ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கின்ற போது….

நபிகளார் காட்டிய ஏகத்துவக் கொள்கையை ஏற்று, அதன் வழிப்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஊரில் எதிர்ப்பு, ஊர் நீக்கம் ஆகியவற்றுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணற்ற துன்பங்கள் இந்த உண்மையான கொள்கையை ஏற்றதால் ஏற்படுகின்றன. இந்தக் கொள்கையின் சிறப்பினை விளங்கி ஏற்று நடக்க முன்வரும் போது இது போன்ற துன்பங்களால் கொள்கையை விடுபவர்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

நபிகளார் அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்த போது மிகப் பெரிய துன்பங்களைச் சந்தித்துள்ளார்கள். அவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாம் சந்திக்கும் இவை மிகவும் அற்பமானதே!

சோதனை நிச்சயம்

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.

(அல்குர்ஆன் 29:1,2)

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

(அல்குர்ஆன் 2:214)

கேலி கிண்டல் செய்யப்படுவோம்

சொர்க்கத்திற்குச் செல்பவர்கள் இவ்வாறு சோதிக்கப்படும் நேரத்தில் நாம் பொறுமையை மேற்கொண்டு சொர்க்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைத் தூதர்களும் எவ்வாறு சோதிக்கப்பட்டார்கள் என்பதைப் பாருங்கள்.

(முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது.

(அல்குர்ஆன் 6:10)

(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப் படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

(அல்குர்ஆன் 6:33, 34)

ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்து, அதன் பக்கம் மக்களை அழைப்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகளைப் பற்றி இந்த வசனங்கள் பேசுகின்றன. மேலும் ஒரிறைக் கொள்கையை ஏற்று நடப்பவர்களுக்குக் கிடைக்கும் துன்பங்களுக்கு மருந்திடும் வசனங்களாகும்.

நபிகளார் இஸ்லாத்தை ஏற்ற ஆரம்ப காலத்தில் அன்றைய இணைவைப்பாளார்கள் கொடுத்த துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே! என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர். நபி (ஸல்) அவர்கள், சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க, மக்கள் ஆம். (நம்புவோம்); உங்கடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலத்தனர்.

நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கூறினான். அப்போது தான் அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…… என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர்  : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் :புகாரி (4770)

இவ்வளவு ஏச்சுப் பேச்சுக்களையும் கேட்ட நபிகளார் அவர்கள் கொண்ட கொள்கையை விட்டு விடாமல் அக்கொள்கையைத் தொடர்ந்து கூறி வந்தார்கள்.

ஊரைவிட்டும் சென்ற பிறகும் விடவில்லை

இணை வைப்பவர்களின் தொல்லைகள், நாளுக்கு நாள் அதிகமாக,  நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் மதீனா தப்பிச் சென்று விட்டார்கள் என்று அறிந்த இணை வைப்பாளர்கள் நபியவர்களைக் கொலை செய்பவர்களுக்கு அல்லது சிறை பிடித்து வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு ஒன்று அறிவித்தனர்.

நூல் : புகாரி 3905

இறைவனின் பேரருளால் இணை வைப்பாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மதீனா நகரத்திற்கு நபிகளார் வந்து சேர்ந்தார்கள். மிகப் பெரிய துன்பங்களில் ஆட்பட்டிருந்த நபிகளாருக்கு மதீனா வாழ்க்கை ஓர் அழகிய வாழ்க்கையாக மாறியது. மதீனாவில் இருந்த அன்ஸாரிகளின் பேராதரவு நபிகளாருக்குக் கிடைத்தது.

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே

குறுகிய நாட்களிலேயே மாபெரும் வளர்ச்சியை இஸ்லாம் பெற்று, எந்த ஊரிலிருந்து விரட்டப்பட்டார்களோ அதே ஊருக்கு சுமார் பத்தாயிரம் நபர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

நூல் : புகாரி 4276)

பயந்து, ஒளிந்து, மதீனா வந்த நபிகளார் அவர்கள், கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள். இணை வைப்பாளார்கள் பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்ந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 110:1-3)

ஓரிறைக் கொள்கையை ஏற்றுப் புதிதாக வந்த சகோதரர்கள், தங்கள் ஊர்களில், குடும்பத்தில் ஏற்படும் எதிர்ப்புகளைக் கண்டு கலக்கம் அடையாமல் கொள்கையில் உறுதியாக, பொறுமையாக இருந்தால் உங்களுக்கும் மதீனா வாழ்க்கை விரைவில் கிடைக்கும்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன் 33:21)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed