*நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில் இது சூதாட்டமா?*

*மேலும் டோர்னமென்ட் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் 26 அணிகளிடமும் தலா ரூ. 150 வீதம் போட்டி அமைப்பாளர்கள் வசூலிப்பார்கள். மொத்த ரூபாய் 3600ல் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2000, 2ம் இடத்தை அடைபவர்களுக்கு ரூ. 1000, போட்டியை நடத்துபவர்களுக்கு ரூ. 600 என்று வழங்குவார்கள். தோல்வியடையும் அணிகளுக்கு எதுவும் கிடையாது. இவ்வாறு விளையாடுவது கூடுமா?*

உடற்பயிற்சி, விளையாட்டு என்ற அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதில் தவறில்லை. எனினும் *நீங்கள் குறிப்பிடுவது போன்று வெற்றி பெறுபவர்களுக்கு, தோற்றவர்கள் பந்தைக் கொடுக்க வேண்டும் என்பது கண்டிப்பாக சூதாட்டம் என்ற வகையில் தான் சேரும்.* சூதாட்டம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயலாகும்.

*நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?*

அல்குர்ஆன் 5:90, 91

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பணம் வைத்துப் பந்தயம் கட்டி விளையாடும் போது, வெற்றி பெறுபவர்கள் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வதும், தோற்றவர்கள் நஷ்டம் அடைவதும் சூதாட்டம் எனப்படுகின்றது.

பணமாக இல்லாமல் கிரிக்கெட் பந்தாக இருந்தாலும் அது சூதாட்டம் தான். இதே போன்று டோர்னமெண்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முறையும் தெளிவான சூதாட்டமாகும்.

*வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுகள் வழங்கலாம். ஆனால் அந்தப் பரிசை போட்டி நடத்துபவர்கள் தங்களது சொந்தச் செலவிலோ, அல்லது மூன்றாவது நபரோ வழங்கினால் தவறில்லை.*

*பத்துப் பேர் சேர்ந்து பணம் போட்டு, முதலிடத்தைப் பிடிப்பவர்களுக்கு மட்டும் அந்தப் பணத்தைக் கொடுப்பதற்குப் பெயர் தான் சூதாட்டம்.*

கிரிக்கெட் என்பதால் இது விளையாட்டு, பரிசு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. இதையே சீட்டு விளையாட்டுக்குப் பொருத்திப் பார்த்தால் நீங்கள் குறிப்பிடும் முறையும் சூதாட்டம் தான் என்பதை விளங்க முடியும்.

*சீட்டு விளையாட்டில் ஐந்து பேர் பணம் கட்டி விளையாடுவார்கள். தோற்பவர்கள் வெளியேறிய பின் இறுதியில் வெற்றி பெறுபவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வார்.* இது சூதாட்டம் எனும் போது மேற்கண்ட கிரிக்கெட் போட்டியும் சூதாட்டம் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *