கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை
பெண்கள் மார்க்கத்தை பேணுகிறோம் என்ற எண்ணத்தில் மார்க்கம் கட்டளையிடாத பல காரியங்களை செய்கின்றன. கடமையான குளிப்பை நிறைவேற்ற நிய்யத் அவசியம் அதில் நவைத்து அனிஃதஸல குஸ்லன் மினல் ஹைலி வதஹாரத்தன் லில் பதனி வ இஸ்திஹ்பாபன் லிஸ்ஸலாத்தி என்று கூறி குளித்தால் தான் குளிப்பு நிறைவேறும் என்றும் எண்ணுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.
குளிக்கும் போது சில வாசகங்களை கூற வேண்டும் என்றும் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் என்றும் பலவிதமான நடைமுறைகள் சில ஊர்களில் உள்ளன. இதற்கும் நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
முதலில் இரு கைகளைக் கழுவிய பின்னர் மர்மஸ்தானத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு உளு செய்ய வேண்டும்.
உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன்.
அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்;
பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள்.
பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள்.
பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்.
பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்.
பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
நூல் : புகாரி (259)
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளுயலைக்) குளிக்கும்போது (முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
நூல் : புகாரி (260)
அஸ்மா பின்த் ஷகல் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (552)
சடைபோட்டுள்ள பெண்கள்
சடையை அவிழ்க்க வேண்டியதில்லை
சடைபோட்டுள்ள பெண்மணிகள் அதை அவிழ்த்துத் தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அல்லாஹ்வின் தூதரே நான் அதிகம் சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு தேவையில்லை. உன் தலைக்கு இரு கையளவு தண்ணீரை எடுத்து மூன்று முறை உன் தலையில் ஊற்றிக் கொள். பின்னர் உன் (உடல்) மீது ஊற்றிக்கொள். நீ தூய்மையடைந்து விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : முஸ்லிம் (497)
நிர்வாணமாக குளிக்கக்கூடாது
ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : அபூதாவுத் (3501)