கப்ருகள் மீது கட்டடம் எழுப்பலாமா ?

ஒருவரை அடக்கம் செய்த இடத்தை சிமெண்ட் போன்ற பொருட்களால் கட்டக் கூடாது என்றால் அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி தர்கா எனும் கட்டடம் கட்டுவது கூடவே கூடாது என்பது உறுதியாகிறது.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான வார்த்தைகளாலும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதை தர்காவை கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்” எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

 

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன். ஏனெனில் நபி இப்ராஹீமை தன் உற்ற தோழராக அல்லாஹ் ஆக்கியதைப் போல என்னையும் ஆக்கிக் கொண்டான். (உண்மையாக) நான் என் சமுதாயத்தவர்களிலிருந்து ஒரு உற்ற தோழரை ஆக்குபவனாக இருந்தால் அபூபக்ரையே என் உற்ற தோழராக ஆக்கியிருப்பேன். முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 827

 

கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி)

நூல்: அஹ்மத் 1602

யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது கூறினார்கள். இதை அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், இவ்வாறு யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்த செயலைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்யாதிருந்தால் அவர்களின் மண்ணறையை வீட்டுக்கு வெளியில் (பகிரங்கமாக) ஆக்கியிருப்பார்கள். மேலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டுவிடுமோ என நபியவர்கள் அஞ்சினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4441

இந்தக் கருத்தை புகாரி 435, 3453, 4443, 5815 1330, 1390, ஆகிய ஹதீஸ்களும் கூறுகின்றன.

 

அடக்கத்தலங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கியவர்களும், எவர்கள் வாழும் போது கியாமத் நாள் வருமோ அவர்களும் தான் மனிதர்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூது (ரலி)

நூல் : இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை மஸ்ஜித்களாக  தர்காக்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 437

யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, 1390, 4441, முஸ்லிம் – 921, 922, 923, 924, 92, அபூதாவூத் – 3227, நஸாயீ – 703, 2046, 2047, முஅத்தா – 414, 1583, தாரமி – 1403

அஹ்மத் – 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363

இப்னு ஹிப்பான் – 2326, 2327, 3182, 6619

நஸாயீயின் குப்ரா – 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093

பைஹகீ – 7010, 7011, 11520, 18530

அபூயஃலா – 5844

தப்ரானி (கபீர்) – 393-411, 4907

இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

 

‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி)

நூல்: முஸ்லிம் 827

இந்த நபிமொழிகளை ஒன்றுக்குப் பல முறை வாசியுங்கள்.

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் நபிமார்களாவர். இதில் ஷியாக்களைத் தவிர யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நபிமார்கள் தான் மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள்; அவர்களின் தகுதியை யாரும் அடைய முடியாது என்று முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும் ஒப்புக் கொள்கின்றனர்.

நபிமார்கள் மிகச் சிறந்தவர்கள் என்பதால் அவர்களை மதித்து முந்தைய சமுதாயத்தினர் அவர்களது அடக்கத்தலங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக ஆக்கினார்கள். இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு தர்க்காக்கள் கட்டுவோர் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் என்றும், இதை நான் தடுக்கிறேன் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வளவு கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு ஒரு முஸ்லிம் தர்காக்களை நியாயப்படுத்த முடியுமா?

மரணிப்பதற்கு ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில், நோயின் வேதனை கடுமையாகி அவதிப்பட்ட நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த எச்சரிக்கையைச் செய்கிறார்கள். தனது மரணத்துக்குப்பின் தனது சமுதாயம் தனக்கு தர்கா கட்டிவிடக் கூடாது என்று அஞ்சி இவ்வாறு எச்சரித்தார்கள்.

தர்கா கட்டுவது ஒருவர் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும், அவர்களை நாம் மதிப்பதன் அடையாளமாகவும் ஆகாது என்பது இதிலிருந்து தெரிகிறது.

நாம் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்துக்காக கூட தர்கா கட்டக் கூடாது என்றால் அவர்களின் தகுதிக்கு அருகில் கூட நெருங்க முடியாதவர்களுக்கு தர்கா கட்டுவது எப்படி நியாயமாகும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த எச்சரிக்கையை ஏன் செய்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

قَالَتْ عَائِشَةُ: «لَوْلاَ ذَلِكَ لَأُبْرِزَ قَبْرُهُ خَشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا»

நபியவர்கள் இவ்வாறு எச்சரித்து இருக்காவிட்டால் அவர்களின் அடக்கத்தலம் வீட்டுக்கு வெளியே கொண்டு வரப்பட்டு இருக்கும். தனது அடக்கத்தலம் தர்காவாக ஆக்கப்பட்டு விடும் என்று நபியவர்கள் அஞ்சினார்கள் என்பதுதான் ஆயிஷா (ரலி) கூறிய காரணம். இந்தக் காரணத்துக்காகவே தர்கா கட்டிய யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்று நபியவர்கள் எச்சரித்தனர்.

நல்லடியார்களில் நபிமார்கள் தான் முதலிடத்தில் உள்ளவர்கள். மற்றவர்களை நல்லடியார்கள் என்று நாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. நம்மால் நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்கள் மறுமையில் கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் தான் என்பதில் ஐயமில்லை.

நல்லடியார்கள் என்று உறுதி செய்யப்பட்ட நபிமார்களுக்குக் கூட தர்காக்கள் கட்டக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டலாம்?

சாதாரண மனிதர்களின் கப்ருகளைக் கட்டக் கூடாது; சாதாரண மனிதர்களுக்கு தர்கா கட்டக் கூடாது. மகான்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு என்று சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸ்கள் சாதாரண மனிதர்களுக்கு தர்கா கட்டுவதைப் பற்றிப் பேசவில்லை. அல்லாஹ்வின் நேசர்கள் என்று உறுதி செய்யப்பட்ட நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிமார்களுக்கு தர்கா கட்டுவதைப் பற்றியே பேசுகிறது. அதுதான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே நல்லடியார்கள் என்பதற்காக தர்கா கட்டுவது தான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

مسند أحمد بن حنبل (2/ 246)

7352 – حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان عن حمزة بن المغيرة عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم : اللهم لا تجعل قبرى وثنا لعن الله قوما اتخذوا قبور أنبيائهم مساجد – تعليق شعيب الأرنؤوط : إسناده قوي

இறைவா! எனது அடக்கத்தலத்தை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்காதே! தமது நபிமார்களின் அடக்கத்தலங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிய சமுதாயத்தினரை அல்லாஹ் சபித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத்

سنن أبي داود (1/ 622)

2042 – حدثنا أحمد بن صالح قال قرأت على عبد الله بن نافع قال أخبرني ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم ” لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم ” . قال الشيخ الألباني : صحيح

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 1746

நபிமார்களுக்கு தர்கா கட்டியவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்று எச்சரிக்கை விட்டதுடன் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்றும் அல்லாஹ்விடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அடக்கத்தலத்தைக் கட்டுவதும் அதன் மேல் தர்கா கட்டுவதும் எவ்வளவு பெரிய பாவம் என்று இதிலிருந்து நாம் அறியலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed