கற்பொழுக்கம் பெண்ணுக்கு மட்டுமா?

நவீன உலகில் இன்று விபச்சாரங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில முஸ்லிம்களும் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

ஆணுக்கும் வேண்டும் ஒழுக்கம்

விபச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் பெண்கள் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் பேண வேண்டும்; ஆடைகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என்று கண்டிக்கப்படுகிறார்கள். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று இந்தச் சமூகம் எண்ணுகிறது.

பாதையில் அரைகுறை ஆடையுடன் நடமாடும் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் இணைய தளங்களிலும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களை தேடிப் பார்த்து ரசிக்கின்றனர் ஆண்கள்.

பெண்கள் இருக்கும் இடங்களாகப் பார்த்துப் போவதும், பெண்களைத் தொடுவதும், சைட் அடிப்பதும், உரசிப் பார்ப்பதும், பெண்கள் அருகில் தானாகப் போய் அமர்வதும் இன்று வாடிக்கையாகி விட்டது. நவீன உலகின் சாதனையாகத் திகழும் செல்போன்கள் இன்று பெண்களை சீண்டிப் பார்க்கும் சாதனமாக மாறிவிட்டது. தவறுதலாகப் போன் வந்து, அதில் பெண்கள் பேசிவிட்டால் அவர்களிடம் வழிவதும், கொஞ்சிக் குலாவுவதும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் தொடர்கதையாக மாறிவிட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) போன்றவர்களின் ஒழுக்க வாழ்க்கையைப் படித்து ஒழுக்க சீலனாக மாற வேண்டிய ஆண்கள், இன்று சினிமா நாயகிகள், பாப் இசைப் பாடகிகள், அவர்களின் இடையழகா? அல்லது தொடையழகா? என்று ஆய்வு செய்ய டி.வி., இணைய தளங்களைத் தேடி ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கிறார்கள்.

இவ்வளவு தவறு செய்யும் ஆண்களை இந்தச் சமூகம் தண்டிக்கிறதா? அல்லது அவர்களைக் கேலி தான் பேசுகிறதா?

பாதைகள், கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வேலை செய்யும் இடங்கள் என இந்த ஆண்களின் சேட்டைகள் நீண்டு கொண்டே போகிறது. இவ்வாறு தவறு செய்யும் ஆண்களைக் கண்டு கொள்ளாத சமூகம், கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று எண்ணுகிறது.

கற்பு என்பது பொதுவானதே!

ஆனால் இஸ்லாம், கற்பு என்பது ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் பொதுவாகக் கூறுகிறது. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 24:30,31)

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

(அல்குர்ஆன் 24:2)

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (6243), முஸ்லிம் (5164)

பெண்கள் எப்படி கற்பொழுக்கத்துடன் இருக்க வேண்டுமோ அதைப் போன்று ஆண்களும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பெண்கள் தவறு செய்யும் போது தண்டிக்கச் சொல்லும் இஸ்லாம், ஆண்கள் தவறு செய்தால் அவர்களையும் தண்டிக்கச் சொல்கிறது.

கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்பதை விளங்கி, மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் எச்சரிக்கைகளை மனதில் நிறுத்தி, வாழ்ந்து மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed