கப்ர் வேதனை உண்டா?

சிலர் “கப்ர் (மண்ணறை) வாழ்க்கை என்பது கிடையாது” என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்குச் சான்றாக இவ்வசனங்களை (36:51, 52) காட்டுகின்றனர். 

“எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்? என்று கேட்டுக் கொண்டே தீயவர்கள் எழுவார்கள்” என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கைசேதம் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்ரில் – மண்ணறையில் – அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று எப்படிக் கூறுவார்கள்? எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும்.

எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும், கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை. கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.

தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு வாதத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களின் மற்றொரு வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்குப் பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோபலட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்குப் பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்குப் பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும், அல்லாஹ்வின் நீதியைச் சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் உண்மையுள்ளதா? இவர்களின் வாதம் தவறு என்றால் இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

“எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?” என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் தவறானதாகும். குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோஇச்சைப்படி புரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வராமல் போய் விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்குக் கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும்போது மனிதர்கள் மறந்து விடுவார்கள் என்பதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் வெளிப்படுத்தி “நான் உங்கள் இறைவனல்லவா?” என்று கேட்டான். அனைவரும் “ஆம்” என்றனர். இதை 7:172 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறு இறைவன் கேட்டதும், நாம் “ஆம்” எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும்போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம்; திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, இவ்வுலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும்போது “எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவன் யார்?” என்று மனிதன் கேள்வி கேட்பதை மட்டும் சான்றாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும்போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்து விடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்து விடுகின்றன. “எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று மனிதன் கேட்பதற்கு இது மற்றொரு காரணமாக அமைந்து விடுகிறது.

22:1,2 வசனத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத்தான் இவ்வசனம் அமைந்துள்ளது. அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத்தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மேலும் மறுமை நாளில் இறைமறுப்பாளர்கள் உண்மைக்கு மாற்றமான இன்னும் பல கூற்றுகளைக் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று நம்ப முடியாது.

மறுமையில் எழுப்பப்படும் இறைமறுப்பாளர்கள் உறக்கத்திலிருந்து விழித்ததாக மட்டும் கூற மாட்டார்கள். மாறாக, உலகில் அல்லது கப்ரில் ஒரு மணி நேரம் கூட தங்கியிருக்கவில்லை எனவும் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 30:55) அதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனம் கூறுகின்றது

இதைச் சான்றாகக் கொண்டு மனிதன் இறந்து ஒரு மணி நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று கூறுவார்களா? அல்லது அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாகக் குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் அறியாமையின் வெளிப்பாடு தான்.

“கப்ருடைய வேதனை” என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது. இதை அறியாத காரணத்தினால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

கியாமத் நாள் வருவதற்கு முன், ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் 40:45,46 வசனங்கள் கூறுகின்றன.

கியாமத் நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் அவர்கள் அன்றாடம் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

இது ஃபிர்அவ்ன் கூட்டத்துக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. அனைத்து மனிதர்களுக்கும் உள்ள நிலையாகும்.

அக்கிரமக்காரர்களின் உயிர்களை மலக்குகள் கைப்பற்றும்போது அவர்களை அடிப்பார்கள். மேலும், “சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” எனக் கூறுவார்கள் என்று 8:58, 47:27 வசனங்கள் கூறுகின்றன. “ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்குச் செய்யப்படுவது போல் இவர்களும் செய்யப்படுவார்கள் என்று 8:50-52 வசனங்கள் கூறுகின்றன. ஃபிர்அவ்னுடைய கூட்டத்துக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு என்று இதிலிருந்து அறியலாம்.

சிலர் அதிக காலமும், சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம் என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இதுதான் என்பது தெரிந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடையும் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், ஒருவன் செய்யும் அந்தப் பாவத்துக்கு இவன் வழிகாட்டியாக இருந்துள்ளான்.

எனவே, தான் செய்த தப்புக்கும் இவன் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னோடியாக இருந்தது. அவன்தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *