கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா?

ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும்.

நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று சொன்னால் இது வடிகட்டிய பொய்யாகும். ஏனெனில் மறைவானவற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

நாளை என்ன நடக்கும்? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

திருக்குர்ஆன் 6:59

எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் எவராலும் அறிந்து கொள்ளவோ, சொல்லவோ முடியாது.

அவ்வாறு ஒருவன் சொல்வான் என்று நம்புவது இணைவைப்பாகும்.

தாங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையைப் பற்றி சொல்வது கிடையாது. மாறாக ஜோசியம் சொல்வதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். இதை ஒரு போதும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபியாகிய என்மீது அருளப்பட்டதை (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 9532

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர் : ஸஃபிய்யா

நூல் : முஸ்லிம் 4137

மேலும் ஒரு பெண் எப்போது கருத்தரித்தாள் என்பதை எப்படி அவளால் அறிந்து கொள்ள இயலும்? ஒரு மாதத்தில் ஒரே தடவை மட்டும் உடலுறவு வைத்திருந்தால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொண்ட பெண்ணால் கரு எந்த நாளில் உண்டானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கருவுற்ற நாளைச் சொன்னால் கண்டு பிடித்து தருவோம் என்று சொல்வது முட்டாள்தனமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் சொன்னபடி இல்லாமல் மாறிவிட்டால் நீங்கள் கருத்தரித்த நாளை தவறாகச் சொல்லி இருப்பீர்கள் அதனால் மாறிவிட்டது என்று தப்பித்துக் கொள்வதற்காக இப்படி கேட்கிறார்கள் போலும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed