில்லாஹ் – அல்லாஹ்வின் தூதரின் வழியில் செல்பவர் என்பதைத் தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். நபித்தோழர்களும் அவர்களை கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்று தான் அழைத்தனர்.

மன்னர், அதிபதி என்று பொருள்படும் மலிக், சுல்தான் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நபியவர்களின் பிரதிநிதி எனப் பொருள்படும் கலீஃபா என்ற வார்த்தையையே அவர்கள் விரும்பினார்கள்.

அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் தன்னுடைய வழியில் நடக்கும் ஆட்சியை கிலாஃபத் எனவும், அத்தகைய ஆட்சியாளர்களைக் கலீஃபாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், அமீர் கருத்த அடிமையாக இருந்தாலும் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன். ஏனெனில் எனக்குப் பின் உங்களில் வாழ்பவர்கள் அதிகம் கருத்து வேறுபாடுகளைக் காண்பார்கள். அப்போது நீங்கள் என்னுடையை வழிமுறையையும், நேர்வழி பெற்ற நேர்மையான கலீஃபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். அதைப் பற்றிப் பிடித்து கடைவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இர்ஃபாள் பின் ஸாரியா (ரலி)

நூல் : திர்மிதி 3600

தனக்குப் பின் வரக்கூடிய, தன்னுடைய வழியில் நடக்கக் கூடிய ஆட்சியாளர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலீஃபாக்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

 

அல்லாஹ்வுடைய கலீஃபாவே என்று அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபா ஆவேன். (அல்லாஹ்வின் கலீஃபா அல்ல) இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன். இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன். இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ முலைக்கா

நூல் : அஹ்மத் 56

எனினும் இமாம், சுல்தான், அமீருல் ஆம்மா ஆகியவர்களுக்கும், கலீஃபாக்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.

அதாவது கலீஃபாக்கள் நபித்துவ வழியில் ஆட்சி நடத்தக் கூடியவர்கள் என்பதாகும். இமாம், சுல்தான், மலிக், அமீருல் ஆம்மா ஆகிய சொற்களின் பொருள் பொதுவாக ஆட்சி செலுத்துபவர்கள் – அரசர்கள் என்பதாகும்.

நபிவழியில் ஆட்சி செய்யாவிட்டாலும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால் கலீஃபா என்ற சொல்லை நபிவழியில் ஆட்சி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம்களிடமிருந்து முதலில் விடுபடுவது குர்ஆன் மற்றும் நபிவழியின் பிரகாரம் அமைந்திருந்த இஸ்லாமிய ஆட்சிதான் என்று நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஹ்மத் 22214

முஸ்லிம்களிடமிருந்து முதலில் பறிக்கப்படுவது இறைச்சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சிதான். நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்துவத்துத்தின் அடிப்படையிலான கலீஃபாக்களின் ஆட்சிக்குப் பிறகு அன்றிலிருந்து இன்று வரை உலகில் எங்கும் முழுக்க முழுக்க இறைச்சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி ஏற்படவில்லை.

இந்த இறைச்சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி பின்னர் எப்போது தோன்றும் என்பதையும் நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும்.

அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.

நூல் : அஹ்மத் 17680

நபியவர்களின் முன்னறிவிப்பின்படி உலக அழிவிற்கு முன்னர்தான் நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த ஆட்சி யார் தலைமையில் அமையும் என்பதையும் நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி.

மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று ஈசா (அலை) அவர்கள் கியாமத் நாளுக்கு முன்பு வருகை தருவார்கள். அவர்களும் இந்த உலகத்தில் நல்லாட்சியை நிறுவுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2222

தற்போது நாம் வாழும் இந்தக் காலத்தில் உலகின் எந்தப் பகுதியிலும் கிலாபத் முறையில் ஆட்சி ஏதும் இல்லை.

கிலாஃபத் ஆட்சியை அமைக்கப் போகிறோம் எனக் கூறி மக்களை ஏமாற்றும் பொய்யர்கள் அதிக அளவில் பெருகியுள்ளனர். தமக்கென ஒரு கூட்டத்தைச் சேர்ப்பதற்காக அரசியல் ஆதாயம் கருதி இப்படி வாதிடுகிறார்கள். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed