கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே?

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்குப் பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று கேட்டுள்ளீர்கள்.

பொதுவாக இதுதான் இறைவனின் ஏற்பாடு என்பது தெரிந்த பின்னர் அதில் நாம் கேள்வி கேட்கக் கூடாது. எனினும் இதற்கான விளக்கம் ஹதீஸ்களில் உள்ளது.

உலகில் ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர் தான் முதன் முதலாகக் கொலை செய்து (கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி 3335

நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். தனக்குப் பின்னுள்ளவர்கள் அப்பாவத்தைச் செய்வதற்கு கெட்ட முன்மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அந்தப் பாவங்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான்.

எனவே இவன், தான் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னோடியாக இருந்தது. அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது சரியானது தான் என்பதை விளங்கலாம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed