கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்

ஒருவர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு பண வசதி உள்ள நிலையில் கடன்கொடுத்தவர் காணவில்லை, தேடியும் பிரயோஜனமில்லை என்றால் அந்த கடன் தொகையை கடன் பெற்றுக்கொண்டவர் கடன் கொடுத்தவர் சார்பாக அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்துவிடலாம் என்று மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்தார் அது தவறு என்றும் காணாமல் போன கூலியாளின் கொடுக்கப்பட வேண்டிய கூலித்தொகையையே அமானிதமாக பாதுகாத்து அதை மூலதனமாக்கி அனைத்தையும் அந்த கூலியாள் திரும்ப வந்தபோது கொடுத்த ஹதீஸ் (புகாரி 2272) உள்ளது எனவும் மார்க்க அறிஞருடைய கருத்து தவறு என்றும் பதில் கொடுத்தேன் ஆனால் அந்த மார்க்க அறிஞர் இவ்வாறு கேள்வி கேட்கிறார் ”நம்பிக்கை இழந்த நிலையில், மரணித்திருப்பாரோ என்ற சந்தேகம் வலுப் பெறும் நிலையில் என்ன செய்வது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள்” என்கிறார் சகோதரரே! சிராஜ் ஆகிய நான் மார்க்க அறிஞன் அல்ல எனவே எனக்கு இதைப்பற்றிய மார்க்க சிந்தனையை கொடுப்பீர்களா? அல்லாஹ்வுக்காக பதில் கொடுக்கவும் குறிப்பு- நான் தங்களிம் நியாயமான கேள்விகளை கேட்கிறேன் ஆனால் எனக்கு நினைவுக்கு எட்டியவரை தாங்கள் ஒருமுறை கூட பதில் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன்! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!

ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். இதில் மற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. ஆனால் நாம் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தும் கொடுப்பதற்கான சூழ்நிலை இல்லாத போது என்ன செய்வது என்பதில் தான் உங்களுக்குக் குழப்பம் உள்ளது.

நெருக்கடியான நேரத்தில் நிர்பந்தமான நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்று இஸ்லாம் கூறுவதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்பந்தமான் நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்பது இறைவன் தொடர்பான விஷயங்களைப் பற்றியதாகும். நிர்பந்தமான் நிலையில் நாம் ஒரு கட்டளையை மீறி விட்டால் நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான்.

ஆனால் மனிதனின் உரிமை தொடர்பான எந்த விஷயத்தையும் அல்லாஹ் மன்னிப்பதில்லை. சம்மந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லது அந்த மனிதனுக்கு நியாயம் வழங்காத வரை அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.

ஒரு காரியம் நிறைவேறினால் ஆயிரம் ரூபாய் தர்மம் செய்வேன் என்று நாம் நேர்ச்சை செய்தால் அதன் பின்னர் அதைச் செலவிட முடியாத வறுமை ஏற்பட்டு அதை நிறை வேற்ற முடியாவிட்டால் அல்லாஹ் அதை மன்னிப்பான்.

ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு அதைக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமை ஏற்பட்டால் அதுவும் நிர்பந்தம் தான். ஆனால் கடன் கொடுத்தவன் நாளை மறுமையில் நியாயம் கேட்கும் போது அவனிடம் வசதி இல்லாததால் அவன் தரவில்லை என்று அல்லாஹ் பதில் தரமாட்டான். அவ்வாறு பதிலளித்தால் அது பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கும் நீதியாக அமையாது.

நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவன் மறுமையில் நியாயம் கேட்கும் போது நம்முடைய நல்லறங்கள் அதற்கு ஈடாக அவனுக்கு மாற்றப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நாம் யாரிடம் கடன் வாங்கினோமோ அவர் சார்பில் அதைத் தர்மம் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். அவர் திருப்பப் பெறுவதற்காகத் தான் கடன் தந்தார். அதை நீங்கள் தர்மம் செய்வது அவருடைய உரிமையைப் பறிப்பதாக ஆகும்.

இந்த அத்தனை அடிப்படையையும் கவனத்தில் கொண்டு தான் இதற்கான தீர்வை நாம் காண வேண்டும். நாம் வாங்கிய கடனுக்காக நம்முடைய நன்மைகள பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டவ்னுக்குக் கொடுக்கப்படும் என்பதை விளங்கி அதற்கேற்றவாறு உபரியான வணக்கங்களை அதிகப்படுத்தைக் கொள்வதன் மூலமும் அவர் சார்பாக இல்லாமல் நம் சார்பில் அந்தத் தொகையை தர்மம் செய்வதன் மூலமும் இதை ஈடு செய்ய முடியும். அதனால் தான் கடமையான் வணக்கங்கள் மட்டுமிண்றி மேலதிகமான வணக்கங்களுக்கும் மார்க்கத்தில் ஆர்வம் ஊட்டப்பட்டுளளது.

பாதிக்கப்பட்டவனுக்காக நம்முடைய நன்மைகள மாற்றப்பட்டாலும் நரகம் செல்லும் நிலை ஏற்படாது. நாம் உபரியாகச் செய்துள்ள வணக்கங்களில் சில அடுத்தவ்னுக்குப் போய் விட்டாலும் நம்முடைய கட்மையான் வணக்கங்கள் நமக்கு மிச்சமாகி விடும்.

உங்களிடம் வாதிட்ட அந்த அறிஞர் உங்களிடம் ஆதாரம் கேட்பது முறையல்ல. அதில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவரிடம் வாங்கிய கடனை அவருக்கு கொடுக்க வேண்டும் என்பது அவரும் ஒப்புக் கொண்ட உண்மை. அந்த விதியில் விலக்கு உள்ளது கூறும் அவர் தான் ஆதாரம் கேட்க வேண்டும். மேலும் என் பணத்தைத் தான் நான் தர்மம் செய்ய உரிமை உண்டு, பிறர் பணத்தில் எனக்கு உரிமை இல்லை என்பதும் அவ்ரும் ஒப்புக் கொண்ட பொதுவான விதி.

பொதுவான இந்த விதியை யார் உடைக்கிறாரோ அவர் தான் ஆதாரம் காட்ட வேண்டும் உங்களிடம் அவர் ஆதாரம் கேட்பது அறிவுடமை அல்ல.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *