கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்..…பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்….. (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 893

வீட்டுக்குப் பொறுப்பாளி என்றால் வீட்டிலுள்ள எல்லாவற்றுக்கும் என்று பொருள். கணவரின் தாய், தந்தை, சகோதரிகள், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் குறிக்கும்.

அதேபோன்று குடும்பத்தின் வேலைகளை யெல்லாம் மனைவிமார்கள் சுயவிருப்பத்துடன் தன் கடமை என எண்ணி, முழுமனதுடன் வேலை பார்க்க வேண்டும். நபியின் மகள் பாத்திமாவின் நிலையைப் பாருங்கள். இன்றைய காலத்தில் மனிதர்களின் பல வேலைகளை மிஷின்தான் செய்கிறது. ஆனால் நபியவர்கள் காலத்தில் கால், கைகள் வலிக்கும் அளவுக்கு வேலைகளைப் பார்ததுள்ளனர். அதற்காகத் தனது மருமகனை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மகளிடம் அப்படியொன்றும் செய்யத் தேவையில்லை என்றெல்லாம் சொல்லவில்லை.

குடும்பம் என்றால் அதுவெல்லாம் இருக்கத் தான் செய்யும். எனவே பொறுப்புக்களை உணர்ந்து மனைவிமார்கள் வீடுகளில் வேலை செய்து பழகவேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம்.

(நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், “நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-5361, 3113, 3705

மேலும் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியேறி சம்பாதிக்கும் நிலை நம்மிடம் இல்லை. கணவன் உழைத்து வரவில்லையெனில் நாமும் நமது பிள்ளைகளும் நல்ல உணவை உட்கொள்ள முடியாது. நல்ல ஆடைகளை அணியமுடியாது. தேவையான காரியங்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து வீட்டு வேலைகளை மனைவிமார்கள் செய்யவேண்டும்.

அந்தக் காலத்துடன் நம்மை ஒப்பிடவே கூடாது. ஏனெனில் வீட்டு வேலைகளில் அதிகமானதை மிஷின்கள் மூலமாகத்தான் செய்கிறோம். ஆனாலும் நமக்கு அலுப்பாகத் தெரிகிறது. அப்படி நாம் நினைக்கக் கூடாது. இது நம் கடமைதான் என்றெண்ணி மனைவிமார்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும்.

கணவனின் குடும்பத்தார்

குடும்பவியலில் பெண்கள் கணவனுக்குச் செய்யும் கடமைகள் மட்டுமின்றி வீட்டிலுள்ள முக்கியமான பணிகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடமைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனைவிமார்கள், கணவனின் பொறுப்பில் உள்ளவர்களையும் உடன் பிறந்தவர்களையும் முறையாகக் கவனிக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மார்க்கத்தில் உள்ள முக்கிய அம்சம் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள்.  நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். ‘‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள்.

நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீர் மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். ‘கன்னியையா? கன்னி கழிந்த பெண்ணையா?’ என்று கேட்டார்கள். ‘கன்னி கழிந்த பெண்ணைத் தான்!’ என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே!’’ என்று கூறினார்கள்.

நான்,‘‘எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும்என்று விரும்பினேன்!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்போது ஊருக்குச் செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 2097, 5367

மற்றொரு அறிவிப்பில் ஜாபிர்  அவர்கள் கூறுகிறார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டுவிட்டு உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலைவாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)’’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-4052

தனது தங்கைமார்களுக்கு சேவை செய்வதற்காகவே திருமணம் செய்ததாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் அதை, சரியான வேலையைச் செய்ததாகப் பாராட்டினார்கள்.

உங்களது தங்கைமார்களுக்குப் பணிவிடை செய்வது மனைவிக்குத் தேவையொன்றுமில்லை  என்றோ, உனக்கு மட்டும்தான் பணிவிடை செய்வது கடமை, உன் குடும்பத்தாருக்கெல்லாம் கிடையாது என்றோ நபியவர்கள் சொல்லாமல், பாராட்டத்தான் செய்தார்கள்.

அப்படியெனில் இந்தச் செய்தியிலிருந்து விளங்குவது என்னவெனில், ஒரு ஆண் திருமணம் செய்தாலும் அவர் யாரையெல்லாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறாரோ அவர்களையெல்லாம் கவனிப்பதும் பெண்களின் கடமைகளில் ஒன்று என்பதை அறியலாம்.

இப்படியெல்லாம் கவனிப்பதுதான் ஒரு பெண் தனது கணவரின் விருப்பதைப் பெறுவதற்கான முக்கியக் காரணமாக அமையும். மனைவி கணவனின் பொறுப்பிலுள்ளவர்களைக் கவனிக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தில் செயல்படத் துவங்கினால், ஆணின் முக்கியப் பொறுப்பான பொருளீட்டும் பணியில் தொய்வேற்படும். அவன் தன் பொறுப்பிலுள்ளவர்களை முழு நேரமாக உட்கார்ந்து கவனிக்கும் நிலை ஏற்பட்டால் நிச்சயம் அது ஒரு பெண்ணிற்கு நஷ்டமாகத்தான் அமையும்.

எனவே மனைவி தன் பொறுப்பில் இருப்பவர்களைச் சரியாகக் கவனிப்பாள் என்ற அம்சம் தான் ஆணின் பொருளீட்டும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஆகவே பெண்கள் கணவனின் பொறுப்பிலுள்ளவர்களைக் கவனித்துக் கொள்வதும் நம்முடைய கடமையென்று செயலாற்றும் குடும்பங்கள் தான் நிம்மதியாக மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

எனவே நம்முடைய சுகபோகத்தை  மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நமது குடும்பத்தின் நிலையைக் கவனித்து, நம் குடும்பத்தினைக் கவனிப்பதற்கு இன்னின்ன குணநலன்களைக் கொண்ட பெண்ணாக இருந்தால் சரியாக இருக்கும், இன்னின்ன வேலைகள் தெரிந்த பெண்மணி தான் நமக்கு மனைவியாக வேண்டும் என்று தேர்வு செய்து திருமணம் முடிப்பதில் எந்தத் தவறுமில்லை.

அதேபோன்று தன் தாயாரைக் கவனிக்க வேண்டும், தங்கைமார்களைக் கவனிக்க வேண்டும் என்பது போன்ற நோக்கங்களுக்காகவும் திருமணத்தை முடிக்கலாம் என்று விளங்குகிறது. இதுவெல்லாம் திருமணம் பேசுகிற போது ஒப்பந்த உடன்படிக்கையிலேயே சேர்ந்து விடுகிறது.

அழகிய முறையில் குடும்பம் நடத்துங்கள் என்று சொன்னால், கணவர்களுக்கு எந்த மாதிரியான தேவைகள் இருந்தாலும் அத்தகைய காரியங்களில் மனைவிமார்கள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்; மனைவிமார்களுக்கு என்னவெல்லாம் தேவைகள் இருக்கிறதோ அவற்றிலெல்லாம் கணவன்மார்கள் ஒத்துழைப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதற்குத்தான் அழகான இல்லறம் என்றுபொருள்.

ஆனால் இவற்றையெல்லாம் சில பெண்கள் மறுத்து, கணவரின் தங்கை, அக்காமார்களுக்குப் பணிவிடைசெய்யச் சொன்னால், கணவனை எடுத்தெறிந்து பேசுவதைப் பார்க்கிறோம். உங்களுக்கு மனைவியா? அல்லது உங்களது தங்கைமார்களுக்கு மனைவியா? உங்கள் தங்கை எனக்கு என்ன செய்தாள்? நான் அவளுக்குப் பணிவிடை செய்வதற்கு? என்றெல்லாம் பேசுகிற பெண்களைச் சமூகத்தில் இன்றைக்கு ஏராளமாகப் பார்க்கிறோம்.

இதுபோன்ற மனநிலையை மாற்றி தனது கணவனின் பொறுப்பிலுள்ளவர்களுக்காகவும் நாம் பாடுபடுவது மார்க்கம் வலியுறுத்துகிற கடமை என்று நடப்பார்களானால் அத்தகைய பெண்களின் இல்லறமும் நன்றாக இருக்கும். மார்க்கக் கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும் என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று இன்னொரு சான்றையும் காணமுடிகிறது.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை ஸுபைர் பின்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்து பத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது.

என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து நானே பேரீச்சங்கொட்டைகளை (ப்பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக “இஃக், இஃக்‘’ என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்.

நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து “(வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக் கொள்வதற்காக (த்தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்’’ என்று கூறினேன். அதற்கு என்கணவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது’’ என்று கூறினார்.

(இவ்வாறாக வீட்டுப்பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல்இருந்தது.

நூல்: புகாரி 5224

இந்த ஹதீஸில் பல விஷயங்கள் இருக்கின்றன. அபூபக்ர் மகள் அஸ்மா (ரலி) செல்வச்செழிப்போடு வாழ்ந்த பெண்மணி. மக்காவிலும் சரி; மதீனாவிலும் சரி. இதனை நபியவர்களே கூடச் சொல்கிறார்கள். எந்த மனிதரின் பொருளை விடவும் அபூபக்கரின் பொருள் அளவுக்கு எனக்குப் பயன்பட்டதில்லை என்று நபியவர்கள் சொல்லும் அளவுக்கு அபூபக்கர் பெரிய செல்வந்தராகத் தான் இருந்துள்ளார்கள். (பார்க்க: புகாரி-467)

அதே போன்று ஊருக்கு வெளியில் பெரிய அளவில் வீடெல்லாம் கட்டியிருந்தார்கள். பெரிய வியாபாரியாகவும் இருந்தார்கள். நபியவர்கள் இறக்கும் போதுகூட அபூபக்கர் அவர்கள் மதீனாவில் இல்லை. வியாபாரத்திற்குத் தான் போயிருந்தார்கள். இதனால் அபூபக்கர் வசதி வாய்ப்புள்ளவர் என்பதில் இருவேறு கருத்தில்லை.

இப்படியிருப்பவர்கள் பெரும்பாலும் தம் மகளை பணக்கார மாப்பிள்ளையைத்தான் பார்த்துக் கட்டிக் கொடுப்பார்கள். நம் பிள்ளை நன்றாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் பார்ப்பார்கள். மார்க்கத்தைப் பேண மாட்டார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) அப்படிப் பார்க்கவில்லை. நல்ல மனிதராகவும் மனைவியை நல்லமுறையில் வைத்திருப்பாரா? என்று தான் பார்த்தார்கள். பொருளாதாரத்தைப் பெரியளவுக்குக் கணக்குப் பார்த்து மாப்பிள்ளையை அபூபக்கர் (ரலி) பார்க்கவில்லை. தீனைப் பேணுகிறவரா? என்பது தான் முக்கியமான அம்சம்.

பெரிய செல்வந்தர், மூட்டை தூக்கி உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்குத் தங்களது பெண்ணைக் கொடுக்க மாட்டார்கள். உழைப்பாளியாக இருந்து, ஒழுக்கம், வணக்க வழிபாடுகளைச் செவ்வையாகச் செய்வது, மார்க்கக் கடமைகளைச் சரியாகச் செய்பவர் என்பதைத்தான் நல்ல மாப்பிள்ளைக்கான அளவுகோலாக அபூபக்கர் (ரலி) பார்த்தார்கள்.

மேலும் அஸ்மா (ரலி) படும் கஷ்டங்களையெல்லாம் நபியவர்கள் நேரடியாகப் பார்த்த பிறகும், ஸுபைர் (ரலி)யைக் கண்டிக்கவில்லை. இப்படியெல்லாம் பெண்கள் வேலை செய்வது பெண்களுக்கு எதிரான கொடுமை என்றால், ஸுபைர் (ரலி)யைக் கூப்பிட்டு கண்டித்திருப்பார்கள். பல நேரங்களில் மிம்பரில் எச்சரித்ததைப் போன்று பொதுவான எச்சரிக்கையையும் செய்திருப்பார்கள். அப்படியான ஒரு செய்தியையும் ஹதீஸ்களில் காணமுடியவில்லை என்பதே இது போன்று கணவர் வீட்டிலுள்ள வேலைகளையும் கணவனின் பொறுப்பிலுள்ளளவர்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளையும் ஒரு பெண் செய்வது கடமை என்பதைப் புரியலாம்.

அஸ்மாவின் கஷ்டத்தைப் பார்த்த நபியவர்கள் அவரது கணவர் ஸுபைரைக் கண்டிக்காமல், அஸ்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அபூபக்கர் தனது மகள் அஸ்மாவுக்கு ஒரு அடிமையைக் கொடுத்தது கூட, அபூபக்கராகக் கொடுக்கவில்லை. நபியவர்கள்தான் அஸ்மாவுக்கு உதவி செய்யும் பொருட்டு கொடுக்கச் சொன்னதாகவும் அல்லது கொடுத்ததாகவும் மற்றொரு அறிவிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவர் வீட்டில் படும் கஷ்டத்திற்குப் பகரமாக வேறொரு வகையில் உதவினார்களே தவிர, கணவர் வீட்டில் வேலை பார்ப்பது தவறு என்று சொல்லவில்லை. ஆக, பெண்கள் கணவர் வீட்டு சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு நடந்து கொள்வதே சரியான குடும்ப வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed