கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா❓

 மேற்கு திசை நோக்கி கால் நீட்டித் தூங்கலாமா❓

சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த திசை நோக்கி தூங்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்த திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? இதற்கு விளக்கம் தருமாறு கேட்கிறேன்.

மேற்கு திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். *கஅபதுல்லாஹ் மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர். இந்த நம்பிக்கை தவறானதாகும்.*

கஅபாவை நோக்கி கால் நீட்டக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கி தொழுதால் அது அழகிய முறையாக இருக்கும் என்பதற்காகத் தான் கஅபாவை நோக்கித் தொழுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

தொழுகையில் கிப்லாவை நாம் முன்னோக்க வேண்டும். தொழுகும் போது கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக்கூடாது.

அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத்திசை) சுவரில் (காறிஉமிழப்பட்டிருந்த) சளியைக்கண்டார்கள். உடனே பொடிக்கல்ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)னார்கள்.பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே(கிப்லாத் திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும்உமிழ வேண்டாம்..
தமது இடப்புறமோ தமது பாதத்தின்அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி: 408

மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கக்கூடாது. பின்னோக்கக்கூடாது.

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், “மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்)” என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணை வைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.) அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், “ஆம் (உண்மைதான்);

மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும்

  (மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால்துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,

மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும், கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்

ஆதாரம் : முஸ்லிம் 437

இந்த விதிமுறைகளை மட்டும் தான் கிப்லா விஷயத்தில் மார்க்கம் கூறுகின்றது. கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்று மார்க்கச் சட்டம் இருக்குமேயானால் அது குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவ்வாறு கால் நீட்டக்கூடாது என்று எந்த ஆதாரமும் கூறவில்லை. எனவே கிப்லாவை நோக்கி கால் நீட்டுவது தவறுகிடையாது.

தூங்கும் போது ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்க வேண்டும் என்றோ ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கக் கூடாது என்றோ நபி (ஸல்) அவர்கள் நமக்கு சட்டம் கூறவில்லை. நமக்கு உறங்க எந்த திசை வசதியாக இருக்கின்றதோ அந்த திசையை நோக்கி உறங்கிக்கொள்ளலாம்.

உறங்கும் முறையை பொறுத்தவரை உறங்குபவர் உறங்கத் துவங்கும் போது தனக்கு வலப்புறத்தை நோக்கி படுக்க வேண்டும்* என்பதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது நாம் எந்த திசையில் படுத்தாலும் நமக்கு வலது புறம் எத்திசை வருகின்றதோ அதை நோக்கி நாம் திரும்பிப் படுக்க வேண்டும்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள்.

பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்.

நீ அனுப்பிய உன் “நபி’யை நான் நம்பினேன்.” என்று பிராத்தித்துக்கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!

ஆதாரம்: புகாரி 247

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed