கிரெடிட் கார்டு – ஓர் இஸ்லாமியப் பார்வை

//கிரெடிட் கார்டு என்றால் என்ன?//

வங்கிகளை நடத்தும் நிறுவனங்களிடமிருந்து நாம் க்ரெடிட்காட் எனும் இந்த எலக்ட்ரானிக் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டால் சில கடைகளிலும் சில ஆன்லைன் வர்த்தக இடங்களிலும் கடனுக்கு பொருட்களை வாங்கிக்கொள்ள இயலும்.

சில சேவைகளையும் கடனுக்கு பெற்றுக்கொள்ள இயலும். நமக்கு இந்த அட்டையை விநியோகித்த அந்த வங்கி எனும் நிறுவனம் நாம் பொருள் வாங்கிய கடைகளுக்கு அந்த பணத்தை செலுத்திவிடுவார்கள்.

நாம் இவ்வங்கிகளுக்கு அப்பணத்தை ஒரு குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்திவிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்த இயலாவிட்டால் அசலுடன் சேர்த்து தாமதித்த நாட்களுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும். இதுவே க்ரெடிட்காட் ஆகும்.

க்ரெடிட்காட் வாங்கும் முன்னர் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும். அதில் தவணைக்குள் செலுத்தாவிட்டால் அசலுடன் சேர்த்து வட்டியையும் செலுத்துவேன் எனும் நிபந்தனையையும் ஏற்றால்தான் க்ரெடிட்காட் கொடுப்பார்கள்.

//நமக்கு கடன் தரவேண்டிய தேவை வங்கி நிறுவனத்திற்கு என்ன?//

இதுவே நாம் அடிப்படையில் சிந்திக்கவேண்டிய கேள்வியாகும். *அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்* எனும் குர்ஆன் வசனத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் நமக்கு கடன் தருவதில்லை. மாறாக அவர்களுக்கு லாபம் கிடக்கவே அவர்கள் நமக்கு கடன் தருகிறார்கள்.

//கடன் தருவதில் அவர்களுக்கு என்ன லாபம்?//

கடன் தருவதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. கடன் வாங்குவோர் செலுத்தும் வட்டிப்பணமே அவர்களுக்கு லாபம் ஆகும். குறித்த தவணைக்குள் எல்லோராலும் அசலை செலுத்திவிட இயலாது. அப்போது கிடைக்கும் வட்டிப்பணத்திற்காகவே இவர்கள் கடன் கொடுக்கிறார்கள்.

அத்துடன் நில்லாமல் இதில் பல கவர்ச்சியான ஏமாற்று வேலைகளும் உண்டு. பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கும் வங்கி நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து சில கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பார்கள்.

உடனடியாக பணத்தை கொடுத்து வாங்குவதைக் காட்டிலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் க்ரெடிட் காடை கொடுத்து பொருள் வாங்கினால் 10% தள்ளுபடி 20% தள்ளுபடி என்று விளம்பரம் செய்வார்கள். இக்கவர்ச்சி வலையில் விழுபவர்கள் ஏராளம்.

அந்தப் பொருளை வாங்கிய பிறகு தவணைக்குள் அசலை செலுத்தாவிட்டால் வட்டி கட்டவேண்டும்.

ஒரு வங்கி நிறுவனத்தில் சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டியை பொறுத்தவரை அதில் வட்டி எனும் ஹராமான பணம் இருந்தாலும் வாடிக்கையாளர் சேமித்துவைக்கும் பணத்தை அவர்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தையே வட்டியாக கொடுக்கிறார்கள். [இந்த வட்டியும் ஹராம் என்பதை நினைவில் கொள்க].

ஆனால் க்ரெடிட்காட் தொழிலை பொறுத்தவரை இதை ஒரே வங்கி நிறுவனம் நடத்தினாலும் இதற்கான கணக்குகள் முற்றிலும் தனியானது. இந்த தொழில் வட்டியை அடிப்படையாக கொண்ட வெறும் வட்டித் தொழிலன்றி வேறில்லை. கிரெடிட் கார்டு எனும் அட்டையை கையில் கொடுத்துவிட்டு அவனுக்கு கவர்ச்சியூட்டும் சலுகைகளை கண்ணில் காட்டி அவனை வட்டி கட்ட வைக்கும் அளவுக்கு பொருள் வாங்க வைப்பதே இந்த க்ரெடிட்காட் நிறுவனங்களின் யுக்தி

//தவணைக்குள் அசலை செலுத்தினால் வட்டியாகதல்லவா?//

ஆனால் தவணைக்குள் அசலை செலுத்த இயலும் என்று எந்த உறுதியும் இல்லை.

புகாரீ 4627. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறினான்:) ‘நிச்சயமாக அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்தமனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறேன் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 31:34)

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.“தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர.【குர்ஆன் 72:26-27)】

ஒருவர் நாளை என்ன ஈட்டப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது. கடன் வாங்கிய பிறகு ஒருவரிடமிருந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்துவிட்டால் அவர் வட்டிகட்டவேண்டிய நிலைமைக்கு ஆளாவார்.

அசலுக்கான தொகை கையிலிருந்தும் அசலைக் கட்ட இயலாதவாறு அல்லாஹ் நாடிவிட்டால் மறுநாள் வட்டியுடன் கட்டவேண்டிய நிலை ஏற்படும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கையில் வட்டி கட்டுவேன் என்று சம்மதித்து கிரெடிட் கார்டு எனும் பகிரங்க வட்டித் தொழிலுக்கு நாம் உடந்தையாகலாமா?

// வட்டி தருவேன் என்று உடன்படிக்கை செய்யலாமா?//

கிரெடிட் கார்டு என்றால் என்னவென்று பார்க்கும்போதே அதற்கான ஒப்பந்த விதிகளையும் பார்த்தோம். தவணைக்குள் கட்ட இயலாவிட்டால் வட்டி கட்டுவேன் என்பதே தவறான ஒப்பந்தம் ஆகும்.

புகாரீ 456. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என் உதவியை நாடினார். அதற்கு ‘நீ விரும்பினால் உன் எஜமானருக்குரியதை நானே கொடுத்து விடுகிறேன் (உன் மரணத்திற்குப் பின் வாரிசாவது போன்ற) உரிமை எனக்கு வர வேண்டும்’ என்று கூறினேன். ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம் ‘நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதைத்தந்து (நீங்கள் விடுதலை செய்து) கொள்ளலாம். ஆனால் உரிமை எங்களுக்கு வர வேண்டும்’ என்று கூறினார்கள். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது ‘நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு! விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு’ என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி ‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன வந்துவிட்டது?’ அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவர், நூறு முறை அந்த நிபந்தனையை வலியுறுத்தினாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை’ என்று கூறினார்கள்.

இது சொத்துரிமை தொடர்பான செய்தி என்றாலும் இஸ்லாத்திற்கு மாற்றமான ஒப்பந்தங்களில் நாம் உடன்படிக்கை செய்யக்கூடாது எனும் பொதுவான செய்தியும் இதில் உள்ளது. வட்டி எனும் பெரும்பாவத்திற்கு நாம் உடன்படிக்கை செய்வதே தவறாகும்.

ஓர் உதாரணம்.

ஒருவர் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய செல்கிறார். ஒவ்வொரு நாளும் 250 குப்பி பழச்சாறுகளை அவர் விற்க வேண்டும் என்றும் அவ்வாறு விற்காவிட்டால் அதனை ஈடு செய்வதற்காக நாளின் இறுதியில் 10 குப்பி மது விற்க வேண்டும் என்று அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்யச் சொல்கிறது. இது கோடைக் காலம் என்னால் எளிதாக 250 குப்பி பழச்சாறுகளை விற்க இயலும் என்ற நம்பிக்கையுடன் அவர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமா? அல்லது அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வே அறிவான் எனும் ஈமானிய உள்ளதுடன் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டுமா?

//தீமைக்கு துணை போதல்.//

வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
ஸஹீஹ் புகாரீ : 5347.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3258.

கிரெடிட் கார்டு எனும் தொழில் வரும் வட்டியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதை விளங்கிகொண்டோம்.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.【குர்ஆன் 2:276】

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.【குர்ஆன் 5:2】

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!【குர்ஆன் 4:140】

இத்தகைய மார்க்கத்தின் எச்சரிக்கைகள் க்ரெடிட்காடுக்கும் பொருந்தும். வட்டி எனும் பெரும்பாவத்தை தொழிலாக செய்பவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க கூடாது.

நூதன வட்டித்தொழிலாக இருக்கும் கிரடிட் காடை ஆதாரிப்பவர்களின் வாதங்கள்.

//சர்வீஸ் சார்ஜ்//

அதனை வட்டி என்று எடுக்கக்கூடாது. சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அதனை சர்வீஸ் சார்ஜ் என்று சொல்கிறார்கள். நமக்கு கடன் தருவதால் அதற்கான சேவைக் கட்டணமாகவே அதனை வசூலிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு ஆதரவாளர்கள் மேலுள்ளவாறு வாதிடுகின்றனர்

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.【குர்ஆன் 2:275】

அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையைப் பாருங்கள். வட்டிக்கு என்ன பெயர் வைத்து அழைத்தாலும் அது வட்டியே. இதல்லாது வேறு பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் வட்டி எனும் வரையறைக்குள் வரும் பல்வேறு பரிவர்த்தனைகளை நபி ஸல் அவர்கள் வட்டி என்று சொல்லி அவற்றை தடுத்துள்ளார்கள். சர்வீஸ் சார்ஜ் என்று சொன்னாலும் அது வட்டியே.

புகாரீ 2170. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!’

புகாரீ 2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.

முஸ்லிம் 3234. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், தோல் நீக்கப்பட்ட கோதுமையைத் தோல் நீக்கப்பட்ட கோதுமைக்கும், தோல் நீக்கப்படாத கோதுமையைத் தோல் நீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார். இ(ந்தப் பாவத்)தில் வாங்கிய வரும் கொடுத்தவரும் சமமானவர்கள் ஆவர்.

//சர்வீஸ் சார்ஜ் என்றால் என்ன?//

மேலும் சர்வீஸ் சார்ஜ் என்பது ஒரு பொருளுக்கு அல்லது ஒரு சேவைக்கு நாம் ஒருமுறை கொடுக்கும் சேவைக் கட்டணம் ஆகும். உதாரணமாக நேரடியாக அரசு அலுவலகத்திற்கு சென்று ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு பகரமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் அதை செய்கிறோம்.

உதா: PAN card வாங்குதல். இப்போது அந்த வேலையை நமக்கு அவர்கள் செய்வதற்காக சர்வீஸ் சார்ஜ் வாங்குவார்கள். இது ஒரே ஒரு முறை அவர்கள் செய்த வேலைக்காக வழங்கப்படும் கூலி ஆகும். ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்கிற பெயரில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வாங்குவதோ காலத்தைக் கணக்கிட்டு சதவிகித அடிப்படையில் வாங்குவதாகும். அதற்கு வேறு பெயர் வைத்தாலும் அது வட்டியே.

பணத்தை கையில் எடுத்துச் செல்வது பாதுகாப்பல்ல

“க்ரெடிட் காடில் பொருளை வாங்கிய மறுநாளே பணத்தை கட்டும் அளவுக்கு எங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் பெரிய தொகையை கையில் எடுத்து செல்ல இயலாத காரணத்தால் நாங்கள் க்ரெடிட் காடை பயன்படுத்துகிறோம். நாங்கள் தவணை முடிவதற்குள் பணத்தை கட்டி வட்டியில் இருந்து தப்பித்துக்கொள்வதால் குற்றவாளி ஆகமாட்டோம்”

//கிரெடிட் கார்டு ஆதரவாளர்களின் மற்றொரு வாதமிது.//

அதிகமான பணம் கையில் இருப்பவர்கள் அதுவும் க்ரெடிட்காட் பற்றி அறிந்தவர்களுக்கு டெபிட் காட் பற்றி தெரியாதா என்ன? தங்களிடம் இருக்கும் பணத்தை பயன்படுத்தி நேரடியாக டெபிட் காட் மூலம் பொருட்கள் வாங்கலாமே. இவர்கள் யாரை முட்டாள் ஆக்கப்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. போதாத குறைக்கு இன்டர்நெட் பேங்கிங் எனும் வசதியும் எப்போதோ வந்துவிட்டது.

ஒருவேளை டெபிட் காட் எனும் வசதியே உலகில் இல்லாமல் இருந்து பெரிய அளவு பணத்தை கையில் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டால் கூட க்ரெடிட்காட் எனும் இவ்வட்டித் தொழிலுக்கு நாம் ஒருக்காலும் துணை போகக்கூடாது.

பேச்சுக்காக தவணைக்குள் கட்டாவிட்டால் வட்டி கட்டுவேன் என்று ஒப்பந்தம் செய்வது மார்க்கத்தில் குற்றமாக ஆகாது

கிறித்தவர்களுடன் விவாதம் செய்யும் போது நீங்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபித்து விட்டால் அதை நாங்கள் வேதமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்கிறோம். இது பைபிளை ஆதரிப்பதாக ஆகாது.

தர்கா கட்ட ஆதாரத்தைக் காட்டினால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறுவதோ, எழுதுவதோ தர்காவை ஆதரித்ததாக ஆகாது.

*ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) பிள்ளை இருக்குமானால் முதலில் வணங்குபவனாக நான் இருப்பேன் என்று கூறுவீராக (43:81)* என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லவே இல்லை என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்த நிலையில் தான் இப்படி நபியைக் கூறச்சொல்கிறான்.

இஸ்லாத்தில் வட்டி தடுக்கப்பட்டதை அறிந்து, வட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ள நாம் குறிப்பிட்ட நாளில் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி செலுத்துவேன் என்று கூறுகிறோம். வட்டி செலுத்தும் நிலைக்குப் போக மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் தான் இப்படி கூறுகிறோம். வட்டி செலுத்துவோம் என்பதற்காக கூறவில்லை.

கிரெடிட் கார்டு ஆதரவாளர்கள் மேலுள்ளவாறும் வாதிடுகின்றனர், இது அடிப்படையற்ற வாதமாகும்.

பைபிள் இறைவேதம் இல்லை என்பது உறுதியாக தெரியும், பைபிளை எழுதியவர்கள் யார் யார் என்பது கிருத்தவர்களுக்கே தெரியும். தர்கா கட்ட ஆதாரம் இல்லை என்பது உறுதி, ஆதாரம் இல்லை என்பதால் தான் நாம் தர்காவை வழிபடாமல் இருக்கிறோம். அல்லாஹ்வுக்கு பிள்ளைகளும் கிடையாது. ஆனால் தவணைக்குள் கட்டி முடிக்க இயலும் என்பது உறுதியல்ல. அதை அல்லாஹ் மட்டுமே அறிவான். இதற்கான ஆதாரத்தை மேலே கொடுத்துள்ளோம். க்ரெடிட்காட் கடனை தவணைக்குள் கட்டி முடிப்போம் என்று எந்த உறுதியும் இல்லை. எதை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு உறுதி செய்து சொன்னார்களோ அதனை நாளை நடக்க இருக்கும் மறைவான விஷயங்களுடன் ஒப்பிடலாமா?

 

—பீர் முஹம்மத்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed